கடற்கரையில் காதல் விளையாட்டு: எல்லை மீறும் காதலர்களுக்கு கடிவாளம்

loveபெசன்ட்நகர் கடற்கரையில் வைத்து நேற்று முன் தினம் இரவு காதலன் ஏழுமலையால் கழுத்தை நெரித்து நித்யா கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதலித்து விட்டு ஏமாற்றிய காரணத்துக்காக நித்யா அணிந்திருந்த சுடிதார் துப்பட்டாவாலேயே அவரது கழுத்தை நெரித்து தனது காதல் வெறியை தீர்த்துக் கொண்டதாக ஏழுமலை அளித்திருக்கும் திடுக்கிடும் வாக்கு மூலத்தால் போலீசாரும் ஆடிப்போய் கிடக்கிறார்கள்.

பெசன்ட்நகர் கடற்கரையில் ஆள்நடமாட்டம் இருந்த போதே நித்யாவின் கழுத்தை துப்பட்டாவால் இறுக்கி கொலை செய்ததாக கூறியிருக்கும் ஏழுமலை, இதனை வழக்கமான காதல் விளையாட்டு என நினைத்து யாரும் தடுக்க முன்வரவில்லை என்றும் குண்டை தூக்கி போட்டுள்ளார். இது போலீசுக்கு கூடுதல் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

இதுபோன்று மேலும் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெற்று விடக் கூடாது என்பதில் போலீசார் மிகுந்த கவனமுடன் செயல்பட தொடங்கியுள்ளனர். மெரினா கடற்கரை மற்றும் பெசன்ட் நகர் கடற்கரை ஆகியவற்றில் எப்போதுமே காதலர்கள் அதிக அளவில் கூடுவார்கள். குறிப்பாக சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில், திரும்பிய திசையெல்லாம் காதல் ஜோடிகளே கண்ணுக்கு தெரிவார்கள்.

இவர்களில் நாகரீகமாக காதல் செய்யும் ஜோடிகளை விரல் விட்டும் எண்ணி விடலாம். மற்றவர்கள் எல்லாம் மெய் மறந்தே காட்சி அளிப்பார்கள். பொது இடத்தில் செய்யக் கூடாதவைகளையெல்லாம், செய்யும் இவர்களின் சேட்டை சில நேரங்களில் எல்லை மீறிப்போகும். இதனால் குடும்பத்துடன் கடற்கரைக்கு செல்பவர்கள் முகம் சுளிக்கும் நிலையே இருந்து வருகிறது.

நம்மைச் சுற்றி ஆட்கள் இருக்கிறார்களே, நாம் தப்பு செய்கிறோமே என்ற எண்ணம் கூட இல்லாமலேயே சில காதலர்கள் நடந்து கொள்கிறார்கள்.­ இதனை கட்டுப்படுத்த போலீசாரும் அவ்வப்போது அதிரடி நடவடிக்கைகளை மேற் கொள்கிறார்கள். ஆனால் கடற்கரையில் குவிந்து, கண் மூடித்தனமாக காதலிக்கும் காதலர்களை மட்டும் கட்டுப்படுத்தவே முடியவில்லை.

பெசன்ட்நகரில் இளம்பெண் நித்யா கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு பின்னர், போலீசார் மீண்டும் உஷாராகி உள்ளனர். கடற்கரையில் காலை 10 மணியில் இருந்தே குவியத்தொடங்கும் காதலர்களுக்கு வாட்டி எடுக்கும் வெயிலெல்லாம் ஒரு பொருட்டே கிடையாது. கடும் சூட்டையும் பொருட் படுத்தாமல் சூடு சொரணையின்றி காதல் செய்ய தொடங்கி விடுகிறார்கள். இப்படி தனிமையில் அமர்ந்து காதல் செய்யும் ஜோடிகளை கடந்த 2 நாட்களாக போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

அண்ணா சதுக்கம் மற்றும் மெரினா போலீசார் தனியாகவோ, மறைந்திருந்தோ கடற்கரை மணலில் அமர்ந்து காதல் செய்யும் ஜோடிகளை கண்டுபிடித்து, சாலையோரமாக உள்ள பூங்காவில் சென்று அமரச் சொல்கிறார்கள்.

ஒருசில ஜோடிகள், நாங்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போகிறோம். எங்களை ஏன் தொந்தரவு செய்கிறீர்கள் என்று போலீசிடம் எதிர் கேள்வியும் கேட்கிறார்கள். இது போன்றவர்களிடம் செல்போனை வாங்கி அவர்களின் பெற்றோருக்கும் தகவல் கூறி வருகிறார்கள்.

இப்படி போலீசார் பேசிய போது, ஒருசில பெற்றோர் ‘‘நாங்கதான் சார் அவங்கள அனுப்பிவைச்சோம். 2 பேரும் திருமணம் செய்யப் போறாங்க சார்’’ என்றும் கூறியுள்ளனர். காதலர்களை கட்டுப்படுத்த நினைக்கும் போலீசாருக்கு இது போன்ற பெற்றோர்களின் ஆதரவு பின்னடைவையே ஏற்படுத்தி இருக்கிறது. இருப்பினும் மெரினா கடற்கரை பகுதி முழுவதிலுமே அத்துமீறும் காதல் ஜோடிகளை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

காதலர்களே… கண்ணியத்துடன் காதலியுங்கள்…

Tags: , ,

Leave a Reply