கச்சத்தீவை கட்டண அடிப்படையில் மீனவர்களுக்கு பெற்றுக் கொடுக்க இந்தியா முயற்சித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்திய மீனவர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் இவ்வாறான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இலங்கைக் கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்படுவதனால் பல்வேறு நெருக்கடி நிலைமைகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஒரு தொகை கட்டணத்தின் அடிப்படையில் கச்சத்தீவு கடற்பரப்பில் இந்திய மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிக்குமாறு இலங்கையிடம் கோர இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தொடர்ச்சியாக இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவதனை தடுக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படு;ம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் தனிப்பட்ட பொருளாதார கடல் வலயத்தின் ஆழ் கடல் பகுதியில் தமிழக மீனவர்களை மீன்பிடிக்க ஊக்குவிப்பது குறித்தும் கனம் செலுத்தப்பட்டுள்ளது. கச்சத்தீவில் மீன்பிடிப்பதற்கு மரபு ரீதியான உரிமை இருப்பதாக தமிழக மீனவர்கள் அறிவித்து வருகின்றனர்.
எவ்வாறெனினும், கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது என அண்மையில் பதவியேற்றுக்கொண்ட பாரதீய ஜனதா கட்சி அரசாங்கமும் நீதிமன்றிற்கு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழக மீனவர் பிரச்சினைக்கு காத்திரமான தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க வேண்டுமென தமிழக முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.
















