சோமாலியா நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில் பாராளுமன்ற வளாகம் மீது இஸ்லாமிய போராளிகள் அதிஅடி தாக்குதல் நடத்தினர். அந்த அதிர்ச்சியில் இருந்து நாட்டு மக்கள் இன்னும் வெளிவராத நிலையில் நேற்று சோமாலிய நாட்டு அதிபர் மாளிகையில் பெட்ரோல் குண்டுகள் நிரப்பிய கார் ஒன்று வெடித்து சிதறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று இரவு சோமாலியா அதிபர் மாளிகையின் காம்பவுண்டு சுவர் மீது இஸ்லாமிய தீவிரவாதிகள் பயங்கர வெடிகுண்டுகள் நிரப்பிய கார் ஒன்றை மிகவேகமாக ஓட்டிவந்து மோதி தாக்குதல் நடத்தியதாக உறுதிப்படுத்தப்பட்ட செய்திகள் தெரிவிக்கின்றன. வெடிகுண்டு நிரப்பிய கார் காம்பவுண்ட் சுவரில் மோதியதால் சுவர் கடும் சேதம் அடைந்தது.
அந்த பகுதியில் பாதுகாப்புக்கு நின்றிருந்த காவல்துறை படையினர் காரில் வந்தவர்கள் ஷபாப் இயக்கப் போராளிகள் என்றும், மொத்தம் ஐந்து பேர் காரில் இருந்ததாகவும், மூவரை தாங்கள் சுட்டுக்கொன்று விட்டதாகவும், மீதி இரண்டு பேர் கார் வெடிகுண்டு சம்பவத்தில் மரணம் அடைந்துவிட்டதாகவும் தெரிவித்தனர். இந்த தகவலை சோமாலிய நாட்டு உள்துறை அமைச்சர் அப்துல்லாஹி கோடா பாரே அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளார்.
கார் வெடிகுண்டு சம்பவம் நடந்த சமயத்தில் அதிபர், தனது குடும்பத்தினர்களுடன் வெளியே சென்றிருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த தாக்குதலுக்கு பின்னர் அதிபர் மாளிகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வெடிகுண்டு சம்பவத்தில் 4 போலீஸார் படுகாயம் அடைந்து பின்னர் மருத்துவமனையில் மரணம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.
















