ஜெயலலிதா குறித்த அவதூறு கட்டுரைக்கு வருத்தம் தெரிவித்தார் ராஜபக்சே!

Mahinda-Rajapaksaதமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பற்றி இலங்கை பாதுகாப்புத்துறை அமைச்சக இணையதளத்தில் வெளியான கட்டுரைக்கு அந்நாட்டு அதிபர் ராஜபக்சே வருத்தம் தெரிவித்துள்ளார்.
இந்த கட்டுரை வெளியானது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதும், சிறை பிடிக்கப்படுவதுமாக உள்ள தமிழக மீனவர்கள் பிரச்னைகள் குறித்து தமிழக முதல்வர், பிரதமர் மோடிக்கு கடிதங்கள் எழுதி வருகிறார். இதை விமர்சித்து, இலங்கை பாதுகாப்புத்துறை இணையதளத்தில் அவதூறாக கட்டுரை வெளியிடப்பட்டது. இதனால் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. இலங்கை அரசுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன. இலங்கை அரசை கண்டித்து ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டன.

முதலமைச்சர் ஜெயலலிதாவும், இலங்கை தூதரை நேரில் அழைத்து கண்டிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார். இதையடுத்து, இலங்கை அரசு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டதோடு, அந்த கட்டுரையையும் இணையதளத்தில் இருந்து நீக்கியது.

இந்நிலையில், இந்த பிரச்னையை நேற்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அ.தி.மு.க. கிளப்பியது. அதற்கு பதில் அளித்த வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், மத்திய அரசு இலங்கை தூதரை அழைத்து தனது கண்டனத்தை தெரிவிக்கும் எனக் கூறினார்.

அதன்படி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் டெல்லியில் உள்ள இலங்கை தூதர் சுதர்சன் சேனவிரத்னேவுக்கு சம்மன் அனுப்பி நேரில் அழைத்தது. அதனைத்தொடர்ந்து வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் இலங்கை விவகாரங்களை கவனிக்கும் இணைச் செயலாளர், மேற்கூறிய அவதூறு கட்டுரை தொடர்பாக நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் வெளிப்படுத்திய கோபத்தையும் சுதர்சன் சேனவிரத்னேயிடம் எடுத்துக்கூறி இந்தியாவின் கண்டனத்தை தெரிவித்தாக வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: , ,

Leave a Reply