புலம்பெயர் தமிழர்களின் பணத்தினை எதிர்பாக்கும் விக்னேஸ்வரன்!

vigneshwaran2வடக்கின் அபிவிருத்திக்காக பணம் தர எமது புலம் பெயர் உறவுகள் தயார். அவற்றை பெற எமக்கும் ஆவல். ஆனால் நடுவில் நந்திபோல நின்று அனைத்தையும் கெடுக்கிறது அரசாங்கம் என கடும் விசனம் வெளியிட்டார் வட மாகாண முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன்.

யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற கூட்டுறவாளர் ஆய்வு மாநாட்டில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு பேசும்போதே முதலமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

போரினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட வடக்கை கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு எமக்கு இருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும். இவற்றுக்கெல்லாம் நிதி உதவி செய்ய எமது புலம்பெயர் உறவுகள் தயாராய் இருக்கிறார்கள்.

ஆனால் அதனைப் பெற அரசு தடையாக உள்ளது எனவும் முதலமைச்சர் கூறினார்.
பணம் எங்கிருந்து வருகிறது என்பது பிரச்சனையல்ல. அது விடுத்து புலிப்பணமா? சிங்கப் பணமா? கரடிப் பணமா? என்றெல்லாம் கத்திக்கொண்டிருப்பதில் பயனில்லை. அப்பணம் என்ன தேவைக்கு பயன்படப் போகிறது என்பதை கண்காணிப்பதே நல்ல அரசின் செயற்பாடாக இருக்க வேண்டும்.புலிகள் சார்பான நிறுவனங்கள் வடமாகாண மக்களுக்குப் பணம் கொடுப்தை நாங்கள் அனுமதிக்க முடியாது. பணம் எங்கிருந்து வருகின்றன என்பதை வெளிநாட்டு வளங்கள் சார்பான திணைக்களம் ஆராய்ந்து அறிய வேண்டும் என்று அரச தரப்பில் அண்மைக் காலங்களில் கூறப்பட்டு வருகின்றது.

ஜனவரி இரண்டாம் திகதி ஜனாதிபதியை நான் அவரின் பல செயலாளர்களுடன் கொழும்பில் சந்தித்தேன். வெளிநாட்டில் இருக்கும் எமது மக்கள் எமக்கு 1000 இலட்சம் ரூபாய்க்குக் குறைவான தொகைகளை அனுப்பும் போது அவற்றை நேரடியாகப் பெற உதவி செய்ய வேண்டும் என்று அதன்போது கோரினேன்.

அதற்கு அவர் ஜயசுந்தர அவர்களின் ஆராய்வுக்குப் பின்னர் பெற்றுக் கொள்ளலாம் என்று கூறினார்.பணச்சலவை (Money Laundering) சம்பந்தமாகப் பல சட்டங்கள் இருக்கின்றன. அவ்வாறு ஆராய்வதென்றால் அத்தனை நன்கொடைப் பணங்களையும் பற்றி ஆராய்வு செய்ய வேண்டும்.

அதைவிட்டுப் புலிப்பணம் பற்றி ஆராய வேண்டும் என்று கூறியமை மனமயக்கத்தையே ஏற்படுத்துகின்றது.
இவ்வாறு வெளியில் இருந்து எமக்கு வரும் உதவிகளை அரசு தடுத்துவரும் நிலையில் முன்னர் இருந்த சிக்கனக் கடனுதவி கூட்டுறவுச் சங்கங்கள் தற்போது மீண்டும் உயிர் கொடுக்கப்பட்டு மக்களுக்கு உரியதான உதவிகளைச் செய்யப் பொழுது காலம் கனிந்து வருகின்றது.

போருக்கு முன்னர் வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களில் 528 சிக்கன கடனுதவி கூட்டுறவு சங்கங்கள் இருந்தன. தற்போது 259 சங்கங்கள் மட்டுமே நடைமுறையில் இருந்து வருவதாக அறிகின்றேன். இது வேதனையானது.

எமது மாகாணத்தில் பல குடும்பங்களில் ஆண்கள் போரில் கொலைசெய்யப் பட்டுள்ளார்கள் அல்லது கைது செய்யப்பட்டு அவர்கள் இருக்கும் இடம் தெரிந்தோ தெரியாமலோ இருக்கின்றது. பல பெண்கள் தமது வயது போன பெற்றோரையும், தமது குழந்தைகளையும் பாதுகாத்துப் பராமரிக்க வேண்டிய ஒரு நிலையில் இருக்கின்றார்கள். அவர்களுக்கு அதற்கான வளங்கள் இல்லை.

தொழிற்திறன் இல்லை. தொழில்களைத் தொடங்க தொகைப் பணம் இல்லை. கிராம அபிவிருத்திச் சங்கங்களின் தேவை இப்போது மக்களுக்குத் தேவை எனவும் முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.

வடமாகாண அமைச்சர் என்பதற்கு அப்பால் புலம்பெயர் தமிழர்களின் பணத்தினை கொண்டே தமிழர்களின் அபிவிருத்திக்கி பயன்படுத்த வேண்டும் என்ற நினைப்பில் இருக்கின்றார்கள்.தெற்கின் அபிவிருத்திக்கு கோடிகோடியாக பன்னாடுகளிடம் வாங்கும் சிறீலங்கா அரசாங்கத்திடம் வடக்கின் அபிவிருத்திக்கு பணம் இல்லையா?வடமாகாண சபை சிறீலங்கா அரசிடம் அபிவிருத்திக்கான நீதியினை கோரலாம் அல்லது உலகநாடுகளிடம் கோரலாம் என்பது கேள்விக்குறியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: , ,

Leave a Reply