புதுடெல்லி, கறுப்பு பணம் பதுக்கி வைத்துள்ள இந்தியர்களின் பட்டியலை தாருங்கள் என்று சுவிட்சர்லாந்து அரசுக்கு இந்தியா கடிதம் எழுதி உள்ளது.
சுவிட்சர்லாந்து (சுவிஸ்) நாட்டின் வங்கி ஊழியர் ஒருவர், இந்தியர்கள் உள்பட பல்வேறு நாட்டவர்களின் வங்கி கணக்கு விவரங்களை திருடி வெளியிட்டதுடன், அதுகுறித்த தகவலை வருமானவரி இலாகாகளுக்கும் அனுப்பி வைத்தார். அப்போது, சுவிஸ் நாட்டின் பல்வேறு வங்கிகளில் 14 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான கறுப்பு பணத்தை இந்தியர்கள் பதுக்கி வைத்து இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து இந்திய அரசு, சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கறுப்புபண பட்டியலை தருமாறு பலமுறை கேட்டுக்கொண்டும், அதனைத்தர சுவிஸ் அரசு தொடர்ந்து மறுத்து வந்தது.
இந்த நிலையில், வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் மற்றும் இந்திய நிறுவனங்கள் பதுக்கி வைத்துள்ள கறுப்பு பணத்தை மீட்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டார். அந்த குழுவும் விசாரணையை தொடங்கி விட்டது.
இந்த நிலையில் இந்தியர்களின் கறுப்பு பண விவகாரத்தில், திடீர் திருப்பமாக சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கறுப்பு பணத்தின் உண்மையான உரிமையாளர்கள் பற்றியும், பணம் பதுக்கி வைத்துள்ள தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் குறித்தும் ஆய்வு செய்து வருவதாக சுவிஸ் அரசு அறிவித்தது. இதனையடுத்து இவ்விவகாரம் தொடர்பாக சுவிஸ் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறினார்.
இதனிடையே டெல்லியில் உள்ள சுவிஸ் தூதரகம் அந்நாட்டின் நிதி அமைச்சகம் சார்பாக விடுத்துள்ள அறிக்கையில், வரி ஏய்ப்பு தொடர்பான போராட்டத்தில் இந்தியாவின் ஆர்வத்தை சுவிஸ் அரசு புரிந்து கொண்டுள்ளது. எனவே, இந்தியர்கள் வரி ஏய்ப்பு செய்வதை தடுக்கும் விதத்தில், இந்தியாவின் புதிய அரசுடன் இணைந்து செயல்பட சுவிஸ் அரசாங்கம் தயாராக இருக்கிறது. இதில் சர்வதேச தரத்திற்கு ஏற்ப ஒத்துழைப்பு தருவதிலும் சுவிஸ் அரசு உறுதியாக உள்ளது. என்று கூறப்பட்டது.
இந்நிலையில் சுவிஸ் வங்கிகளில் கறுப்பு பணம் வைத்திருக்கும் இந்தியர்கள் தொடர்பான பட்டியலை விரைந்து தாருங்கள் என்று சுவிஸ் நாட்டின் சம்பந்தப்பட்ட அமைச்சகத்துக்கு இந்தியா கடிதம் எழுதி உள்ளது. அவர்களிடம் கறுப்பு பணம் தொடர்பாக எந்த விரிவான தகவல் இருந்தாலும் அதனை பகிர்ந்து கொள்ளும்படியும், இந்த தகவல்களை விரைந்து தருமாறும் அதில் கேட்டுக்கொள்ளப்பட்டு இருக்கிறது. “கறுப்பு பணம் பதுக்கி வைத்துள்ள இந்தியர்களின் பட்டியலை விரைந்து தாருங்கள் என்று நாங்கள் சுவிட்சர்லாந்து அரசு அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளோம்” என்று மத்திய நிதி அமைச்சக அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.
















