தமிழர் தரப்பு முன்னெடுக்க வேண்டியது: பேச்சுவார்த்தையா? சர்வதேச விசாரணையா? – தீபச்செல்வன்

WhatsNextஇலங்கை அரசு விரும்பாவிட்டால் சமதான முயற்சிகளை கைவிடத் தயார் என்று தென்னாபிரிக்க உப ஜனாதிபதி ராம்போசா குறிப்பிட்டிருப்பது இலங்கையில் சமாதான முயற்சிகள் சாத்தியமான ஒரு விடயமல்ல என்பதை உணர்த்துகிறது. இலங்கை அரசுக்கும் தமிழர் தரப்புக்கும் இடையில் பல்வேறு கால கட்டங்களில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றிருக்கின்றன. அவைகள் எதுவுமே சமாதானத்தை எட்டவில்லை என்பது இலங்கை – ஈழப் பிரச்சினையின் பேச்சுவார்த்தைகள் மற்றும் சமாதான முயற்சிகளின் கசப்பான வரலாறு ஆகும்.

இலங்கையில் தமிழர் தரப்புக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் நடந்த பல பேச்சுவார்த்தைகளை மூன்றாக பிரிக்கலாம். முதலில் தந்தை செல்வா போன்றவர்கள் அக் காலத்தில் இலங்கை அரசுகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தினார்கள். ஒப்பந்தங்களைச் செய்து கொண்டார்கள். அவற்றை இனவாதிகள் கிழித்தெறிந்து தொடர்ந்தும் இன ஒடுக்குமுறையை மேற்கொண்டனர். இவை ஆயுதப் போராட்டத்திற்கு முந்தைய ஜனநாயகப் போராட்டங்களை தமிழர் தரப்பு முன்னெடுத்த காலத்தில் மேற் கொள்ளப்பட்டவையாகும்.

இதற்கு அடுத்து ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் ஈழ விடுதலைப் போராளிகளுக்கும் இலங்கை அரசுக்கும் பல கால கட்டங்களில் பேச்சுவார்த்தைகளும் சமாதான முயற்சிகளும் நடைபெற்றன. சிங்களப் பேரினவாதத்தினால் தமிழர்கள் ஒடுக்கப்படுகிறார்கள், அழிக்கப்படுகிறார்கள் என்பதற்காக இழந்த உரிமையை மீட்க இளைஞர்கள் ஆயுதம் ஏந்திப் போராடும் சூழலில் அந்தப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. தமிழர் தரப்புக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் நடந்த மிக முக்கியமான பேச்சுவார்த்தைகள் இவை.

முப்பது வருடங்களாக இலங்கையை ஆட்சி செய்த எந்த ஒரு சிங்கள அரசும் இந்தப் பேச்சுவார்த்தைகளின் மூலம் தமிழர் பிரச்சினைக்கு உரிய தீர்வினை எட்ட முன்வரவில்லை. பேச்சுவார்த்தைகளும் சமாதான முயற்சிகளும் யுத்த நிறுத்த ஓய்வுக் காலமாகவே இருந்திருக்கின்றன. அவை இன்னொரு யுத்தம் தொடங்கப்படுவதற்கான ஓய்வுக்காலமாக இருந்திருக்கிறதே அன்றி மெய்யான சமாதானகாலமாக இருக்கவில்லை. இந்தக் கால கட்டத்தில் நடந்த பேச்சுவார்த்தைகள் மூலம் ஈழப் போராட்டத்தை ஒடுக்குவதற்கான சூழச்சிகளே முன்னெடுக்கப்பட்டன.

தமிழ் மக்களுக்கான உரிமையை வழங்க மறுக்கின்ற தொடர்ந்தும் தமிழ் மக்களை ஒடுக்குகின்ற நடவடிக்கைகளை செய்வது ஒன்றையே இலங்கை அரசு தனது கொள்கையாக கொண்டிருக்கிறது என்பதை இக்கால கட்ட சமாதான முயற்சிகள் எடுத்துக் காட்டின. குறிப்பாக புலிகள் இயக்கத்திற்கும் மகிந்த அரசுக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தைகள் சமாதான இணக்கப்பாடுகளை எட்டாத நிலையில் முடிவடைந்ததுடன் அதன் பின்னரான காலத்தில் மாபெரும் இனப்படுகொலை யுத்தம் ஒன்றையும் தமிழ் இனம் சந்திருக்கிறது.

