ஸ்ரீமுஷ்ணம் அருகே காதலிக்கு திருமணம் ஏற்பாடு நடந்ததால் மனமுடைந்த என்ஜினீயரிங் பட்டதாரி 420 அடி உயரமுள்ள செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காதல்
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே ஸ்ரீநெடுஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி(வயது 55). கூலித்தொழிலாளி. இவரது மகன் கதிரவன்(23). பி.இ. முடித்த என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் வேலைக்கு எதுவும் செல்லவில்லை. இந்நிலையில் இவரும், அதே கிராமத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவரும் கடந்த 5 ஆண்டுகளாக அடிக்கடி தனிமையில் சந்தித்து தங்களது காதலலை வளர்த்து வந்தனர்.
இவர்களது காதல் விவகாரத்தை அறிந்த பெண்ணின் பெற்றோர் கடுமையாக கண்டித்தனர். ஆனால் பெற்றோரின் எதிர்ப்பையும் அவர்கள் தங்களது காதலலை வளர்த்து வந்தனர். இதற்கிடையில் கதிரவனுக்கு, அந்த பெண்ணையே திருமணம் செய்து வைக்கும் பொருட்டு அவரது பெற்றோர் பெண் கேட்க சென்றனர். அங்கு கதிரவனின் பெற்றோரை, பெண்வீட்டார் திட்டி அனுப்பியதாக கூறப்படுகிறது.
கோபுரத்தில் ஏறினார்
அத்துடன் தங்களது மகளை வெளியூரில் உள்ள உறவினர் வீட்டில் தங்க வைத்தனர். மேலும் தங்களது மகளுக்கு வேறொரு இடத்தில் திருமணம் செய்து வைக்க மாப்பிள்ளை பார்த்து திருமண ஏற்பாடுகளை செய்து வந்தனர். இதையறிந்த கதிரவன் கடந்த 2 நாட்களாக மனமுடைந்து காணப்பட்டார்.
இந்த நிலையில் நேற்று காலை 6 மணியளவில் தூங்கி எழுந்த கதிரவன், காதலிக்கு நடந்து வரும் திருமண ஏற்பாடுகள் நினைவுக்கு வந்தது. காதலி தன்னை விட்டு கை நழுவி விடுவாளோ? என்ற மன குழப்பத்தில் வீட்டைவிட்டு வெளியே நடந்து சென்றார். அப்போது திடீரென கிராமத்தின் மத்தியில் உள்ள 420 அடி உயரமுள்ள தனியார் செல்போன் கோபுரத்தில் மளமளவென ஏறினார்.
குதித்து விடுவதாக மிரட்டல்
இதை பார்த்த சிலர் சத்தம் போட்டனர். அதை பொருட்படுத்தாமல் கோபுரத்தின் உச்சிக்கு சென்ற கதிரவன், நான் இங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன் என தெரிவித்தார். உடனே அங்கு கதிரவனின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் திரண்டனர். கோபுரத்தில் இருந்து கதிரவனை கீழே இறங்குமாறு கூச்சலிட்டனர்.
ஆனால் கதிரவனோ இறங்க மறுப்பு தெரிவித்ததோடு, காதலிக்கு திருமணம் நடப்பதால் நான் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன். காதலியை என்னிடம் சேர்த்து வையுங்கள். இல்லை என்றால் கீழே குதித்து விடுவேன் என மிரட்டினார்.
போலீஸ் விசாரணை
இது குறித்த தகவலின் பேரில் ஸ்ரீமுஷ்ணம் போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கதிரவனை கீழே இறங்க வலியுறுத்தியும் அவர் மறுத்து விட்டார்.. இதனை தொடர்ந்து கதிரவனின் தந்தையின் செல்போனை வாங்கி பேசிய சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் குமாரசாமி, கதிரவனை செல்போன் கோபுரத்தில் இறங்கி வருமாறும், உனது கோரிக்கை தொடர்பாக விசாரணை செய்து நிறைவேற்றுவதாகவும் கூறினர். அதனால் கதிரவன் சமாதானமடைந்து 7.30 மணிக்கு கீழே இறங்கினார்.
இதையடுத்து கதிரவனை போலீசார் ஸ்ரீமுஷ்ணம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
















