இலங்கையின் வடபகுதிக்கு சர்வதேச நாடுகளின் இராஜதந்திரிகள், அரசியல் பிரமுகர்கள் எவராவது பயணம் செய்வதாக முடிவு செய்து விட்டால், அவர்களின் நிகழ்ச்சி நிரலில் முல்லைத்தீவு என்றால், முதல் தெரிவு கேப்பாப்பிளவு நிலமும், யாழ்ப்பாணம் என்றால், வலிகாமம் கிழக்கு நிலமுமாக இருக்கும்.
இப்படி கொடுக்கப்படும் முக்கியத்துவத்துக்கு பலமாக, இரண்டு பெரும் காரணங்கள் இருக்கின்றன.
ஒன்று:
வடபுலத்து அரசியலில் பரவலாக பேசப்படும் அதீத இராணுவ படைக்குவிப்பும், அவர்களின் இருப்புக்காக (படையினரை தக்க வைப்பதற்காக) தமிழ் மக்களுக்கு உரித்துடைய நிலங்கள் (காணிகள்) ஆக்கிரமிக்கப்படுகின்றன என்பதற்கும், “நிகழ்கால சாட்சி”யாக இந்த நிலங்கள் இருப்பது.
இரண்டு:
வடக்கின் வேறு பல இடங்களில், இராணுவத்தினரால் தமிழ் மக்களுக்கு உரித்துடைய நிலங்கள் பாரியளவில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தாலும், ஆக்கிரமிக்கப்பட்ட அந்த நிலங்களுக்காக போராட்டங்கள் நடந்திருந்தாலும், அரசு மாற்று நிலங்களை கொடுத்ததும் அப்போராட்டங்கள் மூர்ச்சையிழந்து போனபோதும், “மாற்று நிலங்கள் வேண்டாம். தமக்கு தமது பூர்வீக நிலங்கள் மட்டுமே வேண்டும்” என்று, இப்போதும் கேப்பாப்பிளவு, வலிகாமம் கிழக்கு மக்கள் போராடிக்கொண்டிருப்பது.
இந்த இரண்டு பெரும் காரணங்களும், சமகால அரசியலில் தமிழர்களின் நிலபுல பிரச்சினையை உயிரோட்டமாக வைத்திருப்பதால் தான்,
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அம்மணி, இலங்கைக்கான தனது முதலாவது பயணத்தின் போது, முல்லைத்தீவின் கேப்பாப்பிளவு நிலத்தில் கால் பதித்ததும்,
பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன், இலங்கைக்கான தனது முதலாவது பயணத்தின் போது, யாழ்ப்பாணத்தின் வலிகாமம் கிழக்கு நிலத்தில் கால் பதித்ததும் ஆன சம்பவங்கள் ஈழத்தமிழர் வரலாற்றில் சாத்தியமாயிற்று.
“சிறீலங்கா அரச படைகளால், தமிழ் மக்களுக்கு உரித்துடைய பூர்வீக நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன. அதனால் தமிழ் மக்களுக்கு வாழ்விடப்பிரச்சினை உண்டு. இதுவொரு அடிப்படை மனித உரிமை மீறல் பிரச்சினையும் கூட. நிலம் தான் தமிழ் மக்களின் வாழ்வுரிமை. அந்த வாழ்வுரிமைக்கு இந்த நாட்டில் பெரும் சவால் விடுக்கப்பட்டுள்ளது” என்று,
தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பல்வேறு தரப்பினராலும், சிவில் சமுக, மனித உரிமை செயல்பாட்டாளர்களாலும் கோர்வையாக காவி கொண்டு செல்லப்படும் தகவல் பரிமாற்றத்தை (Statement & Database), சர்வதேச நாடுகளின் இராஜதந்திரிகள் உள்வாங்கிக்கொள்கிறார்கள் (கிரகிக்கிறார்கள்), அந்த நிலங்கள் பற்றிய, மக்கள் தொடர்பிலான புரிதலோடும் தெளிவு நிலையோடும் அவர்கள் இருக்கிறார்கள் (சிந்தனை செய்கிறார்கள்), என்பதற்கும் நவநீதம்பிள்ளையினதும், டேவிட் கெமரூனினதும் பயணங்கள் மிகச்சிறந்த எடுகோள்களாகும்.
