சிசேரியன் மூலம் குழந்தை பெற்ற ஒரு பெண்ணின் வயிற்றில் மருத்துவர்கள் மறதியாக ரத்தத்தை துடைக்கும் மென்மையான துணியை வயிற்றில் வைத்து தையல் போட்டதால் அந்த பெண் பெரும் அவதிக்குள்ளான அதிர்ச்சி சம்பவம் ஒன்று டெல்லி அருகேயுள்ள நொய்டா நகரில் நடந்துள்ளது.
நொய்டா நகரை சேர்ந்த நம்ரதா பார்கவ் என்ற கர்ப்பிணி பெண் அந்த நகரில் உள்ள மிகவும் பிரபலமான மருத்துவமனையான ஃபோர்ட்டிஸ் மருத்துவமனையில் கடந்த டிசம்பர் மாதம் 22 ஆம் தேதி டெலிவரிக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிசேரியன் மூலம் குழந்தை பிறக்க வைப்பதற்காக டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்தனர். அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுத்தபின்னர் வயிற்றில் தையல் போடும்போது ரத்தத்தை துடைக்க பயன்படுத்தும் gauze என்ற துணியை வயிற்றினுள் மறதியாக வைத்துவிட்டு தையல் போட்டுள்ளனர்.
குழந்தையுடன் டிஸ்சார்ஜ் ஆன நம்ரதா, அதன்பின்னர் பல நேரங்களில் வயிற்று வலியுடன் துடித்துள்ளார். குழந்தைக்கு சரிவர பால்கூட கொடுக்க முடியாமல் அவதிப்பட்ட நம்ரதாவை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சோதனை செய்து பார்த்தபோது அவருடைய வயிற்றுல் டவல் அளவிற்கு துணி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக மீண்டும் அறுவை சிகிச்சை செய்து அந்த துணியை டாக்டர்கள் வெளியே எடுத்துள்ளனர். இதுகுறித்து நம்ரதாவின் கணவர் போலீஸில் புகார் செய்துள்ளார். நொய்டா போலீஸார் இதுகுறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
















