பெங்களூர் நகரில் உள்ள பிரபலமான ஒரு நகைக்கடையில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் கடையில் உள்ள நகைகளை தீயில் இருந்து காப்பாற்றுவதற்காக நகைக்கடை ஊழியர்கள் நகைகளை தூக்கி சாலையில் விசினர். இதனால் அந்த பகுதியில் சில நிமிடங்கள்தங்க மழை பெய்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பெங்களூர் நகரில் உள்ள எம்.ஜி. சாலையில் ‘நவரத்னா’ என்ற பிரபலமான நகைக்கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் நேற்று காலை சுமார் 10 மணியளவில் நகைக்கடையில் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த அறையின் அருகே திடீரென தீப்பிடித்து அந்த தீ கடை முழுவதும் மிக வேகமாக பரவ தொடங்கியது.
இந்த திடீர் தீ விபத்தினால் கடும் அதிர்ச்சி அடைந்த கடை அலுவலர்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு போன் செய்து தகவல் கொடுத்தனர். ஆனால் தீயணைப்பு துறையினர் வருவதற்குள் தீ மிக வேகமாக பரவியதால் கடை அலுவலர்களே உயிரைப் பணயம் வைத்து நகைகளை மீட்கும் பணியில் இறங்கினர்
இந்த தீ விபத்தில் நகைகள் தீயில் உருகிவிடும் நிலைக்கு வந்ததால் உள் அறைகளில் உள்ள பெட்டிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த தங்கம், வெள்ளி, வைரம் போன்ற நகைகளை வெளியே எடுத்து துணிகள் மற்றும், பிளாஸ்டிக் கேரி பைகளில் வைத்து ஜன்னல் வழியாக வெளியே தூக்கி வீசினர்.
உள்ளே இருந்து சில ஊழியர்கள் நகைகளை வெளியே வீச, அந்த நகைகளை கடைக்கு வெளியே நின்றிருந்த கடை ஊழியர்கள் மிகச்சரியாக ‘கேட்ச்’ பிடித்தனர். இருப்பினும் ஒருசில இடங்களில் நகைகள் சிதறியது. சிதறிய நகைகளையும் ஊழியர்கள் பாதுகாப்புடன் சேகரித்து வந்தனர்.
தீ விபத்து ஏற்பட்ட உடன் நகைக்கடையில் இருந்து குவியல் குவியலாக நகைகள் கீழே விழுந்ததை பார்த்தது தங்க மழை பெய்தது போல் இருந்ததாக அங்கு கூடியிருந்தவர்கள் கூறினர்.
இதன்பின்னர் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தினர்
















