இலங்கை அகதியின் மரணம் – நஸ்டஈடுகோரிப் போராட்டம் – பலர் கைது

in-refugeeபுதுவை தனியார் வைத்தியசாலையில் இறந்த இலங்கை அகதியின் குடும்பத்தாருக்கு வைத்தியசாலையின் நிர்வாகம் நஷ்டஈடு வழங்கக்கோரி உறவினர்கள், தமிழ் அமைப்புகள் சார்பில் சாலை மறியல் நடந்தது. இதில் 63 பேரை பொலிஸார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள கீழ்புத்துப்பட்டு கிராமத்தில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இந்த முகாமை சேர்ந்த 29 வயதுடைய சந்திரசேகர் என்கிற தீபன் தொழிலாளி. இவருக்கு நேற்று முன்தினம் காலையில் திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக அவரது உறவினர்கள் அவரை புதுச்சேரி கனகசெட்டிக்குளத்தில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

அப்போது வைத்தியசாலை நிர்வாகம் சிகிச்சைக்கான கட்டணத்தை செலுத்தும்படி தீபனின் உறவினர்களிடம் கூறியதாக தெரிகிறது. இந்த நிலையில் தீபன் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் வைத்தியசாலையின் நிர்வாகம் மீது குற்றம் சாட்டி முற்றுகை போராட்டம் நடத்தினார்கள்.

இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் கோட்டக்குப்பம், காலாப்பட்டு பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அப்போது அவர்களிடம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார் உறுதி அளித்தனர். இதையடுத்து முற்றுகையில் ஈடுபட்டவர்கள் கலைந்து செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து காலாப்பட்டு பொலிஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதையடுத்து தீபனின் உடலை பொலிஸார் பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி அரசு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் நேற்று காலையில் புதுச்சேரி அரசு வைத்தியசாலை சவக்கிடங்கு முன்பு தீபனின் உறவினர்கள் மற்றும் தமிழ் அமைப்பினர் சென்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். அப்போது அவர்கள் ‘தீபனின் குடும்பத்தாருக்கு தனியார் வைத்தியசாலை நிர்வாகம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும், அந்த வைத்தியசாலையின் நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து முதல்–அமைச்சர் ரங்கசாமி உறுதி அளித்தபிறகே தீபனின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும்’ என்று கூறினார்கள்.

இந்த போராட்டத்திற்கு மனித உரிமை கூட்டமைப்பு தலைவர் சுகுமாறன் தலைமை தாங்கினார். இதில் விடுதலை சிறுத்தைகள் மாநில அமைப்பாளர் பாவாணன், தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில தலைவர் ஸ்ரீதர், புதுவை மாநில மாணவர் கூட்டமைப்பு நிறுவனர் சாமிநாதன், பெற்றோர்–மாணவர் சங்க தலைவர் பாலா, பெரியார் சிந்தனையாளர் இயக்கம் தீனா, பார்வர்டு பிளாக் முத்து உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்தநிலையில் ஒரு பிரிவினர் ஆம்பூர் சாலை, செஞ்சி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்து பெரியகடை பொலிஸார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் பொலிஸாரின் முயற்சி தோல்வியில் முடிந்தது. இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட 63 பேரை பொலிஸார் கைது செய்தனர்.

இதையடுத்து தமிழ் அமைப்பினர் மற்றும் தீபனின் மனைவி விஜயகவுரி, தாயார் மகேஸ்வரியுடன் வைத்தியசாலையில் இருந்து ஊர்வலமாக சட்டசபைக்கு சென்று முதல்–அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்தனர்.

Tags: , , ,

Leave a Reply