அவுஸ்ரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொறிசன், நேற்றுப் பிற்பகல் யாழ்ப்பாணத்துக்கு இரகசியப் பயணம் ஒன்றை மேற்கொண்டதாக, அவுஸ்ரேலிய வானொலி செய்தி வெளியிட்டுள்ளது. சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்ரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொறிசன், அவுஸ்ரேலிய அரசாங்கத்தினால், சிறிலங்கா கடற்படைக்கு வழங்கப்பட்ட இரண்டு ரோந்துப் படகுகளை கொழும்புத் துறைமுகத்தில் வைத்து சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவிடம் கையளித்தார்.
இதையடுத்து. அவர் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுடன் பேச்சுக்களை நடத்தியிருந்தார். இந்தப் பேச்சுக்களை அடுத்தே, ஸ்கொட் மொறிசன், யாழ்ப்பாணத்துக்கு இரகசியப் பயணத்தை மேற்கொண்டதாக அவுஸ்ரேலிய வானொலி தகவல் வெளியிட்டுள்ளது. நேற்றுப் பிற்பகல், உலங்கு வானூர்தி மூலம், அவர் யாழ்ப்பாணம் சென்றதாகவும், அவருடன், கொழும்பிலுள்ள அவுஸ்ரேலியத் தூதுவர் மற்றும் அதிகாரிகளும் அங்கு சென்றதாகவும், அவுஸ்ரேலிய வானொலியின் இந்தியச் செய்தியாளர் ஸ்டீபனி மார்ச் கூறியுள்ளார். யாழ்ப்பாணத்தில் அவர், வடக்கு மாகாண ஆளுனர் சந்திரசிறி மற்றும் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் ஆகிய சிறிலங்கா அரசாங்கப் பிரதிநிதிகளை மட்டுமே சந்தித்ததாகவும், தமிழ் அரசியல் பிரதிநிதிகளையோ, சிவில் சமூகப் பிரதிநிதிகளையோ அவர் சந்திக்கவில்லை என்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் தெரிவித்ததாகவும் அவுஸ்ரேலிய வானொலி தெரிவித்துள்ளது.
எனினும், வடக்கு மாகாணத்தில் பெரும்பான்மையான மக்களின் ஆதரவுடன் முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள சி.வி.விக்னேஸ்வரனை, ஸ்கொட் மொறிசன் சந்திக்கவில்லை என்பதையும், அவுஸ்ரேலிய வானொலியின் செய்தியாளர் சுட்டிக்காட்டியுள்ளார். கூட்டமைப்பினரை ஸ்கொட் மொரிசன் சந்திக்காதது ஏன்? மாவை எம்பி கண்டனம் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைச் சந்திக்கவில்லையென பாராளுமன்ற உறுப்பினர் மவை சேனாதிராஜா குற்றம் சாட்டியுள்ளார்.
அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து, வடமாகாண ஆளுநர் உட்பட அரசாங்க தரப்பை மட்டும் இரகசியமாகச் சந்தித்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. அவுஸ்திரேலிய அமைச்சர் இவ்வாறு செய்தமை பெரும் தவறு என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மவை சேனாதிராஜா சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், மொரிசன் தம்மை சந்திப்பார், பேச்சுவார்த்தை நடத்துவார் என பெரிதும் எதிர்பார்த்ததாகவும், சந்திக்காதது பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது எனவும் அவர் தெரிவித்தார். இவ்விடயம் குறித்து அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு கடிதம் எழுதி தமது கண்டனத்தை தெரிவிக்கவுள்ளதாகவும் இலங்கையிலுள்ள அவுஸ்திரேலிய தூதுவரிடம் இவ்விடயம் குறித்து பேசவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை, அவுஸ்திரேலிய அரச தரப்பு இலங்கை வரும்போது தம்மை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதாக தெரிவித்திருந்ததாக மாவை எம்பி குறிப்பிட்டார்.
















