தெற்கிலே முஸ்லிம் மக்கள் மதவாதிகளால் தாக்குதலுக்குள்ளானபோது சிறுபான்மை உரிமைகளுக்காக தொடர்ந்தும் குரல்கொடுத்துவரும் யாழ் பல்கலைக்கழக சமூகம் தவறாது தனது குரலினையும் ஓங்கி ஒலித்தது.
இந்தக் குரலானது முஸ்லிம்களிற்கு சார்பானதோ அல்லது பேரினவாதிகளிற்கு எதிரானதோ என்று மேலோட்டமாக எடுத்துக்கொள்ள முடியாது. மானுடத்தின்மீது திணிக்கப்படும் அடக்குமுறைகளிற்கும் அடாவடித்தனங்களிற்கும் எதிராதனேயன்றி வேறில்லை. முற்றிலும் இனவாதத்தையும் மதவாதத்தையும் மெல்ல மெல்ல வளர்த்துக்கொண்டிருக்கும் யாழ் பல்கலைக்கழக முஸ்லிம் மஜிலிஸ் எதிர்காலத்தின் தலையிடியாக தழைத்துவருகின்றது. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற சங்கத் தமிழ் ஐக்கியத்திற்கேற்ப மனிதநேயம் காக்கப்பெற்று இன மத சமூக வேறுபாடுகளின்றி அனைவரும் ஒருதாய் மக்களே என்ற ஒத்த குரலே யாழ் பல்கலைக்கழக சமுகத்தினது குரலும்.
ஆனால் அதனை இதுபோன்ற புல்லுருவித்தனமான அமைப்புக்கள் விளங்கிக்கொள்ளாதமை வெட்கக்கேடான விடயமாகும். குறிப்பிட்ட மஜிலிஸ்ஸை சார்ந்தவர்களது ஒரே நோக்கம் தாம் பிரிந்து செயற்படுவதே. அதாவது முஸ்லிம்களிற்குரிய கட்டுப்பாடுகளை இறுக்கமாகக் கையாண்டு சகோதரத்துவ வேறுபாட்டின் இடைவெளியைக் கூட்டி அறிவிக்கப்படாத தனி முஸ்லிம் ராச்சியத்தைப் பல்கலைக்கழகத்துள் புகுத்துவதே.
ஆனால் இந்த இறுக்கமான கட்டுப்பாடுகளிற்கு அடிபணியாத சில மாணவர்களும் மாணவிகளும் தரக்குறைவான வார்த்தைப் பிரயோகங்களால் திட்டப்படுவதும் மாணவிகளின் பெற்றோரைக் கூப்பிட்டு இவள் மார்க்கத்தை மீறி நடத்தைப் புரள்வை ஏற்படுத்துகின்றாள் என அடாத பழி சுமத்தப் படுவதும் வழக்கமாகிவிட்டது. இதனால் சில மாணவிகள் அவமானம் தாளாமல் தமது படிப்பை பாதியில் கைவிட்டுவிட்டுச் சென்றுவிட்டதாக கவலையோடு ஒரு முஸ்லிம் மாணவர் கூறுகின்றார். தமிழ் மாணவர்களோடு பேசவேண்டாம் என்ற இவர்களது கட்டுப்பாடுகளை மீறிச் செயற்பட்டதாக சில முஸ்லிம் மாணவிகள்மீது நடத்தைக் கேடானவர்கள் என குற்றஞ்சாட்டி கடிதமொன்றை இந்த மஜிலிஸ்ஸை சேர்ந்தவர்கள் பல்கலைக்கழக ஒழுக்காற்று அதிகாரியிடம் கையளித்துள்ளனர்.
இம் மாணவிகள்மீது இவர்களது தொடர்ச்சியான அழுத்தங்களினால் மனமுடைந்த குறிப்பிட்ட மாணவிகள் பல்கலைக்கழக கல்வியை இடைநிறுத்தப்போவதாக கண்ணீரும் கம்பலையுமாக விம்முகின்றனர். இலங்கையைப் பொறுத்தவரை கிடைத்தற்கரிய பெரும்பேறே பல்கலைக்கழகப் பட்டப்படிப்பு. அந்த அரிய சந்தர்ப்பத்தினை அடைவதற்காக மாணவர்களும் அவர்களது பெற்றோரும் உழைத்த உழைப்பு கொஞ்சநஞ்சமானதல்ல. ஆனால் அதையே இடைநிறுத்திச் செல்வதென்பது வேதனையிலும் வேதனையான விடயமே! “இவங்களால எங்களுக்கு எந்த நன்மையுமே இல்லை, இவங்கள் முஸ்லிம் தீவிரவாதிகள்” என கண்ணீரோடு அம் மாணவி வார்த்தைகளைக் கொட்டியபோதுதான் நிலமை மோசமடைவது தெரியவந்தது. எதற்கெடுத்தாலும் தனித்தனி ஒன்றியங்கள்..
கலைப்பீட முஸ்லிம் மாணவர் ஒன்றியம் என்ற பெயரில் அண்மையில் ஒரு புத்தக வெளியீடும் நடந்தேறிவிட்டது. உத்தியோகபூர்வமற்ற இந்த ஒன்றியங்களெல்லாம் எப்போது முளைத்தன? கலைப்பீடத்திற்கென்று பதிவுசெய்யப்பட்ட மாணவர் ஒன்றியம் இருப்பது இவர்கள் கண்களுக்குத் தெரியவில்லையோ? பேசுவது ஒரே மொழிதானே? அப்படியாயின் எதைக் காரணம்காட்டி பிரிந்து செயற்படுகிறீர்கள்? சிங்கள மாணவர்களிடம் மொழி ஒரு தடங்கலாக இருக்கின்றதே தவிர இதுபோன்ற தீவிரமான பிரிவினைகள் பல்கலைக்கழகத்துக்குள் அவர்களிடம் இருந்ததில்லை. விரும்பியோ விரும்பாமலோ தங்களது செயற்பாடுகளிற்கு தமிழ் மாணவர்களிடமும் அலோசனை கேட்கத் தவறியதுமில்லை.
அன்பிற்குரிய மாணவர்களே, வளர்ச்சிப்பாதையில் உலகம் காற்றிலும் கடிதாய் ஓடிக்கொண்டிருக்க இன மத பேதங்களை விதைத்து எறும்புபோல் ஊர்வதை நிறுத்துங்கள். யாழ் பல்கலைக்கழகம் தியாகங்கள் நிறைந்த உன்னதமான ஒரு கல்வி ஆலயமாகும். இங்கே இனம் மதம் என்ற பேதங்கள் வேண்டாம்.
அறிவையும் நற்பண்புகளையும் போதிக்கும் எங்கள் பல்கலை மண்ணில் எந்தவொரு பிரிவினைகளையும் விதைக்காதீர்கள். மதக் கொள்கைகளை வைத்து மதம் பிடித்த யானைகளாக அலையாமல் உங்கள் மனங்களை உழுது பண்படுத்துங்கள்! இல்லையேல் எதிர்காலம் எம் எல்லோர்க்கும் சாபக்கேடானதாகவே விளங்கும்!
