2009ம் வருடம் அரச படைகளிடம், தமிழ் இனத்தின் முடிக்குரிய ஆட்சி நிலம் முற்றாக வீழ்ச்சி கண்டதன் பின்னரான சூழலில், தமிழ் மக்களின் வாழ்வுரிமை பிரச்சினையை, நிலபுல பிரச்சினையை அழுத்தமாக பதிவு செய்து, உலகத்தின் மொத்த கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்து விட்ட கேப்பாப்பிளவு நிலத்துக்கு, சர்வதேச அரசியலில் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது என்றால், உள்ளுர் அரசியலில் அதற்கு எவ்வளவு முக்கியத்துவம் உண்டு? என்பதை யாரும் பாடம் நடத்தி தெரிந்து கொள்ள வேண்டியதில்லை.
இத்தகைய ஒரு சூழலில், கடந்த 02.06.2014 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணம் செய்து, முதல் முறையாக மக்கள் குறைகளை கேட்டறிந்த வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் கேப்பாப்பிளவு நிலத்துக்கு பயணம் செய்யாதது, அரசியல் அவதானிகள் மத்தியில் பெருத்த அதிர்ச்சியையும், மக்கள் உணர்வுகளில் கடும் அதிர்வலைகளையும் உண்டு பண்ணியுள்ளது.
17.06.2014 அன்று இரண்டாவது தடவையாகவும், முல்லைத்தீவுக்கு பயணம் செய்து மக்கள் குறைகேள் சந்திப்புகளை நடத்திய போதும், கேப்பாப்பிளவு நிலத்துக்கு முதலமைச்சரின் பயணம் அமையவில்லை. கேப்பாப்பிளவு ஆக்கிரமிப்பு நிலத்துக்கு அவரது பயணம் அமையாததன் சூத்திரதாரிகளாக நீங்கள் மூவரும் கண்டறியப்பட்டுள்ளீர்கள்.
சார்… நாங்க சொல்வதெல்லாம் உண்மை சார்! உண்மையைத்தவிர வேறொன்றுமில்லை சார்!! பாருங்க பாருங்க, நல்லாப்பாருங்க சார்!!!
முல்லைத்தீவு மாவட்டத்துக்கு பயணம் செய்யுமாறு முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்து, அவரிடம் அதற்கான கால நேர ஒதுக்கீட்டை கேட்டுத்தெரிந்து கொண்டு, அவரது பயணத்துக்கான ஒழுங்கமைப்புகளை நீங்கள் மூவரும் செய்துள்ளீர்கள்.
பேரவை செயலகத்தில் நீங்கள் மூவரும் எதை எதையெல்லாம் பிரேரணையாக கொண்டு சென்று முன் வைத்தீர்களோ, அந்த பிரேரணைகளுடன் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு மட்டுமே, நிகழ்ச்சி நிரலை திட்டமிட்டு (வலுக்கவனமாக) தயாரித்து, முதலமைச்சரை அங்கெல்லாம் அழைத்துக்கொண்டு திரிந்திருக்கின்றீர்கள்.
இந்த செயல் எப்பிடி இருக்குது என்றால், சார்… சார்…, நாங்க சொல்வதெல்லாம் உண்மை சார்! உண்மையைத்தவிர வேறொன்றுமில்லை சார்!! பாருங்க பாருங்க, நல்லா…ப்பாருங்க சார்! என்று, வடிவேலு பாணியில் அழாக்குறையாக தலையில் அடித்து, கற்பூரம் அணைத்து சத்தியம் செய்தது போல நகைப்புக்கிடமாக இருக்கிறது.
ஐந்து வருடங்கள் ஒருநாள்!
முதலமைச்சரை அழைத்துக்கொண்டு திரிந்த ஒளிப்படங்களை (Photos) அன்று ஒரு சில மணித்தியாலங்களில் வலைத்தளங்களிலும், மறுநாள் காலை செய்திப்பத்திரிகைகளிலும் பார்த்து, நீங்கள் மூவரும் உள்ளுர அகமகிழ்ந்து விட்டு போயிருக்கலாம். இதனால் யாருக்கு என்ன பயன் கொடுத்தீர்? ஊருக்கு என்ன பலன் கண்டீர்?
