தமிழர்களுடன் சேர்ந்து முஸ்லிம்கள் கிழக்கு மாகாணத்தில் ஆயுதம் ஏந்தி போராட்டம் நடாத்தியிருந்தால் இந்நாட்டின் வரலாறே மாற்றப்பட்டிருக்கும். முஸ்லிம்கள் ஒன்றுபட்டு பிரபாகரனுக்கு எதிராகச் செயற்பட்டனர்.
எமது முஸ்லிம்கள் ஒரு போதும் தனி ஈழம் வேண்டுமென்று கேட்கவில்லை. எமது நாட்டுக்கு அதிகளவு உதவிகளையும் அந்நிய செலாவணியையும் பெற்றுக் கொடுப்பது முஸ்லிம் நாடுகளேயாகும் என்று கொழும்பு மாநகர முதல்வர் ஏ.ஜே.எம். முஸம்மில் தெரிவித்துள்ளார்.
கொழும்பு பிரதேசத்திலுள்ள பல பள்ளிவாசல்களுக்கு நிதியுதவி வழங்கும் வைபவம் அண்மையில் நகர முதல்வரின் காரியாலயத்தில் நடைபெற்றது. அதன் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது;
நான் ஒரு முஸ்லிம் நகர பிதாவாக இருந்தாலும் இன மத பேதங்களுக்கு அப்பால் நின்று ஏனைய மதங்களைப் பின்பற்றுவோர்களையும் மனிதனாகவே நேசிக்கின்றேன். நான் மக்களுக்கு சேவை செய்யும் இன மத பேதங்களுக்கு அப்பால் நின்றே சேவை செய்து வருகின்றோம்.
எமது மாநகர சபையில் கூடுதலானோர் சிங்களவராக இருப்பினும் அவர்கள் சிங்கள இனத்தவர்களை விட முஸ்லிம் மக்களுக்கே அதிகம் சேவை செய்து வருகின்றனர். இந்த ஒற்றுமை சிறந்ததோர் முன்மாதிரி மாத்திரமல்ல. ஏனையோருக்கும் இது அவசியமானது.
கொழும்பு நகரில் வாழும் சகல இன மக்களையும் ஒற்றுமையாக வாழவைக்கும் ஒரு சூழலை ஏற்படுத்திக் கொடுப்பது நமது கடமையாகும் என்றாலும் ஒரு சில பௌத்த மக்கள் இதனைப் புரிந்து கொள்ளாமல் செயற்பட்டு வருகின்றனர். சில பௌத்த பிக்குகளும் இதனால் புரிந்து கொள்ளவில்லை. எனது பார்வையில் இது சர்வதேச ஒரு சூழ்ச்சியாவே நோக்குகின்றேன். சில காலம் ஹலால் பிரச்சினை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். தொடர்ந்தும் ஏதாவதொரு பிரச்சினையை கிளப்பிக் கொண்டிருந்தார்கள். அண்மையில் ஏற்பட்ட அளுத்கம தர்கா நகர் பேருவளை சம்பவங்களும் இவ்வாறானதொன்றே.
பிரபாகரனுடன் சேர்ந்து முஸ்லிம்கள் கிழக்கு மாகாணத்தில் ஆயுதம் ஏந்தி போராட்டம் நடாத்தியிருந்தால் இந்நாட்டின் வரலாறே மாற்றப்பட்டிருக்கும்.
















