எமக்கு கௌரவம் இருக்கிறது….. விருப்பமில்லை என்றால் சொல்லுங்கள் விலகிக் கொள்கிறோம்: மகிந்தவிடம் கூறிய ரமபோசா.

Ramaphosaதென்னாபிரிக்காவுக்கு கௌரவம் இருப்பதாகவும், தேவையில்லை எனக் கூறினால், தாம் நல்லிணக்க செயற்பாடுகளில் இருந்து விலகி கொள்வதாகவும் அந்நாட்டின் உப ஜனாதிபதியும் இலங்கைக்கான விசேட பிரதிநிதியுமான சிறில் ரமபோசா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் நேரடியாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இலங்கைக்கு அண்மையில் விஜயம் செய்த ரமபோசா தலைமையிலான குழுவினர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரிலேயே தாம் இங்கு வந்ததாகவும் தமது நாட்டின் கௌரவத்தை பாதுகாக்கும் வகையில் எந்த சந்தர்ப்பத்திலும் தம்மிடம் கோரப்பட்டுள்ள செயற்பாடுகளில் இருந்து விலகத் தயாராக இருப்பதாகவும் சிறில் ரமபோசா, ஜனாதிபதியிடம் கூறியுள்ளார். தென்னாபிரிக்க உப ஜனாதிபதி சுற்றுலா பயணியாகவே இலங்கை வருவதாகவும், இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்புக்கு அமைய அவரது விஜயம் அமையவில்லை எனவும் அரசாங்கத்தில் உள்ள சில தரப்பினர் தெரிவித்திருந்தனர்

இது குறித்து வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிடம் கருத்து வெளியிட்டுள்ள ரமபோசா, அரசாங்கத்தில் உள்ள சில தரப்பினர் தமது விஜயம் தொடர்பில் பல்வேறு நிலைப்பாடுகளை கொண்டிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் இலங்கை பிரச்சினை தொடர்பில் இந்தியா கொண்டுள்ள நிலைப்பாடு மற்றும் அவர்களின் செயற்பாடுகள் தொடர்பில் எவ்விதமான அழுத்தங்களையும் கொடுக்க தென்னாபிரிக்கா தயாரில்லை என்றும் ரமபோசா, அமைச்சர் பீரிஸிடம் திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண இந்தியாவின் உதவியை பெற்றுக்கொள்ள வேண்டும் என தான் நம்புவதாகவும் ரமபோசா, ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் கூறியுள்ளார். இந்தியாவிடம் இருந்து பெறும் அப்படியான உதவியின் மூலம் இலங்கை இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என தெரிவித்துள்ள அவர், இலங்கையின் இனப்பிரச்சினைக்கு இணையான பிரச்சினைகளை எதிர்நோக்கிய இனங்களின் அனுபவங்களை பெறுவதன் முக்கியத்துவம் குறித்தும் ஜனாதிபதிக்கு எடுத்துரைத்துள்ளார்.

Tags: , ,

Leave a Reply