“நாங்கள் சொல்வது மட்டும் தான், உண்மை.” என்பதை நீங்கள் மூவரும் தங்களின் தனிப்பட்ட நலன்கள், தேவைகள் கருதி, நிறுவ முட்பட்டதால் நடந்தது என்ன? நீங்கள் சாதித்தது தான் என்ன?
இறுதி யுத்தத்துக்குப்பின்னர் கடந்த ஐந்து வருடங்களாக சிறீலங்கா அரச படைகளுக்கு எதிராக மிகப்பலமாக குரல் கொடுத்து, சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்திருந்த கேப்பாப்பிளவு மக்களை, ஒரே ஒருநாளில் அப்படியே தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு எதிராக திருப்பி விட்டது தான், நீங்கள் செய்த ஒரே சாதனை! வாழ்க வளமுடன்!! தொடர்க உங்கள் திரைப்பட (வலைத்தள) வாழ்க்கை!!!
நடந்தது என்ன? நம் கண்ணை நாமே குத்தலாமா?
முதலமைச்சரின் பயணம் இடம்பெற்று சரியாக ஐந்தாம் நாள், அதாவது 07.06.2014 அன்று முல்லைத்தீவு நகரப்பகுதியில், வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தலைமையில் இடம்பெற்ற ஆட்கொணர்வு மனுக்கள் மீதான விசாரணையை துரிதப்படுத்துமாறு வலியுறுத்தும் ஆர்ப்பாட்டத்துக்கு (ஏட்டிக்குப்போட்டியாக), எதிர் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதால் அங்கு அமளி துமளி ஏற்பட்டு பெரும் குழப்பம் விளைந்தது யாவருக்கும் தெரிந்ததே.
எதிர் ஆர்ப்பாட்டத்துக்கு பேரூந்துகளில் அழைத்து வரப்பட்டிருந்த மக்களில், கணிசமான அளவு மக்கள் கேப்பாப்பிளவிலிருந்து அழைத்து வரப்பட்டிருந்தார்கள்.
எதிர் ஆர்ப்பாட்டத்தின் போது அந்த மக்கள், தமது பகுதிக்கு முதலமைச்சர் பயணம் செய்யாதது பற்றியும், தமது வாழ்க்கை கோலத்தை பார்வையிடாதது பற்றியும், தமது வாழ்வாதாரம் பற்றியும், தாம் தமது பூர்வீக நிலங்களுக்கு திரும்பிச்செல்வது பற்றியும் கூட்டமைப்பு கரிசனை இல்லாமல் இருப்பதாகவும், தம்மை மறந்தே போய் விட்டதாகவும், கோசங்களை சத்தமாக எழுப்பியிருந்தனர்.
இதனை சர்வ சாதாரணமாக யாரும் எடுத்துக்கொள்ள முடியாது. யாரும் சொல்லிக்கொடுக்காமல் உணர்வு ரீதியாக, தமது சுய எண்ணத்தில், தமது சுய விருப்பத்தில் கடந்த ஐந்து வருடங்களாக இராணுவ முற்றுகை வலயத்துக்குள் இருந்து கொண்டே நில ஆக்கிரமிப்புக்கு எதிராக, சிங்கள ஆட்சியாளர்களுக்கு எதிராக துணிச்சலாக குரல் கொடுத்தவர்கள், அதேயளவு உணர்வுடன் தான் அன்றைய எதிர் ஆர்ப்பாட்டத்திலும் கலந்து கொண்டு குரல் எழுப்பியிருக்கிறார்கள் என்பதை, யாரும் சந்தேகிக்கவோ மறுக்கவோ முடியாது.
“ஒரே ஒருநாளில் அந்த மக்கள் பணத்துக்காக விலை போய் விட்டார்கள்” என்று வெகு இலகுவாக பொய்யுரைப்பதில், உண்மையும் நியாயமும் இருப்பதாக தெரியவில்லை. அப்படி சொல்லி விட்டுப்போவது, உலகமே ஏற்றுக்கொண்ட அந்த மக்களின் இதுநாள் வரையான நில மீட்பு போராட்டத்தை, வாழ்வுரிமை போராட்டத்தை கொச்சைப்படுத்துவதாகவே அமைந்து விடும். இது நம் கண்ணை நாமே குத்திக்குருடாக்கி கொள்வது போலாகும்.
