வடதமிழீழ ஊடகவியலாளர்களை ஒடுக்க சிறீலங்காவின் திட்டமிட்ட நடவடிக்கை – தாயகத்தில் இருந்து காந்தரூபன்

reporters-lkதமிழ் மக்களை அடக்கி, அவர்களின் நிலங்களை ஆக்கிரமித்து, அவர்களை இருப்பிடம் இன்றித் துரத்துவதற்கு நினைக்கின்ற சிங்கள அரசுக்கும் படைகளுக்கும் வடக்கு ஊடகவியலாளர்கள் தற்போது சிம்ம சொப்பனமாகத் திகழ்கின்றனர். இதனால்தான் சிங்களம் ஒட்டுமொத்தமாகத் திரண்டு வடக்கு ஊடகவியலாளர்களை இலக்குவைத்து தனது அராஜகத்தை தொடர்கின்றது. ஊடகவியலாளர்களின் வாலை ஒட்ட நறுக்கிவிட்டால் வடக்கில் தாங்கள் ஆடுகின்ற கோரத் தாண்டவத்தை எவராலும் தட்டிக்கேட்க முடியாமல் போகும் என்று சிங்களம் கனவு காண்கிறது. அதனாலேயே அரசும் படைகளும் வடக்கு ஊடகவியலாளர்களை இலக்குவைத்துள்ளனர்.

உலகில் முறையான ஜனநாயக கட்டமைப்புக்கள் தோன்றுவதற்கு முன்னர் சர்வாதிகாரிகளின் ஆட்சியின் போது தங்களுக்கு எதிரிகளாக விளங்கக்கூடிய எவரையுமே அவர்கள் விட்டுவைக்கவில்லை. தங்கள் ஆட்சிக்கு எவரால் ஆபத்து வரும் என்று அந்தச் சர்வாதிகாரிகள் கருதினார்களோ அவர்களைக் கடத்தி அல்லது கைது செய்து கொலை செய்தார்கள். ஆட்சிக்கு எதிராக எவர் கருத்து வெளியிடுகிறார்களோ அவர்களையும் அந்த சர்வாதிகாரிகள் விட்டுவைக்கவில்லை. பல்லாயிரக்கணக்கானோரைப் பிடித்துச் சிறைகளில் தள்ளிச் சித்திரவதை செய்தார்கள். அந்தக் காலத்திலும் ஊடகவியலாளர்கள் சிறைவைக்கப்பட்டார்கள். சித்திரவதைகளை அனுபவித்தார்கள்.

அந்த சர்வாதிகாரிகளின் வரிசையில் தான் சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் தற்போது பயணிக்கின்றார். தனது சர்வாதிகார ஆட்சிக்கு யார் தடையாக இருக்கின்றார்களோ, யார் தனது சர்வாதிகாரத்தை வெளிப்படுத்துகின்றார்களோ அவர்களை அனைவரையும் ஒழித்துக்கட்ட வேண்டும் என்றே மகிந்த வெறிகொண்டு அலைகின்றார். இந்த வரிசையிலேயே இன்று அவருக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்பவர்கள் வடக்கு ஊடகவியலாளர்கள். இதனால்தான் எப்படியாவது இவர்களை அடக்க வேண்டும் என்று மகிந்தவும் அவரது சகோதரர்களும் துடியாய்த் துடிக்கின்றனர். ஊடகவியலாளர்களை அடக்குவதற்கு பல்வேறு வகையான உத்திகளையும் அவர்கள் பயன்படுத்துகின்றனர். இதில் புதிய உத்ததியாகவே கடந்த வெள்ளிக்கிழமை போதைப் பொருள் குற்றச்சாட்டில் வடக்கு ஊடகவியலாளர்கள் ஏழு பேர் சிறீலங்கா படைகளாலும் சிறீலங்கா காவல்துறையாலும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

