சிங்கள அகதிகளின் மறுவாழ்வுக்கு ஜனாதிபதி ராஜபக்ஷவின் மாபெரும் ஆடல் பாடல் நிகழ்ச்சி என்று குறிப்பிட்டு, தமிழகத்தின் பளையங்கோட்டை பகுதியில் பாரிய விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பெயருக்கு களங்கம் விளைவித்த இலங்கை அரசைக் கண்டிக்கும் வகையில் தமிழகத்தின் ஆங்காங்கே இவ்வாறான வித்தியாசமான சுவரொட்டிகளும் விளம்பர பலகைகளும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இலங்கை பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் தமிழக முதல்வரின் பெயருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.
தமிழக மீனவர்கள் விடுதலை தொடர்பாக ஜெயலலிதா, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதுவதை வேறு வகையில் திரித்து இழிவாக அந்தக் கட்டுரை எழுதப்பட்டிருந்தது.
இதற்கு கண்டிக்கும் வகையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
நேற்றைய தினம், “தாயே என்னை மன்னித்து விடுங்கள். நான் பிழை செய்துவிட்டேன்” என்று இலங்கை ஜனாதிபதி தமிழக முதல்வரிடம் கோருவதைப் போன்ற சுவரொட்டிகள் தமிழகத்தின் கோயம்புத்தூரில் காணக்கூடியதாக இருந்தன.
இந்த நிலையில், சில்க் ஸ்மிதாவுடன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நடனமாடுவது போல் பாளையங்கோட்டையில் பாரிய விளம்பரம் பலகை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
“சிங்கள அகதிகளின் மறுவாழ்வுக்கு அதிபர் ராஜபக்சவின் மாபெரும் ஆடல் பாடல் கலை நிகழ்ச்சி” என அந்த அதில் எழுதப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வாழ் சிங்களவர்கள் சங்கம் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருப்பதாகவும், அதன் பதிவு எண் என 420 குறிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆடல் பாடல் கலை நிகழ்ச்சிக்கான டிக்கெட் அனைத்து இலங்கைத் தூதரகங்களிலும் கிடைக்கும் என இந்த விளம்பரத்தில் கூறப்பட்டுள்ளது.
விளம்பர உதவி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் – பானை பகுதி கழகம் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்திகள் இந்திய ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன.
















