வடக்கு ஊடகவியலாளர்களுக்கு நடந்தது என்ன..? – தாயகத்தில் இருந்து இளங்கீரன் ஒரு சாட்சியப் பதிவு

reporters-lkதமிழின அழிப்பினை மேற்கொண்டு, அந்த இனத்தைத் தொடர்ந்தும் அடக்கி ஒடுக்கி காட்டுமிராண்டித் தனமான ஆட்சிபுரிந்து வரும் சிறீலங்கா அரசாங்கத்திற்கு தலைவலியினைக் கொடுத்துக் கொண்டிருக்கும் சர்வதேசம் மற்றும் தமிழ் அரசியல்வாதிகளினையும் விடவும், ஊடகங்களினால் கொடுக்கப்படும் அழுத்தங்களே அவர்களை அதிகம் நிலைகுலைய வைக்கின்றது.

யுத்தத்திற்கு முன்னரும், யுத்தத்தின் போதும் அல்லது யுத்தம் முடிவுற்றதாக கூறப்படும் தற்காலத்திலும் ஊடகங்களினால் ஆற்றப்பட்ட பணிகள் அளப்பெரியது. அர்ப்பணிப்பு மிக்கது. அதிலும் வடக்கு ஊடகவியலாளர்களினைப் பொறுத்தவரையில் சிறீலங்கா அரசாங்கத்தின் கழுகுப் பார்வையில் எப்போதும் கண்காணிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றார்கள்.

ஆனாலும் அவர்களை நெருங்க முடியாத அல்லது தமது பக்கத்திற்குக் கொண்டுவர சிறீலங்கா அரசாங்கத்தினால் முடியாமல் போயுள்ள காரணத்தினாலேயே அவர்கள் மீதும் பயங்கரவாத முத்திரை குத்தப்படுகின்றது. இது சிறீலங்கா அரசாங்கத்தின் இயலாமையினையே வெளிப்படுத்தி நிற்கின்றது.

அத்துடன் நாட்டில் ஜனநாயகம் நிலைகொண்டுள்ளது என்று வாய்நிறையப் பேசிக் கொள்ளும் அரசாங்கம் தனக்கு ஒவ்வாத அல்லது, பிரச்சினைகளை கொடுக்கக் கூடிய தரப்புகளை அடக்கி வைக்கவே எத்தனித்துக் கொண்டு உள்ளது. அதன் ஒரு பாகமாகவே அண்மையில் ஓமந்தைச் சோதனைச் சாவடியில் ஊடகவியலாளர்களின் மேல் திட்டமிட்டு சுமத்தப்பட்ட போதைப் பொருள் கட்டுக் கதையாகும். இந்தக் கதையினை சிறீலங்கா அரசாங்கம் நன்கு எழுதியிருந்தது. ஆனாலும் அக் கதையினை அரங்கேற்றும் போதுதான் சில பிழைகளை விட்டுவிட்டது.

கொழும்பில் கடந்த 26, 27 சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறவிருந்த செயலமர்வில் கலந்துகொள்வதற்காக யாழ்.ஊடக அமையத்தினால் கிளிநொச்சி மற்றும் யாழ்.மாவட்டங்களைச் சேர்ந்த 16 ஊடகவியலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அவ்வழைப்பின்படி கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணியளவில் யாழ்.ஊடக அமையத்தில் இருந்து கொழும்பு செல்வதற்காக தயார் செய்யப்பட்ட 2 கயஸ் வாகனத்தில் யாழ்ப்பாணத்தினைச் சேர்ந்த 13 ஊடகவியலாளர்கள் ஏற்றப்பட்டிருந்தோம்.

அதில் ஒரு வாகனத்தில் மட்டும் 7 ஊடகவியலாளர்கள் ஏறிக்கொண்டோம். நாங்கள் புறப்பட்டுச் சிறிது தூரம் பயணித்திருந்த போதே சில பொருட்களை வாங்கிக் கொள்வதற்காக யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு அருகில் உள்ள வியாபார நிலையத்தில் எமது வாகனத்தினை நிறுத்தி 2 ஊடகவியலாளர்கள் வியாபர நிலையம் சென்று தேவையான பொருட்களை வாங்கி வந்தனர். பொருட்கள் வாங்கிவரப் போன ஊடகவியலாளர்களினால் எமது வாகனத்திற்கு பின்னால் ஒரு மோட்டார் சைக்கிளில் இராணுவப் புலனாய்வாளர்கள் இருவர் நிற்பதை கண்டிருந்தனர்.

இதன் பின்னர் நாங்கள் அங்கிருந்து புறப்பட்டபோதும் அந்த இராணுவப் புலனாய்வாளர்கள் எங்கள் வாகனத்தினைப் பின்தொடர்ந்து வந்ததை எங்களால் அவதானிக்க முடிந்தது. இது தொடர்பாக எமக்கு முன்னால் சற்றுத் தொலைவில் சென்று கொண்டிருந்த வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த எமது சக ஊடகவியலாளர்களுக்கு அறிவித்திருந்தோம்.

