ஒரு குறிப்பிட்ட இனத்தை – ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தை இலக்கு வைத்து அமெரிக்கா செயற்பாடுகளை முன்னெடுப்பது நாட்டில் மேற்கொள்ளப்படும் நல்லிணக்க முயற்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று சிறிலங்கா அரசாங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
அமெரிக்கத் தூதரகம் அண்மையில் வெளியிட்ட அறிக்கை தொடர்பாக சிறிலங்கா வெளிவிகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அமெரிக்காவின் நிதி உதவியுடன் ஒரு குறிப்பிட்ட பகுதியைச் சேர்ந்த, குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்களுக்கு மட்டும் பயிற்சிகள் வழங்கப்படுவதன் உள்நோக்கம் என்ன?
சிறிலங்காவில் இலங்கையில் ஊடகவியலாளர்கள் துன்புறுத்தப்படுகின்றனர் எனச் சுட்டிக்காட்டி உள்ள அமெரிக்கத் தூதரகம் அவ்வாறான சம்பவங்கள் குறித்து சிறிலங்கா அரசாங்கத்துடன் எந்தத் தகவல்களையும் பகிர்ந்து கொள்ளவில்லை.
இதுதொடர்பாக, அமெரிக்க அதிகாரிகள், சிறிலங்கா அதிகாரிகளைச் சந்தித்து உரையாடிய வேளை, சிறிலங்காஅரசாங்கம் அளித்த பதிலை அமெரிக்கத் தூதரகம் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டவில்லை.
ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு கைவிடப்பட்டதற்கு காரணம் அதற்கு எதிராக இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் என அமெரிக்கத் தூதரகம் கருதுவது போல தென்படுகிறது.
அமெரிக்கத் தூதரகம் அதனைக் கண்டித்தும் உள்ளது.
ஆர்ப்பாட்டம் செய்வதற்கும், ஒன்றுகூடுவதற்கும், கருத்து தெரிவிப்பதற்குமான உரிமையை இந்த விடயத்தில் அமெரிக்கத் தூதரகம் பொருத்தமற்ற விதத்தில் கேள்வி எழுப்பியுள்ளது.
அதே அறிக்கையில் இந்த விடயங்களை வேறொரு இடத்தில் சுட்டிக்காட்டும் அமெரிகக் தூதரகம், சிறிலங்காவில் இந்தக் கொள்கைகள் மீறப்படுகின்றன எனவும் தெரிவிக்கிறது.
சிறிலங்கா தொடர்பான அடிப்படைக் கொள்கைகளில் அமெரிக்க தூதரகம் மிகவும் தெரிவு செய்யப்பட்ட விதத்தில் செயற்படுவதாகத் தோன்றுகிறது.
நாடு உணர்ச்சிபூர்வமான, தேசிய நல்லிணக்கத்தை நோக்கி செயற்பட்டுக் கொண்டிருக்கையில் ஓர் இனக்குழுவை அல்லது பிரதேசத்தை மாத்திரம் இலக்குவைத்து அமெரிக்கா செயற்படுவது நம்பிக்கையீனத்தை உருவாக்கி தேசிய நல்லிணக்கத்தை பாதிக்கலாம் என்றும், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
















