பீஜிங், சீனாவின் செய்தி நிறுவனமான சிசிடிவி ஆப்பிளின் ஐபோன் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது என செய்தி வெளியிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஐபோன் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களை பிற உளவாளிகளால் கண்காணிக்க முடியும் அவர்களுடைய இடத்தையும் டிராக் செய்ய முடியும் என அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.
இதுபற்றி, பீஜிங் பல்கலைக்கழகத்தின் இணைய பாதுகாப்பு கல்வி நிறுவனத்தின் இயக்குனர் மா டிங் கூறுகையில், ‘ஐபோனில் உள்ள பிரிக்வன்ட் லொகேஷன்ஸ் வசதியின் மூலம் அதை பயன்படுத்துவர்களுடைய மிகவும் சென்சிட்டிவ்வான டேட்டாக்களையும் தெரிந்து கொள்ள முடியும். மேலும், ஐபோன் வைத்திருக்கும் ஒருவர் எங்கெல்லாம் அடிக்கடி செல்கிறார் என்பதையும் கண்டுபிடிக்க முடியும். ஆனால், அந்த வசதியை சுவிட்ச் ஆப் செய்து வைக்கும் வசதியும் ஐபோனில் உள்ளது. இருந்தாலும், ஒரு பத்திரிகையாளர் ஐபோனை வைத்திருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவரை இந்த டிராக்கிங் வசதி எங்கெல்லாம் செல்கிறார் என்று காட்டிக் கொடுத்துவிடும். அப்புறம் அவருடைய பாதுகாப்பு கேள்விக்குறிதான்.’ என்றார்.
ஐபோனில் உள்ள பிரிக்வன்ட் லொகேஷன்ஸ் வசதி தற்போது ஐஓஸ் 7 இயங்குதளத்தில் மட்டுமே உள்ளது. இந்த இயங்குதளத்துடன் கூடிய ஐபோன் ஹேன்ட்செட்டுகள் 2013-ல் இருந்து வெளிவந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில், இதுகுறித்து ஆப்பிள் நிறுவனம் எந்த கருத்தையும் உடனடியாக வெளியிடவில்லை.
அமெரிக்காவின் உளவு நிறுவனமான என்எஸ்ஏவின் முன்னாள் அதிகாரி எட்வர்ட் ஸ்நோடென், ஏற்கனவே அமெரிக்கா சீனாவை உளவு பார்த்து வருவதாக கூறியது குறிப்பிடத்தக்கது.
















