ஜேர்மனியிடம் சொந்த மண்ணில் இதுவரை சந்திக்காத பெரும் தோல்வியை சந்தித்து அரையிறுதியுடன் வெளியேறியது பிரேஸில்.
இருபதாவது உலகக்கிண்ணத் தொடர் பிரேஸிலில் நடக்கின்றது. இதன் முதல் அரையிறுதி ஆட்டம் இன்று அதிகாலை 1.30 மணிக்கு (இலங்கை நேரம்) நடந்தது. இதில் பிரேஸில், ஜேர்மனி அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் பிரேஸிலின் இளம் நட்சத்திர ஆட்டக்காரரான நெய்மர் காயம் காரணமாகவும் அணித்தலைவர் தியாகோ சில்வா போட்டித் தடை காரணமாகவும் களமிறங்கவில்லை.
இருவரும் அணியில் இல்லாதது அணிக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்பட்டது. ஆட்டம் ஆரம்பித்ததுமே ஜேர்மனி தனது பலத்தை நிரூபிக்கத் தொடங்கியது. 11 ஆவது நிமிடத்தில் ‘கோர்ணர்’ வாய்ப்பைப் பயன்படுத்தி ரொனி க்ரூஸ் அடித்த பந்தை முல்லர் கோலாக்கினார். தொடர்ந்து 23 ஆவது நிமிடத்தில் குளோஸ் கோல் அடித்தார். ஜேர்மனியின் இந்தக் கோல்களால் பிரேஸில் வீரர்களும் – ரசிகர்களும் அதிர்ச்சியடைந்தனர். ஆனால் ஜேர்மனியின் ரொனி க்ரூஸ் 24, 26 ஆவது நிமிடங்களில் கோல் போடவே பிரேஸிலியர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.
மீண்டும் 29 நிமிடத்தில் ஜேர்மனியின் சமி கெடிரா கோல் அடித்தார். பதிலுக்கு பிரேஸில் வீரர்களால் எதுவுமே செய்ய முடியவில்லை. முதல் பாதியாட்டத்தில் 5:0 என்ற கணக்கில் கோல் கணக்கில் ஜேர்மன் அணி முன்னிலை வகித்தது. இரண்டாம் பாதியாட்டத்திலும் ஜேர்மனியே ஆதிக்கம் செலுத்தியது. இதில் கிடைத்த வாய்ப்புக்களை பிரேஸில் வீணாக்கிக் கொண்டிருந்தது.
அதையும் மீறி அடித்த பந்துகளை ஜேர்மனியின் கோல் காப்பாளர் மனுவேல் நியூர் தடுக்கவே பிரேஸில் வீரர்களால் எதையும் செய்ய முடியவில்லை. தொடர்ந்து 69, 79 ஆவது நிமிடங்களில் ஜேர்மனியின் அண்ட்ரே ஸ்குர்ரெல் கோல்களை அடிக்கவே ஜேர்மனி 7:0 என்ற கோல் கணக்கில் சாதனை படைத்திருந்தது. எனினும் தொடர்ந்த ஆட்டத்தின் இறுதி (90) நிமிடத்தில் பிரேஸிலின் ஒஸ்கார் கோல் அடித்து ஆறுதல் அளித்தார்.
முடிவில் 7:1 என்ற கோல் கணக்கில் ஜேர்மனி வெற்றி பெற்று எட்டாவது தடவையாக இறுதியாட்டத்துக்கு முன்னேறியது. பிரேஸில் உலகக்கிண்ண வரலாற்றில் இதுவரை கண்டிராத மிகப்பெரிய தோல்வி இதுவாகும்.
















