40 ஆண்டு காலமாக டெல்லியில் இயங்கி வந்த ஐ.நா. ராணுவ கண்காணிப்பு குழுவின் அலுவலகத்தை உடனடியாக காலி செய்ய மத்திய அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் கடந்த 1949ஆம் ஆண்டு ஐ.நா. ராணுவ கண்காணிப்பு குழு (யு.என்.எம்.ஓ.ஜி.ஐ.பி) ஒன்று, இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் அமைதியை ஏற்படுத்துவதற்காக அமைக்கப்பட்டது. டெல்லியின் முக்கிய பகுதியான புராண் கிலா சாலையில் 7 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான பங்களாவில் இந்த அலுவலகம் அமைக்கப்பட்டிருந்தது.
இந்த அலுவலகம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும், எந்தவித உருப்படியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. காஷ்மீர் எல்லைப் பிரச்னையில் இந்த அமைப்பு இதுவரை எந்த ஒரு உருப்படியான நடவடிக்கையும் எடுக்கவில்லை என கடந்த சில ஆண்டுகளாக இந்திய அரசு அதிருப்தியில் இருந்தது.
இந்நிலையில், நரேந்திர பிரதமர் மோடி தலைமையிலான புதிய மத்திய அரசு பதவியேற்றதும் ஒன்றுக்கும் உதவாத இந்த ஐ.நா. ராணுவ கண்காணிப்பு குழு அலுவலகத்தை காலி செய்யுமாறு இன்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதனால் ஐ.நா. ராணுவ கண்காணிப்பு குழு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
















