கடந்த வாரம் ருத்ரமாதேவி படப்பிடிப்பில் அனுஷ்கா அணிந்திருந்த பலகோடி ரூபாய் தங்க நகைகள் திடீரென காணாமல் போனது. இதுகுறித்து விசாரணை செய்துவரும் போலீஸார், திருடு போன நகைகள் சென்னையில் பதுக்கப்பட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளதால் ஐதராபாத் போலீஸார் சென்னை விரைந்துள்ளனர்.
அனுஷ்கா நடிப்பில் மாபெரும் பொருட்செலவில் தயாராகி வரும் ருத்ரமாதேவி திரைப்படத்திற்காக பலகோடி ரூபாய் மதிப்பில் ஒரிஜினல் தங்க நகைகள் சென்னையில் உள்ள பிரபலமான நகைக்கடை ஒன்றில் இருந்து ஆர்டர் செய்து வாங்கப்பட்டது. அனுஷ்காவிற்காக அளவெடுத்து கிரீடம், ஒட்டியாணம், கழுத்துமாலைகள் ஆகியவை தயார் செய்யப்பட்டது. இந்த நகைகள் கடந்த வாரம் சில மர்ம நபர்களால் திருடப்பட்டது.
இந்த திருட்டு குறித்து ஐதராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். ருத்ரமாதேவி படக்குழுவில் பணிபுரிந்த மூன்று நபர்களிடம் செய்த விசாரணையில் திருடப்பட்ட நகைகள் அனைத்தும் சென்னையில் பதுக்கப்பட்டதாக போலீஸாருக்கு தற்போது தெரிய வந்துள்ளது. எனவே இதுகுறித்து மேல்விசாரணை செய்வதற்காக ஐதராபாத் போலீஸார் இன்று சென்னை விரைகின்றனர். திருடுபோன தங்க நகைகளை திருடியவர்கள் கூடியவிரைவில் பிடிபடுவார்கள் என ருத்ரமாதேவி படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
















