பௌத்த மதத்தினர் வாழாத வடக்கு மாகாணத்தில் பெருமளவு பௌத்த வழிபாட்டுத் தலங்கள் – அமெரிக்கா

usa-flag2பௌத்த மதத்தினர் வாழாத வடக்கு மாகாணத்தில் சிறிலங்காப் படையினரால் பெருமளவு பௌத்த வழிபாட்டுத் தலங்கள் அமைக்கப்பட்டு வருவது குறித்து அமெரிக்க இராஜாங்க அமைச்சர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்க இராஜாங்க அமைச்சர் ஜோன் கெரி வொஷிங்டனில் நேற்று திங்கட்கிழமை வெளியிட்ட மத சுதந்திரம் தொடர்பான 2013ஆம் ஆண்டுக்கான அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் மக்களின் வழிபாட்டுத் தலங்கள் மீதான வன்முறைகள் தொடர்பாகவும் விரிவாக கூறப்பட்டுள்ள இவ்வறிக்கையில், இவற்றுக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்க எடுக்கத் தவறிவிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பௌத்த மதத்தினர் வாழாத வடக்கு மாகாணத்தில் சிறிலங்காப் படையினரால் பெருமளவு பௌத்த வழிபாட்டுத் தலங்கள் அமைக்கப்பட்டு வருவது குறித்தும் இவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற 27 ஆண்டுகால போர் முடிவுக்கு வந்த பின்னர், வடமாகாணத்தில் தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் சிறிலங்காப் படையினர் தொடர்ந்தும் பௌத்த வழிபாட்டுத் தலங்களை அமைத்து வருகின்றனர். இந்த இடங்கள் இந்து மக்க்களின் வசிப்பிடங்கள் அமைந்துள்ள பகுதியாகும். கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மக்கள் வாழும் பகுதிகளிலும் கூட இவ்வாறு பௌத்த வழிபாட்டுத் தலங்கள் அமைக்கப்படுகின்றன.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் முன்னர் இருந்த பகுதிகளில் சிறிலங்கா அரசாங்கத்தின் ஆதரவுடன் சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெற்று வருவதாக தமிழ் அமைப்புகள் குற்றம் சுமத்துகின்றன. வடமாகாணத்திலுள்ள யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் கூட பௌத்த வழிபாட்டுத் தலங்கள் அதிகரித்துள்ளன.

இலங்கையிலுள்ள சிறுபான்மை மதத்தினர் மீது பௌத்த அடிப்படைவாத அமைப்புக்கள் மேற்கொள்ளும் வன்முறைகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மனிதவுரிமை அமைப்புகள் விடுத்த கோரிக்கைகளை சிறிலங்கா அரசாங்கத்தின் அதிகாரிகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை.

முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மக்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபட்ட பௌத்த பிக்குகளைக் கைது செய்து சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள சிறிலங்கா அரசாங்கம் தவறிவிட்டது. சிறிலங்கா அரசாங்கத்தினால் பௌத்த பிக்குகள் பாதுகாக்கப்படுகின்றனர்.

இலங்கையில் சிறுபான்மை மதத்தினருக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடும் பொதுபல சேனா போன்ற பௌத்த அடிப்படைவாத அமைப்புகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் பாதுகாப்பு அளிகிறது.

அத்துடன், பொதுபல சேனா போன்ற பௌத்த அடிப்படைவாத அமைப்புகளுக்கும், சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் இருப்பதாக உள்ளூர் ஊடகங்களும், அரச சார்பற்ற நிறுவனங்களும் நம்புவதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

Tags: , ,

Leave a Reply