இவ்வாறே எமது வாகனத்தினை பின்தொடர்ந்த இராணுவப் புலனாய்வாளர்களை கைதடிச் சந்தி வரைக்கும் எங்களால் அடையாளம் காணமுடிந்தது. அதன் பின்னரும் அவர்கள் எங்களுடைய வகனத்திற்கு பின்னால் வந்தார்களா? என்பது தொடர்பில் எமக்கு எதுவும் தெரியவில்லை.

எனவே நாங்கள் எமது பயணத்தினை தொடர்ந்தோம். ஆனையிறவுச் சோதனைச் சாவடியில் தற்போது எந்த வாகனமும் சோதனைக்கு உட்படுத்தப்படுவது இல்லை. இதனால் எமது பயணம் தொடர்ந்து கொண்டே இருந்தது. அப்போது இரவு 9 மணியிருக்கும் மாங்குளப் பகுதியின் ஊடாக ஏ-9 வீதியால் பயணித்துக் கொண்டிருக்கையில், வீதியில் நின்ற சீருடைய அணிந்த இராணுவக் காவல்துறையினர் ஒருவரால் எமது வாகனம் மறிக்கப்பட்டது. எமது வாகனத்தினை மறித்தவர், எமது வாகனத்திதற்கு அருகில் எதுவும் பேசாமல் நிற்க அங்கு சிவில் உடையில் வந்த சுமார் 5 நபர்கள் தமிழில் வாகனத்திற்குள் இருந்த எங்களிடம் விசாரணை செய்திருந்தனர். எங்கு செல்கின்றீர்கள்? எதற்காக செல்கின்றீர்கள்? என்ன தொழில் செய்கின்றீர்கள்? எப்போது திரும்பி வருகின்றீர்கள்? செல்லும் இடத்தில் எங்கு தங்குவீர்கள்? என்று பல கேள்விகளைத் தொடர்ச்சியாகக் கேட்டிருந்தனர்.

ஆனாலும் நாங்கள் செயலமர்விற்கு செல்கின்றோம், நாங்கள் அனைவரும் ஊடகவியலாளர்கள் என்பதை நாங்கள் எவரும் அவர்களிடம் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் வாகனத்தினை சோதனை செய்ய வேண்டும் என்று கூறி வாகனத்தினை சோதனைக்கு உட்படுத்தினர். இதன் பின்னர் எங்களுடைய அடையாள அட்டைகளை பதிவு செய்யுமாறும் கேட்டிருந்தனர். அதன்படி சிவில் உடை அணிந்த ஒருவரால் எங்களுடைய அடையாள அட்டைகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டிருந்தது. அதன் பின்னர் எமது பயணத்தினை தொடர்வதற்கான அனுமதியினை அவர்கள் எமக்குத் தந்திருந்தார்கள்.

இவ்விடையம் தொடர்பாகவும் எமக்கு முன்னால் சென்று கொண்டிருந்த சக ஊடகவியலாளர்களுக்கு அறிவித்திருந்தோம். அப்போது முன்னால் சென்ற வாகனத்தில் சென்ற சக ஊடகவியலாளர்கள் தாம் மெதுவாகச் செல்வதாகவும் விரைவாகத் தங்களுடன் இணைந்து பயணிக்க வருமாறும் எமக்குத் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் சிறிது தூரம் சென்றதும் இராணுவத்தினுடைய ஓமந்தை சோதனைச் சாவடியினைச் சென்றடைந்தோம். அங்கு எமது வாகனம் போல் பல வாகனங்கள் நின்றிருந்தன. எமது வாகனத்தின் சாரதி பதிவு மேற்கொள்வதற்காக சோதனைச் சாவடியில் உள்ள இராணுவத்தினரிடம் சென்றிருந்தார்.

இதன்போது எமது வாகனத்திற்கு வந்த 5 இராணுவத்தினரும் 3 காவல்துறையினரும் தொடர்ச்சியாக சோதனை செய்து கொண்டிருந்தனர். ஆனாலும் எமக்கு அருகில் நின்ற வாகனத்தில் இருப்பவர்களிடம் எந்தவிதமான சோதணையும் செய்யவில்லை. வழமைக்கு மாறான சோதனை செய்யப்படும் நடவடிக்கையில் மாற்றம் இருப்பதை எங்களால் அவதானித்துக் கொள்ள முடிந்தது.

