மாமனிதர் சிவராம் அவர்கள் ஒருமுறை கூறியிருந்தார் ‘விடுதலைப் புலிகளை இந்தியா அழிக்க முயலுமானால், அது குளவிக் கூட்டிற்குக் கல் எறிந்த கதையாகிவிடும். போர் நிபுணத்துவமும், ஆயுதங்ளைக் கையாளும் ஆற்றலும் உள்ள அவர்களால் பாரிய ஆபத்துக்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படலாம்’ என்று.
இந்த யதார்த்தம் இந்திய ஆட்சியாளர்களின் பழிவாங்கும் எண்ணத்திற்கு முன்னால் எடுபடாமலேயே போய்விட்டது. இந்தியாவே, ஈழத் தமிழர்கள் எதிர்கொண்ட அத்தனை பேரழிவுகளுக்கும் மூல காரணம் என்பதை அத்தனை தமிழர்களும் தெரிந்தே வைத்திருந்தாலும், தமிழகத்தின் உறவினைத் தாண்டி அவர்களால் இந்தியாவுக்கு எதிராக எதனையும் செய்ய முடியாத நிலையை உருவாக்கியது. ராஜுவ் காந்தியின் படுகொலைக்கும் அப்பால் அவர்கள் ஈழத் தமிழர்களுக்கான நியாயங்களைப் புரிந்து வைத்துள்ளார்கள். அதனாலேயே, அவர்கள் காங்கிரஸ் கட்சியை மிகக் கடுமையாகத் தண்டித்துள்ளார்கள். ஈழத் தமிழர்களது அவலங்களுக்குள் தனது குடும்ப நலன் சார்ந்து அரசியல் புரிந்த தி.மு.க. ஆட்சியாளர்களை கொல்லைப் புறத்திற்குக் கூட்டி ஒதுக்கினார்கள்.
ஆனாலும், அடிவாங்கிய புலிகளது கோபத்தையும், வன்மத்தையும் இந்திய விரோத சக்திகள் தமக்குச் சார்பாகப் பயன்படுத்த முயற்சிப்பார்கள் என்பதை அடியோடு நிராகரிக்க முடியாது. உலகத்தால் நிராதரவாகக் கைவிடப்பட்ட ஈழத் தமிழர்களை, அவர்கள் சார்ந்த இந்துமதம் அரவணைக்கவில்லை. ஆற்றுப்படுத்தவில்லை. குறைந்த பட்சமாக, ஈழத் தமிழர்கள் மீதான இனப் படுகொலையைக் கண்டிக்கக்கூட முற்படவில்லை. மாறாக, தமிழக பார்ப்பனிய முகங்களான துக்ளக் சோவும், சுப்பிரமணியன் சுவாமியும், இந்து ராமும் சிங்கள ஆட்சியாளர்களது தமிழின அழிப்பிற்கு அங்கீகாரமும், சான்றிதழ்களும்கூட வழங்கி வருகின்றார்கள்.
தமிழீழ மக்கள் மத்தியில் பெருகிவரும் இந்த அதிருப்தியை, தமக்குச் சாதகமாகக் கொண்டு, அவர்களை மதமாற்றம் செய்வதில் பல தரப்பும் முனைப்புக் காட்டி வருகின்றார்கள். இதுவரை, குறிப்பிடத்தக்க தொகையிலான புலம்பெயர் தமிழர்கள் கிறிஸ்தவ மதத்தைத் தழுவியுள்ளார்கள். கிறிஸ்தவ மதம் என்பது, தமிழர்களுக்கு அந்நியப்படாத மதமாக மாறிவிட்டது. கத்தோலிக்க மதம், தமிழர்கள் மீது காட்டிவரும் பரிவும், அரவணைப்பும், சேவையும் அந்த நிலையைத் தமிழர்களிடம் உருவாக்கிவிட்டது. சடங்குகளுக்கானதாகவே மாறிவிட்ட, ஒரு பிரிவினரது வருமானத்திற்குரிய மதமாக இந்துமதம் மாறிவிட்ட நிலையில், மதம் மாற்றம் என்பது ஒரு தீண்டத்தகாத செயலாகத் தமிழர்களால் கருதப்படுவதுமில்லை.
