பொதுவேட்பாளர் குறித்து ஆராய்கிறது கூட்டமைப்பு; கள நிலைவரத்தைக் கணிக்க விரைவில் குழு

tnalogo2ஜனாதிபதித் தேர்தலை அடுத்த ஆண்டு முற்பகுதியில் நடத்துவதற்கு அரசு உத்தேசித்துள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் வியூகத்துக்கு ஆதரவு வழங்குவதா, அவ்வாறு ஆதரவு வழங்குவதாயின் பொது வேட்பாளராக எவரது பெயரைப் பரிந்துரைப்பது என்பன தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்பீடம் தீவிரமாக ஆலோசித்து வருகின்றது என்று தெரியவருகின்றது.

இந்த விடயங்கள் தொடர்பில் தீர்மானிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் விரைவில் குழுவொன்றை நியமிக்கவுள்ளனர் என்றும் தெரியவருகின்றது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன், “ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் தொடர்பில் எதிர்க்கட்சிகள் இன்னமும் ஒரு மித்த நிலைப்பாட்டுக்கு வரவில்லை.

இதனால் யாரை பொது வேட்பாளராக நிறுத்து வதற்கு ஆதரவளிப்பது என் பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் முடிவு செய்யவில்லை. எனினும், இது தொடர்பில் நாம் பரிசீலித்து வருகின்றோம்” என்றார்.

2010ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை எதிர்க்கட்சிகள் களத்தில் இறக்கின. இவரைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரித்தது.

இந்தத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் மஹிந்த ராஜபக்சவையும் விட சரத்பொன்சேகா அமோக வாக்குகளைப் பெற்று முதலிடத்திற்கு வந்தார். எனினும், தெற்கில் மஹிந்தவுக்கு அதிக வாக்குகள் கிடைத்ததால் பொன்சேகா தோல்வியடைந்தார்.

இந்தத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ச­ 60 இலட்சத்து 15 ஆயிரத்து 934 வாக்குகளையும், சரத் பொன்சேகா 41 இலட்சத்து 73 ஆயிரத்து 185 வாக்குகளையும் பெற்றிருந்தனர்.

மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் ஐ.நா. குழு எதிர்வரும் மார்ச்சில் ஜெனிவாவில் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ள காலப்பகுதியிலேயே ஜனாதிபதித் தேர்தலை இங்கு நடத்துவதற்கு
பொதுவேட்பாளர்

அரசு உத்தேசித்துள்ளது. இந்நிலையில், இந்தத் தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரைக் களமிறக்க எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன. இதன் ஒரு கட்டமாக “நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்கவேண்டும்’ என்ற பெயரில் கடந்த வியாழக்கிழமை கொழும்பு புதிய நகர மண்டபத்தில் கோட்டே நாகவிகாராதிபதி வண.மாதுலுவாவே சோபித தேரரின் தலைமையில் கூட்டம் ஒன்றும் நடைபெற்றது.

அதில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா உட்பட எதிர்க்கட்சிகளின் முக்கியஸ்தர்களும், முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவும் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தின் பின்னர் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் பிரதம நீதியரசர் கலாநிதி சிராணி பண்டாரநாயக்கவின் பெயர்
பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொதுவேட்பாளர் பட்டியலில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்காவும், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் இருந்தனர்.

எனினும் சிராணி பண்டாரநாயக்கா எவ்வித அரசியல் பிரவேசமும் இன்றி பக்கச்சார்பற்ற வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்படுவது உசிதம் எனவும், அவரது பதவி நீக்கத்துக்குப் பிறகு இதுவரை அவர் எந்தவொரு அரசியல் கட்சியிலும் சேராமல் இருப்பது அவருக்குரிய சாதகமான நிலைமை எனவும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பலரும் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர் என்றும் கூறப்படுகின்றது.

Tags: , ,

Leave a Reply