இலங்கை ஜனாதிபதி மஹிந்தவின் நடவடிக்கை தான்தோன்றித்தனமானது: இரா சம்பந்தன் கடும் கண்டனம்!

sambanthan7முன்னாள் இராணுவ அதிகாரியான சந்திரசிறியை வடக்கு மாகாண ஆளுனராக இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நியமித்துள்ளது தான்தோன்றித்தனமான, கேவலமான, அசிங்கமான நடவடிக்கை என்று சீற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர். இரா.சம்பந்தன்.

இது தொடர்பாக தமிழ் ஊடகம் ஒன்றுக்கு அவர் செவ்வி அளித்துள்ளார். அச் செவ்வியில்,

வடக்கு மாகாண ஆளுநராக சந்திரசிறியின் மீள் நியமனம், வடக்கு மாகாண சபைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்கால நடவடிக்கைகள் உட்பட சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோருடன் எதிர்வரும் 19ஆம் நாள் மாலை யாழ்ப்பாணத்தில் கூடி ஆராயவுள்ளோம்.

இதன்பின்னர் மறுநாள் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறும் ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் 34ஆவது மாநாட்டில் விசேட உரையாற்றவுள்ளேன்.

முன்னாள் இராணுவத் தளபதியான சந்திரசிறியை ஆளுநர் பதவியிலிருந்து நீக்கி அவரின் இடத்திற்கு சிவில் பிரதிநிதி ஒருவர் நியமிக்கப்படவேண்டும் எனத் தொடர்ச்சியாக வலியுறுத்தி வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் நடைபெற்ற வடக்கு மாகாண சபைத் தேர்தலில் வடக்கு மக்கள் சரித்திர வெற்றியடைய வைத்தனர்.

இதனையடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குள் வடக்கு மாகாண சபை வந்த பின்னர் நடைபெற்ற இரண்டாவது அமர்வில் மாகாண சபையின் நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் முன்னாள் இராணுவத் தளபதி சந்திரசிறியை ஆளுநர் பதவியிலிருந்து நீக்கி அவரின் இடத்திற்கு சிவில் பிரதிநிதி ஒருவரை நியமிக்கவேண்டும் எனக் கோரி வடக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதுமட்டுமன்றி, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பில், முன்னாள் இராணுவத் தளபதியான ஜி.ஏ.சந்திரசிறியின் பதவிக் காலம் முடிவடைந்ததும், அவருக்கு எதுவித பதவி நீடிப்பும் வழங்கப்படாது என்றும், சிவில் ஆளுநர் ஒருவர் நியமிக்கப்படுவார் என்றும் முதலமைச்சரிடம் சிறிலங்கா அதிபர், உறுதிமொழி வழங்கியிருந்தார்.

ஆனால், வடக்கு மக்களின் இறைமைக்கு மதிப்பளிக்காமல், மக்களின் அமோக வாக்குகளால் தெரிவுசெய்யப்பட்ட வடக்கு முதலமைச்சரிடம் நேரில் அளித்த வாக்குறுதியை உதாசீனம் செய்து மீண்டும் ஆளுநராக முன்னாள் இராணுவத் தளபதி சந்திரசிறியை சிறிலங்கா அதிபர், நியமித்துள்ளார்.

ஆளுநரை நியமிக்கும் அதிகாரம் சிறிலங்கா அதிபருக்குத்தான் இருக்கிறது என்பது அனைவரும் அறிந்த விடயம்.

ஆனால், மக்களின் இறைமையையும், மக்களின் பிரதிநிதிக்கு அளித்த வாக்குறுதியையும் இலங்கை ஜனாதிபதி, அசிங்கப்படுத்தியுள்ளார்.

இவ்வாறான இலங்கை ஜனாதிபதியையும், அவரால் நியமிக்கப்பட்ட புதிய ஆளுநரையும் இனிமேல் நாம் எப்படி மதிப்பது?

இலங்கை ஜனாதிபதியின் இந்தத் தான்தோன்றித்தனமான நடவடிக்கை கேவலமானது; அசிங்கமானது.

இதனைவிட வேறு எதனையும் நாம் கூற விரும்பவில்லை. அவ்வாறு கூறுவது எமக்கே வெட்கக்கேடானது கடும் சீற்றத்துடன் தெரிவித்துள்ளார் இரா.சம்பந்தன்.

Tags: , ,

Leave a Reply