இந்த இனப்படுகொலைக்குப் பிறகு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இலங்கை அரசும் சில உலக நாடுகளின் வற்புறுத்தலின் பேரில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டன. இலங்கை அரசுடன் பேசியே அதிகாரங்களைப் பகிர முடியும் தமிழர் பிரச்சினைக்கு தீர்வினை எட்ட முடியும் என்று கூறப்பட்ட நிலையி;ல் கூட்டமைப்பு பேச்சுவார்த்தைகளின் போது சில அடிப்படை அவசர தேவைகள் குறித்து மகிந்த ராஜபக்ச அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்தது. காணாமல் போனவர்களின் விபரங்களை வெளியிடுமாறு கோரியது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகள் எதனையும் ஏற்றுக்கொள்ளாத இலங்கை அரசு காலக் கதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்போடு பேசுவதை நிறுத்திக் கொண்டது. அதன் பின்னர் தெரிவுக் குழுவுக்கு வந்து தீர்வு தொடர்பில் பேச வேண்டும் என்று இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டார். நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்ட இலங்கை ஜனாதிபதி யுத்தத்தை மேற்கொள்ளதுல் உள்ளிட்ட ஈழ மக்களுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளின் போது தனது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்திவிட்டு இப்போது ஏன் தெரிவுக்குழுவுக்கு போங்கள் என்று குறிப்பிட வேண்டும்?

தமிழர் பிரச்சினைக்கு தீர்வை வழங்கக் கூடாது என்பதற்காகவும் தொடர்ந்தும் அதை இழுபடும் ஒரு நிலைக்கு தள்ளவும் தீர்வுகள் எதனையும் எட்ட முடியாத தெரிவுக்குழு என்ற சூழச்சியை இலங்கை அரசு ஏற்படுத்தியுள்ளது. இலங்கை அரசின் பாராளுமன்றத்திலோ, அந்தப் பாராளுமன்றத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட குழுக்களோ ஈழத் தமிழர் விடயத்தில் ஒரு தீர்வுக்கு இடமளிக்க மாட்டாத இனவாத போக்கு கொண்டவை என்பதற்கு கடந்த காலம் சாட்சி. பாராளுமன்றத்தாலோ, பாராளுமன்ற குழுவாலோ இதற்கான தீர்வை எட்ட முடியும் என்றால் ஈழத் தமிழர்கள் இத்தகைய அழிவுகளையும் இழப்புக்களையும் சந்திருக்கத் தேவையில்லை.

பல்வேறுதரப்பட்ட கட்சிகளும் சிங்கள அரசியல் தலைவர்களும் ஒன்றிணைந்துள்ள மகிந்த அரசினால் தமிழர்களுக்கான தீர்வினை வழங்க முடியவில்லை என்பது சிங்கள அரசியல் தரப்பு என்பது எத்தகைய இனவாத ஒடுக்குமுறைத் தரப்பாக இருக்கிறது என்பதை தெளிவாக புலப்படுத்துகிறது. அரசியல் தீர்வுகளுக்கும் உரிமைகளுக்கும் அப்பால் தமிழ் மக்கள் இன்று ஒடுக்குமுறைக்குள உள்ளாக்கப்படும் பிரச்சினைகளில் ஒன்றைக் குறித்துக் கூட பேச முடியாத தீர்த்து வைக்கப்படாத நிலையுள்ளபோது தெரிவுக்குழு என்பது இழுத்தடிப்பு நாடகம் என்பது மிக மிக வெளிப்படையானது.

