விஜய்யின் ‘கத்தி’ படத்தயாரிப்பாளர் சுபாஸ்கரன் அல்லிராஜா இலங்கையில் லைகா மொபைல் சேவை உள்ளிட்ட தொழில்களை ராஜபக்ஷே ஆதரவுடன் நடத்தி வருகிறார்.
இதற்கான ஆதாரங்கள் அடுத்தடுத்து வெளியாகி பீதியைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது.
அப்படிப்பட்டவர் தயாரித்த ‘கத்தி’ படத்தை நாங்கள் எதிர்ப்போம் என்று போராட்டத்துக்கு தயாராகி வரும் அதேநேரத்தில் தமிழ்நாட்டிலும் ‘கத்தி’ படத்துக்கான எதிர்ப்பை கல்லூரி மாணவர்கள் கையிலெடுத்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னால் ‘கத்தி’ படத்தை ரிலீஸ் செய்யக் கூடாது, மீறினால் போராட்டம் நடத்துவோம் என்று மாணவர் அமைப்பினர் தயாரிப்பாளர் சங்கத்தில் எச்சரிக்கை கடிதம் கொடுத்து விட்டுச் சென்றனர்.
இந்தப் பிரச்சனையை சமாளிக்க டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் களத்தில் இறங்கி பழ.நெடுமாறன், திருமாவளவன், சீமான் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து சுபாஸ்கரன் அல்லிராஜாவைப் பற்றி விளக்கிக் கூறினர். அதில் திருமாவளவன் ‘கத்தி’ படத்தை ஆதரிக்க முடியாது என்று திருப்பியனுப்பி விட்டதாகச் சொல்லப்பட்டது.
இதற்கிடையே இந்தப் பிரச்சனையில் விஜய்யின் துணையில்லாமல் மேற்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் கையை பிசைந்து கொண்டிருந்த ஏ.ஆர்.முருகதாஸுக்கு ஆதரவாக அவர் சார்ந்த இயக்குநர்கள் சங்கம் களத்தில் இறங்கியிருக்கிறது.
இயக்குநர் சங்கத்தின் தலைவர் விக்ரமன் ‘கத்தி’ படத் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் அல்லிராஜாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் பேசியிருப்பதாவது :
விஜய்யின் ‘கத்தி’ படத்தை எடுத்து வரும் ஐயங்கரன் கருணாமூர்த்தியும், லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் அல்லிராஜாவும் இருவருமே இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள் தான். கருணாமூர்த்தி என்பவர் ஐயங்கரன் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
அவர்தான் முதன்முறையாக வெளிநாடுகளில் தமிழ்ப்படங்களை வாங்கி வெளியிட்டவர். இன்னொரு பார்ட்னர் சுபாஸ்கரன் அல்லிராஜாவும் தமிழர் தான்” என்று விளக்கம் கொடுத்திருக்கிறார் விக்ரமன்.
இதே இயக்குநர் சங்கம் தான் லிங்குசாமியின் ‘இனம்’ படத்துக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்தது. பின்னர் எதிர்ப்பு அதிகரிக்க ஆரம்பிக்கவும், இயக்குநர்கள் சங்கம் வாய் மூடி மெளனியாகி விட்டது.
ஆகவே ‘சம்பந்தப்பட்டவர்களை’ சந்தித்து பேசாதாவரைக்கும் இயக்குநர்கள் சங்கம் மட்டுமல்ல, வேறு எந்த சங்கம் சப்போர்ட்டுக்கு வந்தாலும் ‘கத்தி’யின் கூர்முனை மழுங்கத்தான் செய்யும்.
















