வடக்கு மாகாணத்துக்கு எது வித விசேட நிதி ஒதுக்கீடுகளும் வழங்கப்படாது. ஏனைய மாகாணங்களுக்கு வழங்கப்படும் நிதியைப் போன்றே வடக்கு மாகாணத்துக்கும் வழங்கப்படும் என அரசு கூறியுள்ளது.
வடக்கு மாகாண மீன்பிடி அபிவிருத்திக்கு 850 மில்லியன் ரூபா வழங்குமாறு கோரிக்கை விடுத்த போதும் 50 மில்லியன் ரூபாவே வழங்கப்பட்டுள்ளது.
ஏனைய மாகாணங்களைப் போன்றே வடக்குக்கும் நிதி ஒதுக்கப்படும் எனவும் விசேட நிதி எதுவும் வழங்கப்படாது எனவும் அந்த அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார். ஒன்பது மாகாணங்களின்தும் மீன்பிடி அமைச்சர்களுக்கும், மத்திய அரசின் மீன்பிடி அமைச்சர் மற்றும் செயலாளர்களுக்கும் இடையில் கடந்த மாதம் கொழும்பில் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதில் வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் சகல மீன்பிடி அபிவிருத்தி நடவடிக்கைக ளும் வடக்கு மாகாண மீன் பிடி அமைச்சினூடாகவே மேற் கொள்ளப்படும் என்று கடற் தொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்திருந்தார்.
இதற்கமைய கடந்த வாரம், ஒன்பது மாகாணங்களின் மீன் பிடி அமைச்சின் செயலாளர்களுக்கும், மத்திய கடற்தொழில் அமைச்சின் செயலாளருக்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றது.
இதன்போது வடக்கு மாகாணத்தின், 5 மாவட்டங்களிலு முள்ள நீரியல் வளத் திணைக்களத்தினூடாகப் பெறப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் மாகாண அமைச்சின் அபிவிருத்தித் திட்டங்கள் என்பவற்றை உள்ளடக்கியதாக, 122 அபிவிருத்தித் திட்டங்களுக்கு 848.3 மில்லியன் ரூபா தேவை என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதற்கு வடக்கு மாகாணத்துக்கு என்று விசேட நிதி ஒதுக்கீடு செய்யப்பட முடியாதென்றும், ஒவ்வொரு மாகாணத்துக்கும் 50 மில்லியன் ரூபாவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதிலும் தற்போது ஒரு மில்லியன் ரூபாவே வழங்கப்படும் என்றும் மத்திய கடற்தொழில் அமைச்சின் செய லாளர் குறிப்பிட்டுள்ளார்.
போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு ஏனைய மாகாணங்களை விட கூடுதலான நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முதல் அரசின் அமைச்சர்கள் அனைவரும் கூறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
