இவ்வாறு சோதனை செய்து கொண்டிருக்கும்போது எமது வாகனத்திதன் பின்புறக் கதவினை திறந்து அதற்குள் இருந்த எமது உடமைகளை இராணுவத்தினர் சோதனைக்கு உட்படுத்தியிருந்தனர். இந்நிலையில் அங்கு மீண்டும் வந்த காவல்துறையினர், வாகனத்திற்குள் நுழைந்து தாம் சோதனை செய்யப் போவதாக கூறியிருந்தனர்.

இதனால் நாங்கள் அனைவரும் வாகனத்தினை விட்டு கீழே இறங்கிவிட்டோம். அப்போ அங்கு இராணுவச் சீருடையுடன் சிறிது தாடியுடனும் டோச் லைற் கொண்டு வந்த இராணுவத்தினர் ஒருவர் வாகனத்திற்குள் ஏறி சோதனை நடத்தினார். இதன்போது வாகனத்திற்குள் 2 ஊடகவியலாளர்களே இருந்தார்கள். ஏனையவர்கள் வெளியில் நின்றிருந்தார்கள். அப்போது வாகனத்திற்குள் ஏறி சோதனையிட்ட இராணுவ சிப்பாய் டோச் லைற்றினை திடீரென அணைத்துவிட்டு தனது கையில் டோச் லைற் கைபிடியுடன் மறைத்து வைத்திருந்த சிகரெட் பெட்டியினை வாகனத்தின் முன்பக்கத்தில் விழுத்திவிட்டு இறங்கிச் சென்றார்.

இதனை வாகனத்திற்குள் இருந்த 2 ஊடகவியலாளர்களும் வெளியில் நின்ற மற்றுமொரு ஊடகவியலாளரும் அவதானித்திருந்தனர். வாகனத்திற்குள் இருந்து இறங்கிச் சென்ற இராணுவ சிப்பாய் காவல்துறையினருடைய காதிற்குள்போய் ஏதோ ஓதினார். இராணுவத்தின் ஓதலை கேட்டவுடன் வாகனத்திற்குள் வந்த காவல்துறையினர் தான் வைத்த பொருளை தானே எடுத்ததுபோல் இராணுவம் விழுத்திவிட்டுச் சென்ற சிகரெட் பெட்டியினை எடுத்தார். அந்த பெட்டிக்குள் இருந்து பொலுத்தினால் பொதி செய்யப்பட்டிருந்த ஒரு சிறிய பொதியினை எமக்கு காண்பித்திருந்தார்.

அத்துடன் அந்த சிறிய பொதி கஞ்சா போதைப் பொருள் என்றும் அதனை யார் கொண்டு வந்தது என்றும் எங்களிடம் கேட்டிருந்தார். அப்போது எங்களுக்கும் கஞ்சாவிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று தெரிவித்திருந்தோம். அப்போது எங்களைப் பார்த்து ‘அப்ப நான் என்ன என்ர வாய்க்க இருந்தா கஞ்சாவை எடுத்தன்’ என்று அந்த காவல் துறையினர் கேட்டிருந்தார்.

இல்லை ‘தாடிவைத்த இராணுவ சிப்பாய் கொண்டு வந்து சிகரெட் பெட்டியினை அங்கு போட்டதும் தெரியும், அதனை எடுக்குமாறு உங்களிடம்  அவர் காதிற்குள் வந்து சொன்னதும் தெரியும், அதனை நீங்கள் வைத்த பொருளை எடுப்பது போல் உடனே வந்து எடுத்ததும் தெரியும்’ என்று கூறினோம்.

இவ்வாறு நாங்கள் கூறிக் கொண்டு இருப்பதை பார்த்த இராணுவ சிப்பாய் அங்கிருந்து ஓடிமறைந்தார். ஆனாலும் அங்கிருந்த காவல்துறையினர் தொலைபேசியூடாக ஒருவரை அங்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி அங்கு சிவில் உடை அணிந்த ஒருவர் வந்து அனைவரையும் கைது செய்யுமாறு கூறியிருந்தார்.

அப்போது எங்களுக்கும் கஞ்சாவிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று கூறியிருந்தோம். அதனை ஏற்க மறுத்த அந்த சிவில் உடையணிந்தவர், தகாத வார்த்தைகளால் எங்களை ஏசிவிட்டு அங்கிருந்து சிறிய ஓமந்தை காவல்துறை நிலையத்திற்கு அழைத்துச் சென்றிருந்தார். இதன்போது எங்களுடைய கைத்தொலைபேசிகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது. சிறிது நேரத்தில் எங்களுடைய அடையாள அட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.

