இன்னும் சில மாதங்களில் க.பொ.த.உயர்தர பரீட்சைக்கு தோற்றிய பின்னர், பாடசாலை கற்றல் செயல்பாடுகளிலிருந்து விலகிச்செல்லவுள்ள மன்னார் பேசாலை சென்.பத்திமா மத்திய மகாவித்தியாலய உயர்தர மாணவர்களின் ஒன்று கூடல், கடந்த 25.06.2014 அன்று மகாவித்தியாலயத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் மாணவர்களை வாழ்த்தி ஆசி வழங்கிய மகாவித்தியாலயத்தின் குருமுதல்வர் அருட்சகோதரர் ஸ்ரனிஸ்லஸ், தனது தலைமையுரையில் வாழ்க்கை மற்றும் சமுகம் தொடர்பில் மாணவர்களுக்கு கூறிய அறிவுரைகள், “வாழ்க்கையை எதிர்கொள்ளும் தைரியத்தையும், வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க வேண்டும் என்ற விருப்பையும்” நிச்சயம் மாணவர்களுக்கு வழங்கியிருக்கும்.
இதோ அவரது அருமையான பேச்சு!
பாடசாலையிலிருந்து விலகிய பின்னர் பல்வேறு அறைகூவல்களுக்கு மத்தியில் வாழ்க்கை எனும் மாபெரும் சமுத்திரத்தில் நீதியுள்ள பிள்ளைகளாக, நேர்மையுள்ள பிள்ளைகளாக, மன்னிக்கும் குணம் உள்ள பிள்ளைகளாக, சமாதானத்தை உருவாக்க கூடிய பிள்ளைகளாக வாழ வேண்டும் என்று ஆசித்து நிற்கின்றேன். அவ்வாறு உருவாகவும் ஆசீர்வதிக்கிறேன்.
பாடசாலையை விட்டு வெளியேறுகின்றீர்கள், வேறு எதற்காகவும் அல்ல. சமுகத்துக்கு பணியாற்றுவதற்காகவே.
ரவீந்திர நாத்தாகூரின் அநுபவ மொழி ஒன்று உண்டு. “நான் நித்திரையில் ஒரு கனா கண்டேன், வாழ்க்கை என்றால் மகிழ்ச்சிகரமானது என்று. கண் விழித்து பார்த்த போது, வாழ்க்கை என்றால் சேவை எனக்கண்டேன். சேவை புரிந்த போது உணர்ந்து கொண்டேன் மகிழ்ச்சி என்பது சேவையே!” அவரது மிகப்பிரபலமான இந்த அநுபவ மொழியை மனதில் இருத்தி சமுகத்துக்கு சேவையாற்றுங்கள்.

அறிஞர் பேனாட்ஸோ தனக்குள் இப்படி ஒரு வைராக்கியத்தை வளர்த்துக்கொண்டார். “வாழ்க்கை என்பது இலகுவில் அணைந்து போகக்கூடிய ஒரு மெழுகுவர்த்தி அல்ல. மாறாக என்னிடம் ஒப்படைக்கப்பட்ட அந்த சிறிய ஒளியை பிரகாசமாக்கி நான் கண் மூடுவதற்குள் என்னுடைய பரம்பரைக்கு விட்டுச்செல்ல வேண்டும்.” ஆகவே
நீங்கள் பரீட்சையில் சித்தி பெறாமல் விட்டாலும் கூட, வாழ்க்கையில் உங்களுக்கு பல்வேறு தேர்வுகள் காத்திருக்கின்றன. கொமர்ஸ், ஆட்ஸ், சயன்ஸ் எழுத்து பரீட்சைகளில் தோல்வியுற்றாலும் கூட, வாழ்க்கையில் சாதனைகள் நிறைய செய்ய இருக்கின்றீர்கள்.
அறிஞர் பேனாட்ஸோ கூறியது போல, உங்களிடம் இருக்கத்தக்க கெட்டித்தனங்களை விருத்தி செய்து, நீங்கள் இந்த உலகை விட்டுப்போக முன், உங்களிடமுள்ள சிறிய ஒளியை, உங்களுடைய பரம்பரைக்கு பெரியதோர் வெளிச்சமாக்கி விட்டுச்செல்ல வேண்டும் என்று உங்களை ஆசீர்வதிக்கின்றேன். என்று அவர் மாணவர்களை வாழ்த்தி ஆசி வழங்கினார்.
மகாவித்தியாலயம் பற்றிய சிறு குறிப்பு!
இப்பாடசாலை 1AB பாடசாலைகளில் ஒன்றாகும். 1000 வரையான மாணவ மாணவியர்கள், தரம் 6-13 வரையுள்ள வகுப்புகளில் பயின்று வருகின்றனர். இவ்வருட வலய மட்ட போட்டியில் 21 முதல் இடங்களையும், 19 இரண்டாம் இடங்களையும், 6 மூன்றாம் இடங்களையும் பெற்றுள்ளது.
அவசிய தேவையும், முக்கிய கோரிக்கையும்:
பாடசாலையின் விளையாட்டு மைதானம் 5.5 ஏக்கர் பரப்பளவை கொண்டுள்ளதுடன், குன்றும் குழியுமாக காணப்படுகின்றது. மைதானத்தை புனரமைக்க குறைந்தபட்சம் 5 இலட்சம் நிதி தேவைப்படுகின்றது. இந்த நிதியுதவியை நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்களிடமும், புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் பாடசாலையின் பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகளிடமும் பாடசாலை சமுகம் எதிர்பார்க்கின்றது.

இந்நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன் ஆகியோரும், மன்னார் மாவட்ட கல்வி பிரதி பணிப்பாளர் கிறிஸ்டிராஜ், மகாவித்தியாலயத்தின் பழைய மாணவர்களான மன்னார் மாவட்ட செஞ்சிலுவை சங்க பொறியியலாளர் கிலறன்ஸ்ஸி பீரிஸ், வைத்தியர் ஏசி அருள்நேசன் ஆகியோரும், மகாவித்தியாலயத்தின் ஆசிரியர்கள், அருட்சகோதரிகள், மாணவர்கள் மற்றும் மகாவித்தியாலயத்தின் அபிவிருத்தி சங்கத்தினரும் கலந்து கொண்டனர்.
















