பாராளுமன்றத்தில் திரிணாமுல் கட்சி பெண் எம்.பிக்களை விபச்சாரிகள் என பா.ஜ.க.வினர் விமர்சனம் செய்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி அதிர்ச்சி குற்றஞ்சாட்டியுள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்துகொண்டிருந்தபோது அவையில் இருந்து திடீரென திரிணாமுல் காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் வெளியே வந்து பாராளுமன்ற வளாகத்தின் உள்ளேயே போராட்டத்தில் குதித்தனர். அப்போது பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள் தங்களை மிரட்டுவதாகவும், குடி போதையில் இருந்த பா.ஜ.க. எம்.பி. ஒருவர் தங்களை அடிக்க முயன்றாதோடு தங்களை விபச்சாரிகள் என திட்டியதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் குற்றம் சாட்டினர்.
இந்த தகவலை அறிந்தவுடன் மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடுங்கோபம் கொண்டார். அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், பாராளுமன்றத்தில் எங்கள் கட்சி எம்.பி.க்களுக்கு எதிராக வேண்டுமென்றே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது மிகவும் துரதிஷ்டவசமானது ஆகும். இருப்பினும் இதுபோன்ற கீழ்த்தரமான செயல்களில் ஈடுபட்டால் பயந்து ஓடிவிட மாட்டோம். ஏழை எளிய மக்களுக்கு எதிரான நடவடிக்கையை பாரதிய ஜனதா அரசு நிறுத்தும் வரையில் தொடர்ந்து போராடுவோம். எங்களது ஆக்கபூர்வமான பங்கை தொடர்ந்து ஆற்றுவோம்
மேலும் இந்த ரயில்வே பட்ஜெட்டில் மேற்கு வங்காள மாநிலம் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதற்காகத்தான் எங்கள் கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் பா.ஜ.க.வினர் எங்களை நேருக்கு நேர் எதிர்க்க முடியாமல் கேவலமாக எங்களது பெண் எம்.பி.க்களை விபச்சாரி என விமர்சித்துள்ளனர்” என்றார்.
















