அல்ஜீயர்ஸ்: 116 பேருடன் சென்ற அல்ஜீரியா விமானம் ஒன்று நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த அனைவரும் பலியாகி இருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
ஏர் அல்ஜீரி விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று, 110 பயணிகள் மற்றும் 6 விமான சிப்பந்திகளுடன் உள்ளூர் நேரப்படி அதிகாலை 1.17 மணி அளவில் மேற்கு ஆப்பிரிக்கா நாடான பர்கினோ ஃபாசோவின் தலைநகரான ஒகாடோகோ என்ற இடத்தில் இருந்து, அல்ஜீரியாவுக்கு சென்று கொண்டிருந்த நிலையில், புறப்பட்ட 50 நிமிடங்களில் ராடார் பார்வையிலிருந்து மாயமாகி, விமான கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பையும் இழந்ததாகவும், இதனையடுத்து மாயமான விமானத்தை தேடி அதே விமான பாதையில் மற்றொரு விமானம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஏர் அல்ஜீரி விமான நிறுவனம் தெரிவித்திருந்தது.
நொறுங்கி விழுந்து விபத்து
இந்நிலையில் மாயமான விமானம் நைஜர் என்ற இடத்தில் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானதாகவும், இதில் அந்த விமானத்தில் பயணம் செய்த அனைவரும் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
விமான பாதையில் பாலைவனப்புயல் வீசியதால் விமானி தன்னால், விமான பாதையை சரிவர பார்க்க முடியவில்லை என விமான கட்டுப்பாட்டு மையத்திற்கு தெரிவித்ததும், மேற்கொண்டு செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும், இதனையடுத்து அவர் விமானத்தின் பயண பாதையை மாற்றியபோது விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என்றும் அல்ஜீரி விமான நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
தொடரும் விமான விபத்து
முன்னதாக கடந்த 17ஆம் தேதி நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து 298 பேருடன் புறப்பட்டு சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம், உக்ரைனில் கிழக்கு பகுதியில் ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டதில் அதில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்த சம்பவத்தின் அதிர்ச்சி விலகுவதற்குள், நேற்று தைவானில் பயணிகள் விமானம் ஒன்று அவசரமாக தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானதில் 51 பேர் பலியாயினர்.
அடுத்ததாக இன்று 116 பேர்களுடன் சென்ற அல்ஜீரியா விமானம் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளாகி இருப்பது, மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே 5 இந்தியர்கள் உள்பட 239 பயணிகளுடன் கோலாலம்பூரில் இருந்து பீஜிங்கிற்கு, கடந்த மார்ச் மாதம் 8 ஆம் தேதி புறப்பட்டுச் சென்ற மலேசிய விமானம் ஒன்று , நடுவானில் சென்று கொண்டிருந்தபோது, மர்மமான முறையில் மாயமானது.
அந்த விமானம் மற்றும் அதிலிருந்த பயணிகளின் கதி என்னவானது என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் தெரியவரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
















