வேலூர் சிறையில் நளினி தொடர் உண்ணாவிரதம்

naliniவேலூர் மத்திய சிறையில் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளான முருகன் ஆண்கள் சிறையிலும், அவரது மனைவி நளினி பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை சந்தித்து பேச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் வேலூர் ஜெயிலில் முருகனிடம் இருந்து பணம், கையடக்கத் தொலைபேசி பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து முருகன், நளினியை சந்திக்க 2 வாரத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் கடந்த 12-ந் திகதி அவர்கள் சந்திக்கவில்லை.

கணவரை சந்திக்க தடை விதிக்கப்பட்டிருப்பதால் நளினி, சிறையில் அளிக்கப்படும் உணவை சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இதனால் அவரிடம் சிறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் நளினியின் வக்கீல் புகழேந்தி நேற்று காலை வேலூர் பெண்கள் ஜெயிலில் உள்ள நளினியை நேரில் சந்தித்து பேசினார்.

பின்னர் வெளியே வந்த வக்கீல் புகழேந்தி கூறியதாவது:-

முருகனுடன் சந்திக்க மறுக்கப்பட்டதை தொடர்ந்து நளினி ஜெயிலில் 2-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இதனால் சோகத்துடனும், சோர்வுடனும் உள்ளார். நளினியை சமாதானப்படுத்த சிறைச்சாலை அதிகாரிகள் தொடர்ந்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

மேலும் நளினி தன்னை விடுதலை செய்யக்கோரி உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கு 22-ந் திகதி விசாரணைக்கு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் ஆண்கள் ஜெயிலில் உள்ள முருகனையும் வக்கீல் புகழேந்தி நேற்று சந்தித்து பேசினார்.

Tags: , ,

Leave a Reply