153 தமிழ் அகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள படகாக இருக்கலாம் என்ற புகைப்படம் முதல் தடவையாக வெளியாகியுள்ளது.

boat_153 இலங்கை அகதிகளை ஏற்றிய நிலையில் அவுஸ்திரேலியாவினால் இடைமறிக்கப்பட்ட படகாக இருக்கலாம் என்ற புகைப்படத்தை அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று முதல் தடவையாக பிரசுரித்துள்ளது.

இந்த படகில் இருந்தவர்கள் அவுஸ்திரேலிய கடற்படையினரால் வேறு இடம் ஒன்றுக்கு மாற்றப்பட்டிருக்கலாம் என்று அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதத்தில் இந்திய பாண்டிச்சேரியில் இருந்து புறப்படும் முன்னர் எடுக்கப்பட்டதாக கூறப்படும் புகைப்படமாக இருக்கலாம் என்ற அடிப்படையிலேயே இந்த படத்தை ஊடகம் பிரசுரித்துள்ளது.

இந்தநிலையில் குறித்த புகைப்படத்தில் உள்ள படகு அகதிகள் வந்த படகு என்பதை உறுதிப்படுத்த முடியாதிருப்பதாக ஊடகம் தெரிவித்துள்ளது.

படகில் இருந்த ஒருவர் தெரிவித்த படகின் நிறத்துக்கும் இந்த படகுக்கும் இடையில் வித்தியாசம் இருப்பதே இதற்கான காரணம் என்று ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

எனினும் அதிகாரிகள் அடையாளம் காணாதவகையில் பொதுநிறமற்ற வர்ணத்தையே மனித கடத்தல்காரர்கள் பயன்படுத்துவதாக படகில் உள்ள அடைக்கலம் கோருவோரின் உறவினர்கள் அவுஸ்திரேலிய ஊடகத்துக்கு தெரிவித்துள்ளனர்.

குறித்த படகு தற்போது அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை கடற்பகுதிக்கு இடையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை குறித்த படகு புகைப்படத்தை அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசனின் அலுவலத்தில் குறித்த ஊடகம் காண்பித்த போதும் அது தொடர்பில் கருத்துக்கூற அவரின் அலுவலகம் மறுத்துவிட்டது.

இந்த விடயம் நீதிமன்றத்தில் இருப்பதால் அது தொடர்பில் கருத்து கூறமுடியாது என்று அவரின் அமைச்சு அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையில், அடைக்கலம் கோரிவோர் படகில் இருக்கும் தமிழ் அகதி ஒருவர், தமது பெயரை குறிப்பிடாமல் அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் தம்மை இலங்கை கடற்படையினரை விட சிறப்பாக கவனிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை 153 இலங்கை அகதிகள் பிரச்சினை தொடர்பான வழக்கு விசாரணை நாளை அவுஸ்திரேலிய நீதிமன்றத்தில் மீண்டும் நடைபெறவுள்ளது.

Tags: , ,

Leave a Reply