இவ்வாறு இலங்கை அரசுக்கும் தமிழர் தரப்புக்குமான மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தைகளும் திட்டமிட்ட முறையில் உரிமையை மறுக்கும் அடிப்படையிலும் தொடர்ந்து தமிழ் இன ஒடுக்குமுறையை மேற்கொள்ளவும் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இந்நிலையிலேயே தென்னாபிரிக்கா இலங்கை அரசுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் மத்தியஸ்தம் வகிக்க விரும்பியதாக அறிவித்தது. இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அழைப்பில் தென்னாபிரிக்க உப ஜனாதிபதி அண்மையில் இலங்கைக்கு வந்தார்.

ராம்போசாவின் வருகைக்கு முன்பாகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழர்களின் ஏக பிரதிநிதி அல்ல என்று இலங்கை அரசு தெரிவித்தது. தமிழீழ விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தைகளை முறிக்கும்போதும் புலிகள் மாத்திரம் தமிழர்களின் பிரதிநிதிகள் இல்லை, கருணாவும் பிள்ளையானும் டக்ளஸ் தேவானந்தாவும் தமிழர்களின் பிரதிநிதிகள் என மகிந்த அரசு சொல்லியது. இப்போது கூட்டமைப்பை தமிழர்களின் பிரதிநிகள் இல்லை என்பதோடு சிங்களப் பேரினவாதிகள் தென்னாபிரிக்காவின் முயற்சிகளை பிரிவினை முயற்சிகள் என்று எதிர்க்கத் தொடங்கியுள்ளனர்.

முன்னைய கால கட்டங்களில் பேச்சுவார்த்தைகளும் சமாதான முயற்சிகளும் நடந்தபோது அதை எவ்வாறு இலங்கை அரசு தனது இனவாத அணிகளை வைத்து எதிர்த்ததோ அதையே இங்கும் செய்திருக்கிறது. இதைத் தவிர ராம்போசா இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டத்தோடு வரவில்லை என்று மகிந்த அரசு மகிழ்ந்தது. இலங்கை அரசு நல்லிணக்கத்தை விரும்புகிற அரசா? சமாதான வழிமுறைகள்மீது ஈடுபாடு உள்ள அரசா என்பதை ராம்போசா உணர்ந்துவிட்டாரா? இலங்கை அரசின் அகராதியில் நல்லிணக்கம், சமாதானம் என்ற சொற்களுக்கு நடைமுறைப்படுத்தப்படும் குரூர அர்த்தங்கள் குறித்து ராம்போசா உணர்ந்துவிட்டாரா?

இலங்கை அரசோடு தமிழர் தரப்பு பேச்சுவார்த்தையை நடத்தலாமா? என்ற கேள்வி இங்கு எழுகின்றது. இலங்கை – ஈழப் பிரச்சினையில் தென்னாபிரிக்கா அடைந்த இணக்கத்தை முன்னுதாரமாண கொள்ள முடியுமா? என்ற கேள்விகள் இங்கு மிக முககியமானது. தென்னாபிரிக்காவில் இனவெதுக்கலுக்கு தீர்வாக இனங்களின் உரிமைகள் வரையறுக்கப்பட்டன. அதனால் இனவொதுக்கலை மன்னிக்கக்கூடிய சூழல் அங்கு உருவானது. இலங்கைத் தீவில் இனவொதுக்கலுக்கான இன ஒடுக்குமுறை;ககான இனப்படுகொலை நடைபெற்றதோடு தொடர்ந்தும் அது பல்வேறு வடிவங்களில் நுட்பமாக முன்னெடுக்கப்படுகிறது.

இன ஒடுக்குமுறையை இனப்படுகொலை இனவொதுக்கலை நிறுத்த இலங்கை அரசு தயாராக இல்லை. தமிழர்களின் உரிமையை வழங்க அதிகாரத்தை பகிர தயாராக இல்லை. அறுபதாண்டு காலப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வரும் தீர்வுக்குவரத் தயாராக இல்லை. இன ஒடுக்குமுறையை இனப்படுகொலை இனவொதுக்கலை தொடரந்தும் முன்னெடுப்பதைத் உறுதியாகக் கொண்டுள்ள இலங்கை அரசு தென்னாபிரிக்காவின் வெளிப்பாட்டை முன்னுதாரணமாகக் கொள்ளுமா?

