பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் இயக்கத்தில் பாக்யராஜ் நடிப்பில் வெளியான படம் இது நம்ம ஆளு.
1988 ஆம் ஆண்டு இது நம்ம ஆளு படம் வெளியானபோது, ‘பிராமணர்களை இழிவுபடுத்துவதாக’ கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதோடு, பிராமண சமூகத்தினர் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்ப்பையும் உண்டாக்கியது – இது நம்ம ஆளு படம்.
பிராமணர்களை நக்கலடித்து எடுக்கப்பட்டதால் இது நம்ம ஆளு படம் வெளியாகும் நேரத்தில் பிராமணர்கள் மத்தியில் இப்படி ஒரு பிரச்சனை ஏற்படும் என்பதை முன் கூட்டியே மிகத்துல்லியமாக கணித்துவிட்டார் பாக்யராஜ்.
எனவே, படு புத்திசாலித்தனமாக ஒரு காரியத்தை செய்தார்.
அதே சமூகத்தை சேர்ந்த எழுத்தாளர் பாலகுமாரனை இது நம்ம ஆளு படத்தின் இயக்குநராக்கியதுதான் பாக்யராஜ் செய்த புத்திசாலித்தனமான காரியம்.
பிராமணரான பாலகுமாரன் இயக்கியதால் இது நம்ம ஆளு படத்துக்கு ஏற்பட்ட எதிர்ப்பு சில நாட்களிலேயே அடங்கிப்போனது.
இதெல்லாம் பாக்யராஜின் இது நம்ம ஆளு படத்தைப் பற்றிய பழைய தகவல்கள்…!
சரியாக 25 வருடங்களுக்குப் பிறகு இது நம்ம ஆளு என்ற பெயரில் தற்போது ஒரு படம் தயாராவதும், அதில் சிம்பு கதாநாயகனாக நடித்து வருவதும் கூட பழைய தகவல்தான்.
பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் இந்தப் படம் சில மாதங்களுக்கு முன் பரபரப்பாக தொடங்கப்பட்டது.
சிம்பு உடன் நயன்தாரா மீண்டும் இணைந்து நடிக்கிறார் என்பதை வைத்து ஓசி விளம்பரத்தில் குளிர் காய்ந்தனர்.
இது நம்ம ஆளு படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் நடைபெற்றநிலையில், சிம்புவின் முரண்டு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், வரும் 18 ஆம் தேதி முதல் மீண்டும் இது நம்ம ஆளு படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது.
இது நம்ம ஆளு படத்துக்கு தற்போது மிகப்பெரிய எதிர்ப்பு உருவாகி வருகிறது.
பெண்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் இது நம்ம ஆளு படத்தின் தலைப்புக்கு எதிராக துடைப்பத்தை தூக்கி உள்ளனர்.
”இது என்பது ஆடு, மாடு போன்ற மிருகங்களைக் குறிக்கும் அஃறிணை சொல். அந்த வார்த்தையைக் கொண்டு பெண்களை குறிப்பதுபோல் இது நம்ம ஆளு என்ற தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். தலைப்பை மாற்ற வேண்டும். இதே தலைப்புடன் படம் திரைக்கு வந்தால் தியேட்டர்களில் படத்தை திரையிட முடியாத அளவுக்கு போராட்டம் நடத்துவோம்”
என்று கொந்தளிக்கும் பெண்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள், இது நம்ம ஆளு என்ற தலைப்பை மாற்றச்சொல்லி விரைவில் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல இருக்கின்றனர்.
இந்த போராட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளை களத்தில் இறக்க வேண்டும் எண்ணத்தில் மாணவிகளை ஒருங்கிணைத்து வருகிறார்கள்.
இது நம்ம ஆளு தலைப்பு விவகாரத்தை பெண்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் கையில் எடுத்திருப்பதால் சிம்பு படத்துக்கு சிக்கல்தான்.
