என்ன செய்கிறோம்? எதை பேசுகிறோம்? என்று அதை செய்யும் உங்களுக்கே புரியாமல் (Insensitive to the subjective nature – தன்னிலை உணர்வற்ற தன்மையில்), பொழுது விடிந்தால் ஊடகங்களில் தங்களைப்பற்றி ஏதாவது செய்திகள் வந்தாலே போதும் என்று, சதா அதுபற்றியே சிந்தித்து, அதற்காகவே கடும் பிரயத்தனம் எடுத்து, எதையாவது செய்து கொண்டிருக்கும், எதையாவது செய்ய முனையும் உங்கள் மூவரின் “ஊடக மயக்கம்”, இந்த ஊடக மயக்க வருத்தமே மக்களின் உணர்வுகள் திசை திருப்பப்பட்டதற்கு முழுக்கவும் காரணமாகுமே தவிர, பணம் அல்ல.
(கேப்பாப்பிளவு மக்கள் இன்றும் கூட, செட்டிக்குளம் அகதிகள் முகாம் போலவே முட்கம்பி வேலிகளுக்குள்ளும், அதிஉயர் இராணுவ முற்றுகை வலயத்துக்குள்ளும் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள். அங்கு யார் வருகிறார்கள்? போகிறார்கள்?, அந்த மக்களுடன் என்ன பேசுகிறார்கள்? என்றெல்லாம் வலுக்கவனமாக கண்காணிக்கப்படுகின்றது)
செய்திக்கு முந்து!
கொக்குளாய் – கொக்குத்தொடுவாய் பகுதிகளில் நடைபெற்ற குறைகேள் சந்திப்புகளில், மக்கள் தம் பிரச்சினைகளை முதலமைச்சரிடம் ஒவ்வொருவராக கூறிக்கொண்டிருக்கும் போது, இடைக்கிடை குறுக்கிட்ட ரவிகரனும், அன்ரனி ஜெகநாதனும்,
“ஓ அதுவா, அத நாங்க முதலமைச்சருக்கு முதலே தெரியப்படுத்திட்டம். ஓ இதுவா, இத நாங்க அப்பவே பிரேரணையா போட்டுட்டம். இதப்பத்தி சபையில கூட போனமுற பேசியிருக்கிறம். அதப்பத்தி வாரமுற பிரேரணையா வேற கொண்டு வர இருக்கிறம்.” என்று பேசிப்பேசி, (மக்கள் ஒரு வரிப்பேச்சு பேசினால் இவர்கள் இரு வரிப்பேச்சு பேசி)
மக்கள் தத்தமது பிரச்சினைகளை முதலமைச்சருக்கு கூற விடாமல், இவர்கள் மட்டுமே பேசிக்கொண்டிருந்தனர். அங்கு இந்தக்காட்சி பார்ப்போருக்கு எப்பிடி இருந்தது என்றால், மக்கள் நறுக்கென்று திருக்குறள் சொன்னால், இவர்கள் இருவரும் அதற்கு பாரத கதை அளவில் விளக்கம் சொன்னது போல இருந்தது.
ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து போன கொக்குளாய் பங்குத்தந்தை ஜோர்ஜ் பெர்ணான்டோ, “அதெல்லாம் இருக்கட்டும். இப்ப மக்கள நேரில சந்திச்சு பேசத்தான், குறைகள கேட்கத்தான் முதலமைச்சர் வந்திருக்கிறார். தயவுசெய்து அவர்கள பேச விடுங்கள்” என்று ரவிகரனையும், ஜெகநாதனையும் கடுமையாக எச்சரிக்கை செய்த பின்னரே, இருவரும் அடக்கி வாசித்தனர்.
முதலமைச்சருக்கு முன்பாக வைத்து இருவரையும், பங்குத்தந்தை கண்டித்தமையினால் அன்று முதலமைச்சருடன் தம் மனதில் உள்ளதை உள்ளவாறு பேசும் சந்தர்ப்பம் மக்களுக்கு கிடைத்திருக்கிறது எனலாம். பங்குத்தந்தை அப்படி நடந்துகொள்ளாமல் இருந்திருந்தால், அன்று அதை மக்கள் குறைகேள் சந்திப்பாக அர்த்தம் கொள்ள முடியாது போயிருக்கும்.
