உக்ரைன் நாட்டு வான் எல்லையில் மலேசிய ஏர்லைன்ஸ் ஏவுகணையால் தாக்கி வீழ்த்தப்பட்ட விபத்தில் 295 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த விபத்துக்கு உக்ரைன் அரசுதான் காரணம் என ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களும், ரஷ்யாவின் துணையுடன் கிளர்ச்சியாளர்கள்தான் சுட்டு வீழ்த்தினார்கள் என உக்ரைன் அரசும் மாறி மாறி குற்றம் சுமத்தி வருகின்றன.
மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் 33000 அடி உயரத்தில் பறந்தபோது சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் அவ்வளவு உயரத்தில் பறக்கும் விமானத்தை சுட்டு வீழ்த்தும் அளவுக்கு திறனுள்ள ஏவுகணை தங்களிடம் இல்லை என்றும், அதை உக்ரைன் அரசுதான் வைத்துள்ளது என்றும் கிளர்ச்சியாளர்களின் தலைவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் உக்ரைன் அரசு அதிகாரி ஒருவர் , ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கு ரஷ்ய அதிபர் புதின் பக் என்னும் நவீன ரக ஏவுகணையை கொடுத்திருப்பதாகவும், அந்த ஏவுகணை 28 கிமீ தூரம் சென்று தாக்கும் வல்லமை கொண்டது என்றும் கூறியுள்ளார். ஆனால் உக்ரைன் அரசின் இந்த கருத்தை ரஷ்யா கடுமையாக மறுத்துள்ளது. இதனால் மலேசிய விமானம் MH17ஐ சுட்டு வீழ்த்தியது யார் என்ற குழப்பம் நீடித்து வருகிறது. இந்நிலையில் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தின் கருப்புப்பெட்டி ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களிடம் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
















