அஜீத் தற்போது கவுதம் மேனனின் இயக்கத்தில் இன்னும் பெயர் வைக்கப்படாத படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக த்ரிஷாவும், அனுஷ்காவும் நடித்து வருகின்றனர். த்ரிஷா காதலியாகவும், முன்பாதியின் இறுதியில் வில்லனால் கொலை செய்யப்படும் கேரக்டரில் நடிக்கிறார். அனுஷ்கா அஜித்துக்கு ஜோடியாக நடிக்கிறார்.
இந்நிலையில் த்ரிஷாவை கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருக்கும் வில்லன் கேரக்டருக்கு கவுதம் மேனன் பல வில்லன் நடிகர்களை வரவழைத்து மேக்கப் டெஸ்ட் எடுத்து பார்த்ததில் அவருக்கு திருப்தி ஏற்படவில்லை என்றும், அதனால் வில்லன் சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படுவது தாமதமாகி வந்ததாகவும் கூறப்பட்டது. தற்போது கவுதம் மேனன் ‘குட்டிப்புலி’ படத்தில் சசிகுமாருக்கு வில்லனாக நடித்த ராஜசிம்மனை தேர்வு செய்துவிட்டதாக அதிகாரபூர்வ தகவல்கள் கூறுகின்றன. தன்னுடைய படத்தில் தேர்வு செய்யப்பட்ட வில்லன் நடிகர் ராஜசிம்மனின் நடிப்பை பார்த்து அஜீத் இன்ப அதிர்ச்சி அடைந்ததாக படக்குழுவினர் தெரிவித்தனர்.
அஜீத்துடன் ஒரு காட்சியிலாவது நடித்துவிட வேண்டும் என்று நீண்ட நாள் ஆசைகொண்டிருந்த ராஜசிம்மனுக்கு படத்தின் மெயின் வில்லன் கேரக்டரே கிடைத்ததில் இன்ப அதிர்ச்சியாம். இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் அருண் விஜய் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை அண்ணா சாலையில் இரவு நேரத்தில் படப்பிடிப்பு நடத்த கவுதம் மேனன் அனுமதி வாங்கியுள்ளார். கூடியவிரைவில் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது.
