வழிபாட்டு அரசியலும், முகஸ்துதி நன்றிகளும்!
11.06.2014 அன்று கூடிய பேரவை அமர்வில் ரவிகரனும், அன்ரனி ஜெகநாதனும், முல்லைத்தீவு மாவட்டத்துக்கு பயணம் செய்தமைக்காக முதலமைச்சருக்கு நன்றி கூறியதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இதில் உள்ள வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவை என்னவென்றால், ஒரு குடும்பஸ்தர் தன் மனைவிக்கும் பிள்ளைக்கும் மூன்று வேளையோ ஒருவேளையோ உணவு கொடுத்தமைக்காக, அவர்கள் அதற்கு நன்றி தெரிவித்ததாகவோ, தமது வகுப்பு ஆசிரியர் பாடசாலைக்கு வந்து பாடம் நடத்தியமைக்காக, வகுப்பறை மாணவர்கள் அவருக்கு நன்றி கூறியதாகவோ, நீங்கள் எப்போதாவது (புதுமையான செய்திகள்) அறிந்ததுண்டா? அப்படி நன்றி தெரிவிப்பது முறையாகுமா? உலக வழக்கம் தான் ஆகுமா?
எப்பாடு பட்டாவது உழைத்து, தன் மனைவிக்கும் பிள்ளைக்கும் உணவு இடுவது குடும்பஸ்தரின் கடமையாகும். அதேபோல ஆசிரியரும் பாடசாலைக்கு சென்று பாடம் சொல்லிக்கொடுப்பது அவரது கடமையாகும். அதற்காகத்தானே அரசாங்கம் அவருக்கு ஊதியம் வழங்குகின்றது.
க.வி.விக்னேஸ்வரன் யார்? அவர் என்ன குஜராத் முதல்வரா? இல்லையே. அவர் வடமாகாணத்தின் முதல்வர். வடமாகாணத்திலுள்ள அனைத்து கிராமங்கள் அதன் குச்சொழுங்கைகள் எல்லாவற்றிலும் பாதங்கள் பதிக்க வேண்டியது அவரது கடமையாகும். எனவே அவர் தன் கடமையை செய்திருக்கிறாரே தவிர, எந்த புதுமையையும், வழமைக்கு மாறானதையும் செய்யவில்லை.
ஆனால் நீங்களோ, உங்களின் “ஊடக மயக்கம்” காரணமாக, உலக வழக்கத்துக்கு மாறானதை செய்து, தமிழர்களின் நன்றி தெரிவிக்கும் மரபைக்கூட (பண்பாட்டை) நகைப்புக்கிடமாக்கியிருக்கிறீர்கள்.
யாராவது ஒரு நபரின் பலவீனங்களை ஆமோதித்து, அவரின் தவறுகளை தவறென்று தெரிந்தும் கண்ணை மூடிக்கொண்டு தாறுமாறாக ஆதரித்து, தனிமனித துதிபாடல்களையும், தனிமனித வழிபாடுகளையும் செய்து, சலாம் போட்டால், (பேச்சு வழக்கில் இதை “காக்கா பிடித்தல்”, “பல்லக்கு தூக்கல்”, “குடை பிடித்தல்”, “கொடி தூக்கல்”, “ஐஸ் வைத்தல்”, “வாளி வைத்தல்”, “வக்காளத்து வாங்கல்” என்றெல்லாம் பலவாறாக சொல்லுவார்கள்.)
அது அந்த நபர் சார்ந்த சமுகம், வாழ்ந்ததுக்கான தடயங்களே இல்லாது அழிந்து போகும் சாபத்துக்கே வழிவகை செய்யும்.
முகஸ்துதி அரசியலும், வழிபாட்டு அரசியலும் செய்யும் கேடு, ஒரு இனம் கட்டியிருக்கிற கோவணத்தையும் உருவி, அந்த இனத்தையே கெட்டு குட்டிச்சுவராக்கி விடுமே தவிர, மட மாளிகைகளை எப்பொழுதும் உருவாக்கித்தராது.
வடபிராந்திய புலனாய்வு ஊடகவியலாளர்,
-கழுகுகண்-
















