நாளை நடக்கவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு இலங்கை ஜனாதிபதி விடுத்த அழைப்புக்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் மறுப்புத் தெரிவித்துள்ளார்.
நாளை நடக்கவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு, எல்லா மாகாண முதலமைச்சர்களுக்கும், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அழைப்பு அனுப்பியுள்ளார்.
இதனை இலங்கை ஜனாதிபதி பேச்சாளர் மொகான் சமரநாயக்க உறுதிப்படுத்தியுள்ளார்.
எனினும், தாம் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தனக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது என்பதை உறுதிப்படுத்திய அவர், எனினும், இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்க முடியாமைக்கு வருத்தம் தெரிவித்து, தாம் ஒரு குறிப்பை அனுப்பி விட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே உள்ளூரில் சில நிகழ்வுகளில் பங்கேற்க முடிவு செய்து விட்டதாகவும், அவர்களைத் தம்மால் புறக்கணிக்க முடியாது என்றும், வடமாகாண முதல்வர் தெரிவித்துள்ளார்.
வடமாகாண ஆளனராக மீளவும் மேஜர் ஜெனரல் சந்திரசிறி நியமிக்கப்பட்ட விவகாரத்தில், சிறிலங்கா அதிபர் தமக்கு வழங்கிய வாக்குறுதியை மீறிவிட்டார் என்று, முதல்வர் விக்னேஸ்வரன் குற்றம்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
















