மோகன்லால், மீனா நடிப்பில் வெளியான திரிஷ்யம் மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்றது. பின்னர் இந்த படம் வெங்கடேஷ், மீனா, நதியா நடிப்பில் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் கமல்ஹாசன் மற்றும் கவுதமி நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கான பூஜை சமீபத்தில் சென்னையில் நடந்தது.
இந்நிலையில் கூத்தமங்கலத்தைச் சேர்ந்த சதீஷ்பால் என்ற எழுத்தாளர் எர்ணாகுளம் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் ‘திரிஷ்யம்’ படத்தை தமிழில் ரீமேக் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தனது மனுவில் கூறியிருப்பதாவது:
திரிஷ்யம் என்ற மலையாளப் படம் நான் எழுதிய “ஒரு மழைக்காலத்து” என்ற நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது. இதற்காக எனக்கு ஒரு தொகையையும் த்ரிஷ்யம் தயாரிப்பாளர் கொடுத்தார். ஆனாலும் இந்த கதையின் உரிமையும் ரீமேக் செய்யும் உரிமையும் என்னிடம்தான் இருக்கிறது.
என் அனுமதி இல்லாமல் திரிஷ்யம் படத்தை தமிழில் ரீமேக் செய்ய கமல்ஹாசன் திட்டமிட்டு உள்ளதாக செய்தித்தாள்கள் மூலம் அறிந்துகொண்டேன். இது எனக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும் செயல். எனவே திரிஷ்யம் தமிழில் ரீமேக் படத்திற்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் குறிப்பிட்டு இருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி திரிஷ்யம் படத்தை தமிழில் ரீமேக் செய்ய கூடாது என இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். நீண்ட இடைவெளிக்கு பின்னர் கமல்ஹாசனுடன் நடிக்க இருந்த வாய்ப்புக்கு தடை ஏற்பட்டுள்ளது கண்டு கவுதமி கடும் அதிர்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது.
















