கடும்போக்காளர்களை திருப்திப்படுத்தவே வடமாகாண ஆளுநராக மீண்டும் சந்திரசிறி நியமனம்!- ஹக்கீம் ஆதங்கம்.

rauf-hakeemதெற்கில் இருக்கும் கடும் போக்காளர்களை திருப்திப்படுத்தும் நோக்குடனேயே வடமாகாண ஆளுநராக மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் தமிழ் கூட்டமைப்புக்கு ஏற்கனவே கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளின் அடிப்படையில் நல்லெண்ண சமிக்ஞையை வெளிப்படுத்த கிடைத்த வாய்ப்பை அரசு தவறவிட்டுள்ளது எள நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

மேலும் வடக்கில் யுத்தம் முடிவுக்கு வந்த நிலையிலும் இராணுவ பிடியைத் தளர்த்தவில்ழைல என்பதை எடுத்துக்காட்டும் வகையில் இந்த நியமனம் அமைந்துள்ளது. நாட்டில் எந்தவொரு பகுதியிலும் இல்லாதவாறு வடக்கு கிழக்கில் இராணுவ அதிகாரிகளை ஆளுநராக நியமிக்கும் போக்கு தொடர்ந்து வருகின்றது. அதேபோன்று திருகோணமலையில் படை அதிகாரியொருவர் அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் பாரம்பரியம் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். வடமாகாண ஆளுநராக மேஜர் ஜெனரல் சந்திரசிறியின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டமை குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது, ஏற்கனவே வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுடனான சந்திப்பின்போது வடமாகாண ஆளுநராக சிவிலியன் ஒருவரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உறுதியளித்திருந்தார். இந்நிலையில் ஆளுநர் சந்திரசிறியின் பதவிக்காலம் முடிவடைந்த பின்னர் சிவில் அதிகாரி ஒருவரை ஆளுநராக அரசாங்கம் நியமிக்கும் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. எனினும் அது நிறைவேறவில்லை.

இதன்மூலம் அரசாங்கம் தனது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் சிறந்த வாய்ப்பை இழந்துள்ளது என்றே கருதவேண்டும். இதனால் நம்பகத்தன்மை இல்லாத சூழ்நிலையே உருவாகியுள்ளது. தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்குடன் ஒருபுறம் தென்னாபிரிக்காவின் அனுசரணையுடன் பிள்ளையார் சுழி போடப்பட்டுள்ள நிலையில் மீண்டும் விரிசல்கள், நம்பிக்கையீனங்கள் தோன்றும் வகையில் இச்சம்பவம் அமைந்துள்ளதாகவே கருதவேண்டியுள்ளது. இது எந்த வகையிலும் ஆரோக்கியமானதாக அமைய மாட்டாது என்றார். தமிழர் பிரச்சினையினை தீர்க்க விரும்பாத அரசு: மங்கள தமிழர் பிரச்சினையினை தீர்ப்பதற்கு இந்த அரசாங்கம் துளியளவும் விரும்பவில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

வடமாகாணத்துக்கு சிவிலியன் ஒருவரை ஆளுநராக நியமிக்காமல் மீண்டும் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறியை ஆளுநராக்கியதன் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகளானது இனங்களுக்கிடையில் ஒரு போதும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தாது மாறாக மேலும் மேலும் குரோதத்தையும் இன முரண்பாடுகளையுமே தோற்றுவிக்கும் எனவும் அவர் தெரிவித்தார். மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறியை மீண்டும் ஆளுநராக்கியமை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே இந்த தகவலை வெளியிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி தேசிய பிரச்சினையினை தீர்ப்பதற்கான நல்லதொரு சந்தர்ப்பம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கிடைத்தது. இது போன்ற சந்தர்ப்பம் இலங்கையின் அரசியல் வரலாற்றில் வேறு எந்த அரசியல் தலைவருக்கும் கிடைக்கவில்லை. யுத்தம் முடிவடைந்து ஐந்து வருடங்கள் கடந்துள்ளன. ஆனால் இன்னும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் மனங்களை வெற்றி கொள்ளும் வகையிலான வேலைத்திட்டங்களை அரசாங்கம் இதுவரையில் மேற்கொள்ளவில்லை.

மாறாக அம்மக்களின் மனங்களை புண்படுத்தும் செயற்பாடுகளையே மேற்கொண்டு வருகிறது. வடக்கில் அளவுக்கு அதிகமாகவுள்ள இராணுவத்தினரை வெளியேற்றி விட்டு அங்கு சிவிலியன் ஒருவரை ஆளுநராக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வந்த நிலையில் அதனையெல்லாம் பொருட்படுத்தாமல் தாம் நினைப்பதைத் தான் செய்வோம் என்பதை இந்த அரசாங்கம் நிரூபித்துள்ளது. சாதாரணமான ஒரு ஆளுநர் நியமன விடயத்தில் விட்டுக் கொடுக்காத இந்த அரசாங்கம் தமிழர்கள் பிரச்சினையை எப்படி தீர்த்து வைக்கப்போகிறது. எனவே தேசிய பிரச்சினைகளை தீர்க்கும் எண்ணம் இல்லை என்பதை தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளது.

சர்வதேச அழுத்தங்கள் உச்சத்தில் இருக்கும் இத்தருணத்தில் அரசாங்கம் மேற்கொண்டுவரும் இவ்வாறான செயற்பாடுகளானது மேலும் மேலும் சிக்கலான நிலைமையினையே தோற்றுவிக்கும். அது மாத்திரமல்லாமல் உள்நாட்டிலும் குழப்பங்களும் அமைதியின்மையுமே ஏற்படும். அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயற்பாடுகளை முடிவுக்கு கொண்டுவந்து நாட்டில் மீண்டும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்கு இன மத மற்றும் மொழி வேறுபாடுகளை மறந்து அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Tags: , ,

Leave a Reply