இனவொதுக்கலை மன்னிக்கலாம் ஆனால் மறக்க முடியாது என்று நெல்சன் மண்டேலா குறிப்பிட்டார். ஆனால் இனப்படுகொலை என்பது மன்னிக்கவோ மறக்கவோ முடியாதது என்பதை நெல்சன் மண்டேலா போன்றவர்கள் ஒப்புக்கொள்ளுவார்கள். தென்னாபிரிக்காவின் பிரச்சினையையையும் எட்டப்பட்ட தீர்வுகளையும் இலங்கை – ஈழப் பிரச்சினையில் ஒப்பிட முடியாது என்பதை ராம்போசா உணரக்கூடிய நிலையையே இலங்கை அரசாங்கம் ஏற்படுத்தியிருக்கிறது.

தென்னாபிரிக்காவின் பிரச்சினையைவிடயும் மிகவும் சிக்கலானதும் பாரதூரமான பிரச்சினையாகவும் இலங்கை – ஈழப் பிரச்சினை காணப்படுகிறது என்பதை ராம்போசாவின் அதிருப்தி வெளிப்படுத்துகிறது. மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திடம் மெய்யான நல்லிணக்க வெளிப்பாடுகளோ சமாதான ஈடுபாடுகளோ இல்லை என்பதை ராம்போசாவின் விரக்கி மிக்க வசனங்கள் உணர்த்துகின்றன. இனவொதுக்கலின் இன ஒடுக்குமுறையின் அடுத்த குரூரமான கட்டமே இனப்படுகொலை. இலங்கை அரசு அந்தக் கட்டத்தை எட்டியுள்ளது. அப்படி எனில் எதற்காக தென்னாபிரிக்காவை இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அழைத்தார்?

இலங்கை அரசுமீது சர்வதேச விசாரணையை ஐ.நா மேற்கொள்ளவுள்ள நிலையில் அதைத் தவிர்க்க நல்லிணக்கத்தினதும் உரிமையை பகிர்ந்துகொண்ட தென்னாபிரிக்காவை தலையிட அழைப்பதன் மூலம் இலங்கை அரசு தென்னாபிரிக்காவை பின்பற்ற விரும்புகிறது என்பதை காட்டவே அவ்வாறு அழைத்தார். தான் இழைத்த போர்க்குற்றங்களையும் இனப்படுகொலையும் தொடரும் இன ஒடுக்குமுறையையும் மறைத்து அதிலிருந்து தப்பிக் கொள்ளவும் அதை தொடருவுமே தென்னாபிரிக்காவை மகிந்த ராஜபக்ச அழைத்தார். இந்த இடத்தில்தான் தமிழர்கள் பேச்சுவார்த்தைக்குச் செல்வதா? சர்வதேச விசாரணையை கோருவதா என்ற மிக முக்கியமான இரு கேள்விகள் எழுகின்றன.

இந்த இரண்டு விடயங்களும் வேறுவேறு அடிப்படைக்களைக் கொண்டது. இலங்கையில் நடந்த நடக்கக்கூடிய பிரச்சினையை தீர்க்க பேச்சுவார்த்தையா? சர்வதேச விசாரணையா உகந்த வழி? இலங்கை அரசின் அறுபதாண்டு கால நடவடிக்கைகளும் சமாதான முயற்சிகள்மீதான வெளிப்பாடுகளும் ஈழப் போராட்டமும் இனப்படுகொலையும் போர்க்குற்றமும் தொடரும் இன ஒடுக்குமுறைகளும் இன்ன பிற விடயங்களும் தமிழர்கள் போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலை சர்வதேச விசாரணையைக் கோரி சர்வசன வாக்கெடுப்பை நடத்தும் சர்வதேசத்தின் நீதியான தலையீட்டைக் கோர வேண்டும் என்பதையே தெளிவாக உணர்த்துகிறது.

Tags: , ,

Leave a Reply