இலங்கை சமாதான முயற்சி தென்னாபிரிக்காவுக்கு பெரும் சவாலாக அமையும் – சுரேஷ்

suresh-premachandran1அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகள் அரசியல் தீர்வை வழங்குவதை எதிர்க்கின்ற நிலையில் தென்னாபிரிக்காவின் முயற்சி சவாலானதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளதுடன் தற்போது தென்னாபிரிக்கா பேச்சுவார்த்தைக்கான பேச்சினையே மேற்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளது.

தென்னாபிரிக்காவின் விசேட பிரதிநிதி சிறில் ரமபோஷா நாளை திங்கட்கிழமை நண்பகல் இலங்கை வரவுள்ள நிலையில், நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை காலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்தித்து பேசவுள்ளார். இச்சந்திப்பின் போது என்ன விடயங்கள் கூட்டமைப்பினரால் முன்வைக்கப்படுமென அதன் ஊடக பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரனிடம் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில் கூறியதாவது:

‘அரசியல் தீர்வு தொடர்பான பேச்சுவார்த்தையில் அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையில் அனுசரணையாளராக தென்னாபிரிக்கா செயற்படுகின்றது. இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்குமிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு செயற்படுமாறு தென்னாபிரிக்காவை கோரியது.

நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமானால் இனப்பிரச்சினைக்கு அரசியல்தீர்வு காணப்பட வேண்டியது அவசியமென கண்டுகொண்டது. தீர்வின் மூலமே நல்லிணக்கம் தொடர்பில் பேசலாமென்ற ரீதியில் தென்னாபிரிக்கா செயற்படுகின்றது.

அரசியல் தீர்வை காண்பதற்கு முன் பேச்சுவார்த்தை தொடர்பில் மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட வேண்டும். இதற்கு சில விடயங்கள் செய்யப்பட வேண்டும்.

அதாவது, யுத்தம் முடிவடைந்து 5 வருடங்கள் கடந்துள்ள நிலையில் யுத்தப் பாதிப்பு நிவர்த்தி செய்யப்படாதுள்ளது. மீள்குடியேற்றம் முழுமையாக இடம்பெறாதுள்ளது. மக்களின் காணிகளை அரசாங்கம் இராணுவத்தை கொண்டு கையகப்படுத்தி வைத்துள்ளது மற்றும் அரசியல் கைதிகள் விடயம் ஆகியவற்றுக்கு இதுவரை தீர்வு காணப்படவில்லை. மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுவதற்கும் பேச்சுக்கு ஒத்துழைப்பதற்கும் யுத்தப் பாதிப்புகளை இல்லாமல் செய்ய வேண்டும்.

இதன் பின்னரே பேச்சுவார்த்தை நோக்கி நகர வேண்டும். நாங்கள் பல வருடங்களாக தெருவில் இருக்கும்போது யாருக்காக இவர்கள் பேச்சு நடத்துகின்றனர் என மக்கள் கேட்கின்றனர்.

தென்னாபிரிக்காவின் முயற்சியை வரவேற்கின்றோம். பேச்சுக்கு நாம் தயார். இனப்பிரச்சினைக்கு கௌரவமான முறையில் தீர்வு காணப்பட வேண்டும். அதற்கு முன்னர் மக்கள் மீள்குடியமர வேண்டும். மக்களின் இடங்களை இராணுவம் மீள வழங்க வேண்டும். இதனை பேச்சுக்கான முன் நிபந்தனையாக நாம் விதிக்கவில்லை. மக்கள் பேச்சில் நம்பிக்கை வைக்க, மக்களால் நிராகரிக்கப்படாதிருக்க இவ்விடயம் கையாளப்பட வேண்டும். இக்கோரிக்கையை எவரும் நியாயமென்பர். இவை தொடர்பில் தென்னாபிரிக்க விசேட பிரதிநிதியிடம் எடுத்துரைப்போம் என்றார்.

இவ்வாறான நிலையில் பேச்சுவார்த்தைக்கான பேச்சினையே தென்னாபிரிக்கா முன்னெடுக்கின்றது. இப்பிரச்சினைகளுக்கு அரசாங்கம் என்ன சொல்லப் போகின்றது. இத்துடன் இரு தரப்பு பேச்சில் இலங்கை அரசாங்கம் தரப்பில் யார் பங்கு கொள்வது, எத்தனை பேர் பங்கெடுப்பது, கூட்டமைப்பு சார்பில் பங்குபற்றுபவர்களை அரசாங்கம் அனுமதிக்குமா என்ற கேள்வியுள்ளது.

அரசாங்கத்திலுள்ள பங்காளி கட்சிகள் அரசியல் தீர்வை வழங்குவதை எதிர்க்கின்றனர். மக்கள் மீளகுடியேற காணி கொடுப்பதற்கு மறுக்கின்றனர். இந்நிலையில் தென்னாபிரிக்காவின் முயற்சி சவால்மிக்கது. தென்னாபிரிக்காவின் முன்னெடுப்பு அடுத்த கட்டத்துக்கு நகர்வதற்கு முதலாவது படி சரியாகயிருக்க வேண்டும்.

Tags: ,

Leave a Reply