ndஎமது காணிகளை அனுமதி இன்றி அடாத்தாக அளவை யிட்டால் இந்த இடத்திலேயே நாம் தீக்குளிப்போம் இவ்வாறு ஆவேசத்துடன் தெரிவித்துள்ளனர் அச்சுவேலியில் இராணுவத்தினரால் சுவீகரிக்கப்படவுள்ள காணிகளின் உரிமையாளர்கள். நேற்று காணிகளை அளப்பதற்காக வந்திருந்த நில அளவையாளர்களிடமே இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்று குறித்த 54 பரப்புக் காணிகளை அளவீடு செய்வதற்கு நில அளவையாளர்கள் வந்திருந்தனர். ஆயினும் அந்தப் பகுதியில் திரண்ட மக்களின் எதிர்ப்பால் அந்த நடவடிக்கை தடுக்கப்பட்டது. அப்போதே மக்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.
காணிகளை அளப்பதற்காக வந்திருந்த காணி அளவையாளர், பிரதேச செயலரே தமக்கு காணிகளை அளவிடுமாறு உத்தரவிட்டார் என்று தெரிவித்தார்.
அதற்கு அங்கு குழுமியிருந்த மக்கள், “எங்களது காணிகளை எங்களது அனுமதியின்றி அளந்தால் இதிலேயே பெற்றோல் ஊத்தி தீக்குளிப்போம். எங்களின்ர மூண்டு நாலு பிள்ளகுட்டியள வளத்தது இந்த காணிக்க தோட்டம் செய்துதான்.
இப்ப வந்து காணி அளக்கினமாம். எங்கள மீறி அளந்தா இப்பவே பெற்றோல் ஊத்தி கொழுத்தி போட்டு எங்கட காணிக்க சாவம்” என்று ஆவேசமாகத் தெரிவித்தனர்.
மக்களின் இந்தத் தீவிர எதிர்ப்பை அடுத்து காணிகளை அளக்க முடியாமல் நில அளவையாளரகள் திரும்பி சென்றனர்.
















