காணாமல் போனவர்கள் தொடர்பில் சர்வதேச தரத்தில் விசாரணை நடத்தப்படும் என அமெரிக்கா நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தி வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்கும் நோக்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மூன்று வெளிநாட்டு நிபுணர்களை நியமித்துள்ளார்.
வெளிநாட்டு நியமனங்கள் தொடர்பில் அமெரிக்கத் தூதரகம் கருத்து வெளியிட்டுள்ளது.
சர்வதேச தரத்தில் நம்பகத்தன்மையுடன் கூடிய பக்கச்சார்பற்ற விசாரணைகள் நடைபெறும் என நம்புவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
யுத்தத்தின் காரணமாக எஞ்சியுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணக்கூடிய வகையிலும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வகையிலுமான உள்நாட்டு விசாரணைப் பொறிமுறைமைக்கு அமெரிக்கா ஆதரவளிப்பதாக, இலங்கைக்கான அமெரிக்கத் தூதரக பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீனமான விசாரணைகள் நடத்தப்படுவதனை வரவேற்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.
விசாரணை ஆணைக்குழுவிடம் சாட்சியமளிக்கும் நபர்கள், படையினரால் பல்வேறு வழிகளில் அடக்குமுறைக்கும் அச்சுறுத்தலுக்கும் இலக்காகி வருவதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவினர் சர்வதேச தரத்தில் பக்கச்சார்பற்ற முறையில் விசாரணைகளை முன்னெடுக்க உதவுவார்கள் என நம்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகவியலாளர்கள் மீது பிரயோகிக்கப்பட்டு வரும் அழுத்தங்கள் தொடர் தாக்குதல்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
சிறுபான்மை இன சமூகம் மீதான அழுத்தங்கள் நாட்டின் செழிப்பான ஜனநாயக வரலாற்றுக்க இழுக்காக அமைந்துவிடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமை நீடிப்பதனை அனுமதிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
ஜனநாயகத்தை நிலைநாட்டி மெய்யான நல்லிணக்கத்தை ஏற்படுத்தினால் மட்டுமே நீடித்து நிலைக்கக் கூடிய சமாதானத்தை நாட்டில் எதிர்பார்க்க முடியும் என அமெரிக்கத் தூதரகப் பேச்சாளர் அறிவித்துள்ளார்.
















