பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவிற்கு எதிராக அமெரிக்க அரசாங்கம் யுத்தக் குற்றச் செயல் வழக்குத் தொடரக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடைபெற்று இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பிலான சம்பவங்களின் அடிப்படையில் கோதபாயவிற்கு எதிராக வழக்குத் தொடரத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
“ஜஸ்ட் சிக்கியுரிட்டி” என்ற அமெரிக்க இதழின் இணைப் பிரதம ஆசிரியர் ரயன் குட்மேன் என்பவரினால் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையில் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் தொடர்பில் அமெரிக்க காங்கிரஸ் சபையின் உறுப்பினர்களுக்கு வழங்கிய தகவல்களில் அவர் இந்த விடயங்களை சுட்டிக்காட்யுள்ளார்.
அமெரிக்கப் பிரஜையான கோதபாய ராஜபக்ஷவிற்கு எதிராக எவ்வாறு யுத்தக் குற்றச் செயல் விசாரணைகளை நடத்துவது அதற்கான சட்ட பின்னணி என்பன குறித்து ரயன் குட்மென் விபரித்துள்ளார்.
1966ம் ஆண்டு யுத்தக் குற்றச் செயல் சட்டத்தின் அடிப்படையில் கோதபாய ராஜபக்ஷவிற்கு எதிராக வழக்குத் தொடரக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
கோதபாய ராஜபக்ஷ போன்ற அமெரிக்கப் பிரஜைகளை இந்த சட்டத்தின் வழியாக தண்டிக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கோதபாய ராஜபக்ஷவிற்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதற்கு போதியளவு ஆதாரங்கள் இல்லையென்றால், அமெரிக்க நிதித் திணைக்களத்தினால் சிவில் வழக்கு ஒன்றைத் தொடர முடியும் என குட்மேன் பரிந்துரை செய்துள்ளார்.
அமெரிக்காவிற்கு வெளியே அமெரிக்கப் பிரஜை ஒருவர் வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு எதிராக மேற்கொள்ளும் கடுமையான குற்றச் செயல்களுக்கு அமெரிக்க உள்நாட்டு சட்டங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தி தண்டனை விதிக்கப்பட முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் சிவில் சட்டத்தின் அடிப்படையிலும் நடவடிக்கை எடுக்கப்பட முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவிற்கு வெளியில் அமெரிக்க பிரஜைகள் மேற்கொள்ளும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான சாட்சியங்களை மறைத்தல் அல்லது அடக்குமுறைக்கு உட்படுத்தல் தண்டனைக்குரிய குற்றச் செயலாகும் எனவும் எனவும் அந்தப் பிரிவின் அடிப்படையில் கோதபாய ராஜபக்ஷவிற்கு எதிராக வழக்குத் தொடர முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வெள்ளைக் கொடி சம்பவம் தொடர்பிலான தகவல்களை வெளிப்படுத்தக் கூடாது என கோதபாய ராஜபக்ஷ உத்தரவிட்டிருந்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தகவல்களை வெளியிட முன்வந்த முன்னாள் இராணுவத் தளபதிக்கு எதிராக பகிரங்கமாக ஊடகங்களிலும் சட்ட ரீதியிலும் கோதபாய நடவடிக்கை எடுத்திருந்தார் என குட்மேன் தெரிவித்துள்ளார்.
சாட்சியங்களை ஒடுக்குவதற்கு கோதபாய ராஜபக்ஷ எடுத்த முயற்சிகள் தொடர்பிலான திகதி வாரி தகவல்களையும் குட்மேன் தனது அறிக்கையில் இணைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதாரங்கள் தகவல்களை சுட்டிக்காட்யுள்ள குட்மேன், இறுதியில் இந்த தகவல்களின் அடிப்படையில் வழக்குத் தொடர முடியாத? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.
-Globaltamilnews
















