சென்னை தர்மராஜா கோயிலில் வெளிநாட்டு பெண் ஒருவர் நுழைந்து கலாட்டா செய்துள்ளார். சென்னை ஆலந்தூர் ஏகாம்பரர் தெருவில் தர்மராஜா கோயில் உள்ளது. இங்கு வெளிநாட்டு பெண் ஒருவர் அத்துமீறி நுழைந்ததாக பரங்கிமலை பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.
உடனே, பரங்கிமலை பெண் பொலிசார் கோயிலுக்கு விரைந்து சென்று பார்த்தனர். அந்த பெண் கோயிலில் அமர்ந்து யோகாவில் ஈடுபட்டிருந்தார். அவரிடம் நடத்திய விசாரணையில், அவரது பெயர் டேரா ஆசிர் (45) என்பதும், பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் என்றும் இந்தியாவில் யோகா செய்ய வந்துள்ளதாகவும் கூறியுள்ளார். அப்போது, இந்து கோயில்களில் பிற மதத்தினர் நுழையக் கூடாது. எனவே, கோயில் வளாகத்தில் இருந்து நீங்கள் வெளியேற வேண்டும் என்று பொலிசார் கூறியுள்ளனர்.
பின்னர், பொலிசார் அங்கிருந்து சென்றதும் மீண்டும் அந்த பெண் கோயிலுக்குள் நுழைந்து யோகாவில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து பொலிசிற்கு தகவல் சென்றதும், மீண்டும் பொலிசார், அந்த பெண்ணை வெளியே போக வேண்டும் என்று கூறியுள்ளனர். அதற்கு, என்னை தொட்டால் உங்களை காலி செய்து விடுவேன் என்று அந்த பெண் மிரட்டியுள்ளார். யோகா தெரிந்த பெண் ஏதாவது செய்துவிடுவாரோ என்று மிரண்டுபோன பெண் பொலிசார், பக்குவமாக பேசி சமாதானப்படுத்தி அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர்.
