வடக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆட்சி இல்லாமல் போன பின்னர் இங்கே நிலைகொண்டிருக்கின்ற சிறீலங்கா படையினர் தினந்தோறும் செய்கின்ற அட்டூழியங்களால் தமிழ் மக்கள் பாதிக்கப்படுகின்றமை வெளிப்படையான உண்மை. இந்தப் பாதிப்புக்களின் வலியை தமிழ் மக்களாலேயே புரிந்துகொள்ள முடியும். ஓர் ஆக்கிரமிப்பு படையின் பிடியில் சிக்கித் தவிக்கின்ற மக்கள் அதன் கொடூர முகத்திற்கு முன்னால் மண்டியிட வேண்டும் என்றே அந்தப் படையும் அதன் தலைமையும் எதிர்பார்க்கும். ஆனால், தமிழ் மக்களின் வரலாற்றில் அப்போதும் சரி இப்போதும் சரி மண்டியிடுதல் என்ற பேச்சுக்கே இடம் இருந்ததில்லை.

சிறீலங்காவில் அந்நியராட்சிக் காலத்தில் எல்லாளன், பண்டாரவன்னியன், சங்கிலியன் போன்ற பல தமிழ் மன்னர்களின் பரிபாலிப்பின் கீழ் வாழ்ந்த தமிழ் மக்கள் அன்று அந்நியரிடம் மண்டியிட்டிருக்கவில்லை. அந்த மன்னர்களுடன் இணைந்து மக்களும் அந்நியருக்கு எதிராக போரிட்டனர். அதேபோன்று தொடர்ந்து வந்த காலத்தில் தமிழ் மக்களின் ஒப்பற்ற தலைவன் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் பரிபாலிப்பின் கீழேயும் தமிழ் மக்கள் சிங்கள ஆட்சியாளருக்கு மண்டியிடவில்லை. சிங்களச் சேனைகளை எதிர்த்து நின்று பெரும் போர் புரிந்து பல்வேறு வெற்றிகளைக் குவித்தனர். இந்த வெற்றிகளைப் பொறுத்துக்கொள்ள முடியாத சில துரோகத்தன வஞ்சக அரசுகளின் செயலால் இன்று தமிழ் மக்கள் போர்ப் படை இழந்து, நாடு இழந்து, நகரிழந்து நட்டாற்றில் தவிக்கின்றனர். ஆனாலும் அவர்களிடம் இருக்கின்ற தமிழர் என்ற ஒர்மத்தை எவராலும் தடுத்துவிட முடியவில்லை. மாற்றானுக்கு மண்டியிட முடியாது என்ற வீறாப்பு மட்டும் அவர்களிடம் இருந்து விடுபடவில்லை.

தமிழ் மக்களின் நிலங்கள் பறிபோகின்றன. தமிழ் மக்களின் சொத்துக்கள் சுரண்டப்படுகின்றன. தமிழ் மக்களின் வளங்கள் சுவீகரிக்கப்படுகின்றன. ஆனாலும் தமிழர்கள் துணிந்து நின்று போராடுகின்றனர். நட்டாற்றில் கைவிடப்பட்டாலும் துணிந்து நிற்கின்ற இந்த மக்களின் குரலாக நின்று ஒலிப்பவர்கள் வடக்கிலுள்ள தமிழ் ஊடகவியலாளர்கள். மக்களின் குரலாக மட்டுமன்றி மக்களை வழிபடுத்துபவர்களாகவும் ஊடகவியலாளர்களே விளங்குகின்றனர். இந்த வழிப்படுத்தலானது தமிழ் மக்களின் உரிமை நோக்கிய பயணத்திற்கு அவர்களைக் கொண்டு செல்கின்றது. தமிழ் மக்களை அடக்கி, அவர்களின் நிலங்களை ஆக்கிரமித்து, அவர்களை இருப்பிடம் இன்றித் துரத்துவதற்கு நினைக்கின்ற சிங்கள அரசுக்கும் படைகளுக்கும் வடக்கு ஊடகவியலாளர்கள் தற்போது சிம்ம சொப்பனமாகத் திகழ்கின்றனர். இதனால்தான் தற்போது சிங்களம் ஒட்டுமொத்தமாகத் திரண்டு வடக்கு ஊடகவியலாளர்களை இலக்குவைத்து தனது அராஜகத்தை தொடர்கின்றது.

