இஸ்ரேலின் பிடியில் இலங்கை முழுமையாக சிக்கிவிட்டதாக குற்றம் சாட்டியுள்ள முன்னாள் இராஜதந்திரி தயான் ஜெயதிலக அது தமிழ் தீவிரவாத சக்திகள் மீண்டும் எழுச்சி பெறுவதற்கும் மேற்குலகம் யுத்த வெற்றியை பலவீனப்படுத்தும் வகையில் செயற்படுவதற்கும் வழிவகுத்துள்ளதாக் தெரிவித்துள்ளார்.
வடபகுதி தமிழர்களுடனான நல்லிணக்க நடவடிக்கைகள், முஸ்லீம்களுக்கு எதிரான உணர்வுகள் அதிகரிப்பு, சாவதேச அளவில் இராஜதந்திர ரீதியில் தனிமைப்பட்டிருத்தல் போன்றவைகள் இஸ்ரேலிய கொள்கைகள் உள்நாட்டில் பின்பற்றப்படுவதையும் அதனால் ஏற்பட்ட தாக்கத்தையும் புலப்படுத்துவதாக அமைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற கருத்தரங்கொன்றில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.
இலங்கை இன்று இஸ்ரேலை பின்பற்றப்பாhக்கிறது, இது பிழையான தந்திரோபாயமாகும், 2008 2009 களில் அமைச்சர் சம்பிக்க ரணவக்க உட்பட முக்கிய அதிகாரிள் அங்கு சென்றனர். யுத்தத்திற்கு பிந்திய உள்நாட்டு படையணியின் ஆலோசனைகளை பெற்றனர்.
வடக்கில் யுத்தத்திற்கு பின்னர் இஸ்ரேலின் ஆலோசனைப்படி அதன் மாதிரிகளே நடைமுறைப் படுத்தப்படுகின்றன, இதுவே தமிழ் தீவிரவாத உணர்வுகள் மீண்டும் தலைதூக்க காரணம்.
மோதல்களின் போது இலங்கை இராணுவம் சற்று வித்தியாசமான தந்திரோபாயங்களை பின்பற்றி இருந்தாலும், அரச அதிகாரிகள் மத்தியில் காணப்படும் தொலைநோக்கின்மை அந்த நிலைக்கு பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது. இது இலங்கையில் தலையீடு செய்ய விரும்பும் மேற்குலக சக்திகளுக்கு சாதகமாக அமைந்துள்ளது.
பொது பல சேனா போன்ற அமைப்புகளின் கருத்துகள் அவர்கள் மத்தியில் காணப்படும் இஸ்ரேலிய மனப்பான்மையை புலப்படுத்துகின்றன, ஹக்கீம் மாளிகாவத்தையை காஸாவாக மாற்றிவிட்டார் என ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். இவையாவும் இலங்கையை அபாயக் கட்டத்திற்கு நகர்த்திச் செல்வதற்கான சிறந்த உதாரணங்கள் எனவும் தயான் ஜெயத்திலக்க தெரிவித்துள்ளார்.
