இதன் பின்னர் எங்களுடைய வாகனத்திலேயே ஏறிக்கொண்ட 3 காவல்துறையினர் எங்களை ஓமந்தை பிரதான காவல்துறை நிலையத்திற்கு அழைத்துச் சென்றிருந்தார்கள். அங்கு எங்களிடம் பொரும்பான்மையாக சிங்கள மொழியில் விசாரணைகள் இடம்பெற்றது. வெற்றுப் காகிதத்தில் கையெழுத்துக்களும் வாங்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

ஆனால் அவை எதற்கும் நாங்கள் இடம் கொடுக்கவில்லை. இதனால் எங்களுடைய வாகனத்தின் சாரதியினை தாம் கைது செய்வதாக காவல்துறையினர் அறிவித்தனர். அதற்கு நாங்கள் மறுப்புத் தெரிவித்திருந்தோம். இருந்தபோதும் எங்களை அங்கிருந்து வெளியேறுமாறும் காவலதுறையினர் பணித்திருந்தனர்.

இந்நிலையில் நடைபெற்ற சம்பவத்தினை உறுதிப்படுத்தும் முகமாக முறைப்பாடு ஒன்றினை நாங்கள் பதிவு செய்யப்போவதாக காவல்துறையினரிடம் கேட்டிருந்தோம். அதற்கு அவர்களும் ஆம் என்று தலையாடடிக் கொண்டனர். ஆனால் சுமார் 4 மணித்தியாலங்கள் வரை முறைப்பாடு பதிவு செய்வதற்கு காத்திருந்தோம்.

இறுதியில் எமது பொறுமையினை இழந்த காரணத்தினாலும் காவல்துறையினருடைய பெறுப்பற்ற செயற்பாட்டினை எதிர்த்து எமக்கு நீதி வழங்கக் கோரியும் ஏ-9 வீதியினை மறித்து போராட்டம் ஒன்றினை நடத்தியிருந்தோம்.

இந்நிலையில் அங்கு வந்த காவல்துறை அதிகாரி முறைப்பாட்டினை பதிவு செய்வதாக ஒப்புக்கொண்டார். அதன்படி நாங்களும் இராணுவத்தினரால் எமது வாகனத்தில் கஞ்சா வைக்கப்பட்டது, அதனை 89,430 இலக்கத்தினை உடைய காவல்துறையினர் எடுத்ததை நாங்கள் பார்த்தாகவும் தெரிவித்து எங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கும், பொய்க் குற்றச்சாட்டில் எங்களைக் கைது செய்யக் காவல்துறையினர் முயற்சித்ததாகவும், இதற்கு நீதி வேண்டும், சம்மந்தப்பட்ட காவல்துறையினருக்கு எதிராக ஓழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கோரியும் முறைப்பாடு ஒன்றினை ஓமந்தைப் காவல்துறை நிலையத்தில் பதிவு செய்திருந்தோம்.

ஆனாலும் எமது வாகனமும், சாரதியையும் காவல்துறையினர் தடுத்து வைத்திருந்தார்கள். இதன் பின்னர் அங்கிருந்து வேறு ஒரு வாகனம் ஒழுங்கு செய்துகொண்டு கொழும்பினை நோக்கிப் புறப்பட்டிருந்தோம். சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் கொழும்பினை அடைந்திருந்தோம்.

அங்கு எமக்கு செயலமர்வு நடத்தவிருந்த ஊடகக் கல்வியற் கல்லூரிக்குச் சென்றிருந்தோம். அதன் பின்னர் மாலையில் இருந்து செயலமர்வினை ஆரம்பிப்பதாக கலந்தாலேசித்து விட்டு எமது தங்குமிடத்திற்குச் சென்றோம்.

நாங்கள் தங்குமிடம் சென்ற சில விநாடிகளில் செயலமர்வு நடத்தவிருந்த கல்லூரிக்கு முன்பாக சிங்கள அமைப்புக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்தியிருந்தனர். அவ்வார்ப்பாட்டத்தில் வடக்கில் உள்ள ஊடகவியலாளர்கள் பயங்கரவாதிகள், புலிகள் என்றும் அவர்களுக்கு பயிற்சி வழங்கக் கூடாது என்று சொல்லியும் ஆர்ப்பாட்டத்தில் கோசங்கள் எழுப்பப்பட்டிருந்தது. இதனால் எமது செயலமர்வு நிறுத்தப்பட்டிருந்தது. நாங்கள் தங்கவைக்கப்பட்டிருந்த இடத்திற்கு முன்பாகவும் புலனாய்வாளர்கள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தனர்.

ஒருநாள் பாதுகாப்புக் காரணங்களுக்காக நாங்கள் கொழும்பில் உள்ள ஒரு இடத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தோம். அதன் பின்னர் ஞாயிற்றுக்கிழமை காலை அங்கிருந்து புறப்பட்டு ஏ-9 பாதை அல்லா வேறு பாதைகள் மாற்றி மாற்றி சிறீலங்கா அரசாங்கத்தின் பார்வையில் இருந்து தப்பித்து மாலை 5.00 மணியளவில் மீண்டும் யாழப்பாணத்தினை வந்தடைந்தோம்.

நன்றி: ஈழமுரசு

Tags: , ,

Leave a Reply