கடந்த வெள்ளிக்கிழமையும் வவுனியா – ஓமந்தையில் இதுவே நடைபெற்றது. யாழ்ப்பாணத்தில் இருந்து ஊடகச் செயலமர்வு ஒன்றுக்காக கொழும்புக்குச் சென்ற ஊடகவியலாளர்கள் குழுவொன்று பயணித்த வாகனம் ஒன்றை மறித்துச் சோதனை என்ற பெயரில் அதற்கும் கஞ்சாவை வைத்துவிட்டு அந்த ஊடகவியலாளர்கள் தாக்கிக் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். சிறீலங்காவின் படைத்துறைப் பேச்சாளர் கூறுவது போன்று இது எதேச்சையாக நடைபெற்றது அல்ல. மிகவும் திட்டமிட்டு நடத்தப்பட்ட செயல்.

இந்தச் செயலமர்வுக்கான ஒழுங்குகள் யாழ்ப்பாணம் ஊடக அமையத்தினால் மேற்கொள்ளப்பட்டது. குறித்த ஊடகவியலாளர்கள் குழு யாழ்ப்பாணத்திலிருந்து புறப்படுவதற்கு முன்னர் யாழ்ப்பாணம் ஊடக அமையத்தின் இயக்குநருக்கு தொலைபேசி அழைப்பு ஏற்படுத்திய இனந்தெரியாத நபர்கள் சிலர், ஊடகவியலாளர்களின் பெயர்களைக் கூறி விசாரித்திருக்கின்றனர். இவர்களும் இந்தச் செயலமர்வில் கலந்துகொள்கின்றார்களா என்று விசாரணை இடம்பெற்றிருக்கின்றது. பெயர் குறிப்பிடப்பட்ட அந்த ஊடகவியலாளர்கள் பயணித்த வாகனம் இராணுவப் புலனாய்வாளர்களால் மாங்குளத்தில் வழிமறிக்கப்பட்டு ஊடகவியலாளர்களின் பெயர்கள், வாகன இலக்கம் என்பன பதிவுசெய்யப்பட்டுள்ளன.

அதன் பின்னர் அதே வாகனம் ஓமந்தைச் சோதனைச் சாவடியில் வழிமறிக்கப்பட்டு சோதனை என்ற பெயரில் அதற்குள் கஞ்சா வைக்கப்பட்டிருக்கின்றது. குறித்த ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டு ஓமந்தை காவல்துறை நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டபோது இவர்களை மாங்குளத்தில் வழிமறித்த இராணுவப் புலனாய்வுப் பிரிவு உறுப்பினர்கள் இருவரும் காவல்துறை நிலையத்தில் நின்றனர். இதன்மூலம் இது ஒரு திட்டமிட்ட செயற்பாடு என்பது வெளிப்படையாகவே தெரிகின்றது.

நிலைமை இவ்வாறிருக்க, குறித்த ஊடகவியலாளர்கள், தங்கள் வாகனத்தில் படையினரே கஞ்சா பொதியை வைத்தனர் என்றும் அதனை காவல்துறையினர் எடுத்தபோது தாங்கள் ஊடகவியலாளர்கள் என்று அறிமுகப்படுத்திய பின்னரும் தங்களை அவர்கள் தரக்குறைவான வார்த்தைப் பிரயோகத்தால் ஏசினார்கள் என்றும் முறைப்பாடு செய்ய முற்பட்டபோது காவல்துறையினர் இந்த முறைப்பாட்டை ஏற்றுக்கொள்ள மறுத்தனர். எவர் ஒருவர் தனக்கு ஏதாவது பாதிப்பு என்று முறைப்பாடு செய்யச் சென்றாலும் அந்த முறைப்பாட்டை பதிவு செய்து விசாரணை நடத்தவேண்டியது சட்டத்தை அமுல்படுத்தும் காவல்துறையினரின் கடமை. ஆனால், நாட்டில் ஜனநாயக ஆட்சியின் நான்காவது தூண் என்று வர்ணிக்கப்படுகின்ற ஊடகவியலாளர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பாக அவர்கள் முறைப்பாடு பதிவு செய்ய முற்பட்டபோது அதனை பதிய காவல்துறை மறுத்தமையானது இந்தச் சம்பவத்திலுள்ள திட்டமிட்ட தன்மையை வெளிப்படுத்துகின்றது.

