புலம்பெயர் விடுதலைப் புலிகளுக்கும் மங்களவுக்கும் நெருங்கிய தொடர்பு – விமல்

கோத்தபாய ராஜபக்ஷவிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளமையின் தேவை ஐக்கிய தேசியக் கட்சிக்கு மாத்திரமே தற்போது காணப்படுகின்றது. புலம்பெயர் விடுதலைப் புலிகளின் அமைப்புக்களுடன் நிதியமைச்சர் மங்கள சமரவீரவிற்கு நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் வெற்றியினையும், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் அரசியல் பிரவேசத்தினையும் தடுக்கும் சதிகளை அரசாங்கம் தற்போது மேற்கொண்டு வருகின்றது . இதன் ஒரு கட்டமே அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இரு வழக்குகளாகும்.

இவ்வழக்குகளுக்கான திட்டம் ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய தரப்பினர்களான நிதியமைச்சர் மங்கள சமரவீர, மலிக் சமரவிக்ரம , மற்றும் மேலும் முக்கிய தரப்பினர்கள் ஒன்றிணைந்தே இச்சதி திட்டத்தினை தீட்டியுள்ளார்கள்.

புலம்பெயர் தமிழர் ஒருவரும் 2007ஆம் ஆண்டு தாம் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு கோத்தபாய ராஜபக்ஷவின் நேரடி உத்தரவினால் தடுத்து வைக்கப்பட்டு சித்திரைவதைக்குள்ளாக்கப்பட்டதாகவும் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க தொடர்பில் முறையான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்த போது லசந்த விக்ரமதுங்கவின் படுகொலையின் பிண்ணனியில் அப்போதைய இராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் தரப்பினர் நேரடியாக தொடர்புப்பட்டுள்ளார்கள் என்று பாராளுமன்றத்தில் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவிற்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சியின் சதிதிட்டத்தின் வெளிப்பாடே அமெரிக்க நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இரு வழக்குகளாகும். ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்ள அச்சப்பட்டு கோழைத்தனமாக குறுக்கு வழியில் வெற்றியினை தேடும் அரசாங்கத்தின் செயற்பாடு முறையற்றது என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலையின் பிண்ணனியில் முன்னாள் இராணுவதளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் கீழ் செயற்பட்ட குழுவே உள்ளது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களும் தெளிவுற குறிப்பிட்டமை தொடர்பில் எவரும் அக்கறை கொள்ளவில்லை ஏன் எனவும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!