ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (சுரேஸ் அணி) தமது கட்சியின் வருடாந்த மாநாட்டுக்காக தயாராகி வருவதாக அறிய முடிகின்றது.
அக்கட்சியின் 34வது வருட மாநாட்டை இம்மாதம் யாழ்ப்பாணத்தில் இரண்டு நாள்கள் நடத்துவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
19ம் திகதி யாழ்.நீராவியடி இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியிலும், மறுநாள் யாழ்.வீரசிங்கம் மண்டபத்திலும் மாநாடு நடைபெறவுள்ளது.
இந்த மாதம் ஈ.பி.ஆர்.எல்.எப், அடுத்த மாதம் இலங்கை தமிழரசு கட்சி, அதற்கடுத்த மாதம் ரெலோ, அதற்கு பின்னர் புளொட் என்று, தமிழ் தேசியக்கூட்டமைப்புக்குள் அங்கம் வகிக்கும் கட்சிகள் அனைத்தும் தத்தமது கட்சியின் மாநாட்டுக்காக தயாராகி வருகின்றன.
ஒரு கட்சி மூன்று இலட்சம் ரூபாய்கள் செலவழித்து முந்நூறு பேரை திரட்டி மாநாடு நடத்தி விட்டால், இன்னுமொரு கட்சி அதற்கு போட்டியாக ஐந்து இலட்சம் ரூபாய்கள் செலவழித்து ஐந்நூறு பேரை திரட்டி மாநாடு நடத்தி காட்டுவதாக வந்தவன் போனவன் நின்றவனிடம் எல்லாம் சவால் விடுவதாக உறுதியாக அறிய கிடைக்கின்றது.
தமிழ் தேசியக்கூட்டமைப்பை பதிவு செய்யப்பட்ட பலமிக்க ஒரு அரசியல் கட்சியாக்கி அதனை மக்கள் மயப்படுத்தும் உறுதிப்பாட்டை, உளத்தூய்மையை, சிந்தனையை, கடாசி குப்பைத்தொட்டிக்குள் வீசி விட்டு, தாம் சார்ந்த கட்சிகளை மட்டும் பலப்படுத்தி, தத்தமது கட்சிகளின் கொள்கையையும் இருப்பையும், பாதுகாப்பதை மட்டும் நோக்கமாகக்கொண்டு, கட்சிக்கு ஆள்பிடிக்கும் வேலைகளில் இவர்கள் அனைவரும் மிகத்தீவிரமாக இறங்கி விட்டனர்.
தேர்தல் வந்தால் மட்டுமே, தமிழ் தேசியக்கூட்டமைப்பு எனும் பெயரை தூசு தட்டி துடைத்துக்கொண்டு மக்களிடம் வாக்கு கேட்டு வருகின்றனர்.
கிட்டத்தட்ட தற்போது வடக்கில் இடம் பெறும் அரச படைகளின் காணி சுவீகரிப்புகளும், இவர்களின் வாக்கு சுவீகரிப்புகளும் ஒன்று தான் என்பதை, இவர்கள் தமது செயல்பாடுகளின் மூலம் நித்தமும் நிரூபித்து கொண்டிருக்கின்றனர்.
“கூட்டமைப்பை பதிவு செய்யாமல் இனிவரும் தேர்தல்களில் வாக்குகள் கேட்டு எங்களிடம் வரவே வேண்டாம்” என்று, மக்கள் ஒரேயடியாக அதுவும் உச்சந்தலை அடியாக மறுத்துக்கூறி, ஏதாவது ஒரு தேர்தலில் இவர்களுக்கு மோசமான படிப்பினையை கொடுத்தால் மாத்திரமே, “கூட்டமைப்பை பதிவு செய்தல்” எனும் இழுபறி விவகாரத்துக்கு முடிவு காண முடியும்.
இப்படி செய்வதற்கு கூட, மக்களை வழி நடத்த மிகச்சிறந்த மாற்றுத்தலைமைகள் வேண்டுமே! யாருலர்?
சிறப்புச்செய்தியாளர்,
-கவரிமான்-
