மேலும், குறித்த ஊடகவியலாளர்கள் அனைத்து தடைகளையும் மீறி கொழும்புக்குச் சென்ற பின்னர் அவர்களுக்கு ஊடகச் செயலமர்வு நடத்த திட்டமிட்டிருந்த இதழியல் கல்லூரிக்கு முன்பாக சிங்களக் காடையர் கூட்டம் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளது. பயங்கரவாதிகளை வெளியேற்று, பயங்கரவாதிகளுக்கு ஊடகச் செயலமர்வு நடத்தாதே போன்ற கோசங்களுடன் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருக்கின்றது. இவைகளை நோக்குகின்றபோது சிங்கள ஆட்சியாளர்கள் தற்போது யாருக்கு பயப்படுகின்றார்கள் என்பது வெளிப்படையாகத் தெரிகின்றது. வடக்கு ஊடகவியலாளர்களை விஞ்சிக்கொண்டு தாங்கள் வடக்கில் எதையும் செய்ய முடியாது என்பது தற்போது மகிந்த அரசுக்கு தெளிவாகவே புரிந்துவிட்டது. இதனால்தான் வடக்கு ஊடகவியலாளர்களின் வால்களை ஒட்ட நறுக்கவேண்டுமென்று அரசும் படைகளும் துடிக்கின்றன.

ஆனாலும், வடக்கு ஊடகவியலாளர்கள் எதற்கும் அஞ்சாதவர்கள் என்பதை அரசு அறியாதிருக்கின்றமை அவர்களின் பேதமையாக உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர்கள் கைதுசெய்யப்பட்ட பின்னர் ஓமந்தை காவல்துறை நிலையத்தில் ஊடகவியலாளர்கள் செயற்பட்ட விதம் அவர்கள் எவருக்கும் அஞ்சாதவர்கள் என்பதை வெளிப்படுத்தியது. இரவு 9 மணிக்கு அடையாள அட்டைகளும் கையடக்கத் தொலைபேசிகளும் பறிக்கப்பட்ட நிலையிலும் தங்கள் முறைப்பாட்டை ஏற்றுக்கொள்ளுமாறும் தடுத்து வைக்கப்பட்டுள்ள சாரதியை விடுதலை செய்யுமாறும் கோரி அதிகாலை 2.45 மணிக்கு அந்த ஊடகவியலாளர்கள் ஏ-9 நெடுஞ்சாலையை மறித்து ஆர்ப்பாட்டம் செய்திருந்தனர். இது ஊடகவியலாளர்களின் துணிச்சலின் எடுத்துக்காட்டுகின்றது. மக்களுக்காக குரல்கொடுக்கும்போது எந்தத் தடைகளையும் எதிர்கொள்வதற்கு தாங்கள் தயார் என்பதை ஊடகவியலாளர்கள் அந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் மூலம் பதிவு செய்திருக்கின்றனர்.

இந்த விடயத்தில் அரசாங்கமும் படைகளும் ஒன்றை மட்டும் புரிந்துகொள்ள வேண்டும். அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுகின்ற எந்த ஒரு சமூகமும் அதற்கு எதிராக கிளர்ந்தெழுவது உலக நியதி. அந்த நியதிக்கு ஊடகவியலாளர்கள் விதிவிலக்காக முடியாது. அரசாங்கம் தொடர்ந்தும் ஊடகவியலாளர்கள் மீது அடக்குமுறையைப் பிரயோகிக்க முற்படுமாயின் அந்த ஊடகவியலாளர்கள் அனைவரும் அரசுக்கு எதிராக கிளர்ந்தெழுவார்கள் என்பதை அரசு புரிந்துகொள்ள வேண்டும். ஊடகவியலாளர்கள் நினைத்தால் ஆட்சியைக் கவிழ்க்கவும் முடியும் என்பதை மகிந்த அரசும் அவரைச் சுற்றியிருக்கின்ற சிங்களக் கடும் போக்குவாதிகளும் சிறீலங்கா படைகளும் உணர்ந்துகொள்ள வேண்டும் என்பது இங்கு சுட்டிக்காட்டப்படுகின்றது.

நன்றி: ஈழமுரசு

Tags: ,

Leave a Reply