இங்கே, கவனத்திற்குரிய விடயம் என்னவென்றால், பரவலாகவே சில தமிழர்கள், அதுவும் இளைஞர்கள் இஸ்லாமிய மதத்திற்கு மதமாற்றம் செய்யப்பட்டு வருகின்றார்கள். இந்த மதமாற்ற விவகாரத்தை, வெறுமனே மதம் சார்ந்த விவகாரமாக ஒதுக்கிவிட முடியாது. ஏனெனில், ஈழத் தமிழர்கள் மத்தியில் இந்து – இஸ்லாமிய உறவு என்பது யதார்த்தத்திற்கு அப்பாற்பட்டது. தங்களுக்கேயான தனி உலகத்தில் சஞ்சரிக்கும் இஸ்லாமியத் தமிழர்கள், இந்துக்களான தமிழர்களிடமிருந்து தம்மை விலக்கியே வைத்துள்ளார்கள். இஸ்லாமிய நாடுகளில் நடைபெறும் யுத்தங்களும், அங்கே மேற்கொள்ளப்படும் பயங்கரவாத தாக்குதல்களும், வழங்கப்படும் தண்டனைகளும் இஸ்லாமிய மதத்தின்மீது அச்சத்தையே உருவாக்கி வைத்துள்ள நிலையில், தற்போது நடைபெறும் மத மாற்றத்தினை நாம் பல கோணங்களிலும் புரிந்து கொள்வதே நல்லது.
அல்-ஹைதா காலத்தில், வேறு மதங்களிலிருந்து மத மாற்றம் செய்யப்பட்டவர்களே பல்வேறு தாக்குதல் முயற்சிகளிலும் ஈடுபட்டிருந்தார்கள். தற்போது ஐ.எஸ்.ஐ.எஸ். நடாத்திவரும் இஸ்லாமியப் பேரரசுக்கான யுத்தம் தோற்கடிக்கப்பட்ட தமிழர்களை அவர்களை நோக்கி நகர்த்தக் கூடும். இந்தியா மீது தமிழர்கள் கொண்டுள்ள அதிருப்தியை இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்கள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தக்கூடும். ஒரு இலட்சியத்திற்காகத் தம்மைத் தயார்படுத்திய விடுதலைப் புலிகள் அமைப்பைச் சார்ந்த ஆயுத நிபுணத்துவம் கொண்டவர்கள், நிர்மூலமாக்கப்பட்ட கனவுகளுக்காக அவர்களை நாடவும்கூடும்.
இதுதான் நடக்கின்றது என்பதைக் கற்பனையாகக் கூறுவது இந்தக் கட்டுரையின் நோக்கம் அல்ல. இதுவும் நடக்கலாம் என்ற சிந்தனையின் வெளிப்பாடே. இந்தியாவின் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு காரணமானவர்களைத் தேடி அழிப்பதற்கு உத்தம்சிங் எடுத்துக்கொண்ட காலம் 21 வருடங்கள். அவரைத் தூக்கிலிடுவதற்கு முன்பாக, ‘உனது கடைசி ஆசை என்ன?’ என்று கேட்ட ஆங்கில அதிகாரியிடம், ‘என்னை தூக்கில் போட்டவுடன் என் உடலை லண்டனிலேயே புதைத்து விடுங்கள். எங்கள் நாட்டுக்கு அனுப்ப வேண்டாம். எங்கள் நாட்டை இத்தனை ஆண்டு காலமாக ஆளும் உங்களுக்கு, உங்கள் நாட்டை சேர்ந்த ஆறடி நிலத்தை ஒரு இந்தியன் நிரந்தரமாக அபகரித்து விட்டான் என்ற அழியாத அவமானமாக இருக்கட்டும்’ என்று இறுமாப்பாகப் பதிலளித்தார் உத்தம்சிங்.
அது மட்டுமே வரலாறாக நீடிக்கப் போவதில்லை. இன்னும் பல உத்தம்சிங்குகள் ஈழத் தமிழர்கள் மத்தியிலிருந்து பழிவாங்கும் எண்ணத்துடன் புறப்படாமல் இருக்க வேண்டுமானால், ஈழத் தமிழர்கள் மீதான இந்தியக் கொள்கையில் மாற்றங்கள் உருவாக்கப்பட வேண்டும்.
– சுவிசிலிருந்து கதிரவன்
















