காஸா சிட்டி, 5 மணிநேர சண்டை நிறுத்தத்திற்கு இஸ்ரேல் அழைப்பு விடுத்துள்ளது. காஸா பகுதியில் விரைவில் இஸ்ரேல் தரைவழி தாக்குதல் நடத்தலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஒரு வாரமாக நடந்து வந்த சண்டையில் இஸ்ரேல் போர் விமானங்கள், காஸா முனையில் தொடர் தாக்குதல்கள் நடத்தி வருகிறது. இதில் 210க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களை கொன்று குவிக்கப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் அப்பாவி பொதுமக்கள். மேலும், இஸ்ரேல் போர் விமானங்களின் குண்டுவீச்சுக்கு பயந்து ஆயிரக்கணக்கான காஸாமுனை மக்கள் இடம் பெயர்ந்து, ஐ.நா. முகாம்களில் தஞ்சம் அடைந்தனர். இரு தரப்பும் சண்டை நிறுத்தம் செய்ய வேண்டும் என்று ஐ.நா. அழைப்பு விடுத்தது. ஆனால் நிலைமையில் மாற்றம் இல்லை.
இந்த நிலையில் எகிப்து சண்டை நிறுத்த திட்டம் ஒன்றை முன்வைத்தது. ஆனால் ஹமாஸ் தீவிரவாதிகள் நிராகரித்துவிட்டனர். இந்நிலையில் நேற்று காஸா பகுதியில் இஸ்ரேல் மீண்டும் விமான தாக்குதல் நடத்தியது. இந்நிலையில் சண்டை நிறுத்த திட்டத்தை ஹமாஸ் இயக்கம் ஏற்க அரபு நாடுகள் வலியுறுத்த வேண்டும் என்று அமெரிக்கா கேட்டுக் கொண்டது. ஆனால் சண்டை நிறுத்தப்படவில்லை. இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் வேண்டுகோளின் பேரில் இன்று வியாழக்கிழமை 5 மணிநேர சண்டை நிறுத்தத்திற்கு இஸ்ரேல் அழைப்பு விடுத்துள்ளது. ஹமாஸ் தீவிரவாத இயக்கமும் 5 மணிநேர போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது.
காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரையில் போர் நிறுத்தப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் பொதுமக்கள் இறப்புக்களை பற்றிய சர்வதேச விமர்சனங்களை குறைக்க இஸ்ரேல் இந்த நடவடிக்கையை மேற்க்கொண்டுள்ளது. ஹமாஸ் இயக்கம் தாக்குதல் நடத்தினால் அதற்கான பதிலை அளிக்க வேண்டியது இருக்கும் என்று இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் காஸா மீது விரைவில் தரைவழி தாக்குதல் நடத்தப்படும் என்று இஸ்ரேல் ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார். காஸா பகுதியில் பயங்கரவாதத்தை ஒழிக்க தரைவழி தாக்குதலால் மட்டுமே ஒழிக்க முடியும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
















